முதலாளி இரவு கடையை அடைக்க நேரமாகி விட்டது. அவசர அவசரமாய் பணத்தை எடுத்து மேசை மேல் வைத்து வரிசைப் படுத்தி அடுக்கிக் கொண்டிருந்தார். பூட்டும் நேரத்திலும் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் வரவும் போகவும் இருக்கவே, அவர்களிடம் பணத்தை வாங்குவதும் எண்ணி அடுக்குவதுமாய் இருந்தார். குமரேசன் மேலிருந்து கீழிழுக்கும் கதவை பாதி இழுத்த நிலையில் பூட்டுவதற்காக முதலாளியைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தான். முதலாளி கவனிக்காத நேரத்தில் இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று மட்டும் மின் விசிறி காற்றுக்கு பறந்து மேசையின் அடியில் சென்று விட்டது. குமரேசன் அதை கவனித்து விட்டான். முதலாளியிடம் கூற எத்தனித்தவனுக்கு வாய் வரை வந்த வார்த்தை வாய்க்கு வெளியே வரவில்லை. கடைசி வாடிக்கையாளரும் சென்றவுடன் பணத்தை பையில் வைத்துக் கொண்ட முதலாளி குமரேசனை பூட்டச் சொன்னார்.
குமரேசன் சொந்தமாய் சாக்கு பை வாங்கி விற்கும் சிறு தொழில் செய்து கொண்டிருந்தான். தொழிலில் வருவாய் பற்றாக்குறை ஏற்படவே, அந்த தொழில் சார்ந்த அறிமுகத்தில் மாரிமுத்துவின் தீவனக்கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டான். பெரிய சம்பளம் இல்லாவிட்டாலும் அப்போதைய குடும்ப தேவைகளை நிறைவு செய்யுமளவுக்கு வருகிறது. மனைவி துண்டுக்கு முடி போடும் வேலையை வீட்டிலிருந்தே செய்து சிறிதளவு வருவாய் ஈட்டி வருகிறாள். இரண்டு மகன்களும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். குமரேசனின் அம்மாவும் உடன் இருக்கிறார். மூன்று அறைகள் கொண்ட சின்ன ஓட்டு வீட்டில் குடியிருக்கிறான். குமரேசனுக்கு இரவு படுக்கையில் ஒரே சிந்தனை. மேசைக்கடியில் விழுந்தது ரூபாய் தாள் தானா இல்லை வேறு எதாவது வெற்றுத் தாளாய் இருக்குமா என்ற சிந்தனை. அது உண்மையில் ரூபாய் தாளாய் இருந்தால்? அந்த இரண்டாயிரம் ரூபாயை எப்படி யாருக்கும் தெரியாமல் எடுப்பது. யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது. பெரும்பாலும் முதலாளி கடையிலேயே தான் இருப்பார். அவர் இல்லாவிட்டாலும் தன்னுடன் வேலை பார்ப்பவன் இருப்பானே.
சரி எப்படியும் காலையில் அந்தப் பணத்தை எடுத்துவிடுவது என தீர்மானித்தான். அந்த இரண்டாயிரம் ரூபாயில் முதலில் மளிகைக் கடைக்காரனுக்கு குடுக்க வேண்டிய அறுநூற்றி முப்பது ரூபாயைக் கொடுத்து அவன் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தவிர்த்துவிட வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாளில் சம்பளம் வந்துவிடும். ஆனாலும் மளிகைக் கடைக்காரன் அது வரை பொறுக்கமாட்டான். கையிருப்பு இல்லை. பெரியவனுக்கு இரண்டு மூன்று ஜட்டியும், சின்னவனுக்கு செருப்பும் வாங்கிடலாம். அவளுக்கு இந்த இரண்டு நாளுக்கு கை செலவுக்கு கொஞ்சம் காசு குடுத்திடனும். கையில காசில்லாத நேரங்களில் அவள் பார்க்கும் பார்வை ஏளனமாய் தெரிகிறது. மிதிவண்டியை முழுதாய் பழுது பார்த்துவிட வேண்டும். இந்த வாரம் ஆட்டுக்கறி வாங்கிச் சாப்பிடனும். இப்படி அந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏகப்பட்ட மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.
காலையில் கால் மணி நேரம் முன்னதாகவே கடைக்கு வந்துவிட்டான் குமரேசன். அந்தக் கடையில் குமரேசனைத் தவிர மற்றுமோர் இளைஞனும் வேலை செய்கிறான். முதலாளி வந்ததும் சாவியை வாங்கி கடையைத் திறந்தான். முதலாளி கடையைக் கூட்டி சுத்தம் செய்யும் வரை வெளியில் நிற்பது வழக்கம். குமரேசன் உள்ளே சென்று மூலையில் இருக்கும் விளக்கமாறை எடுத்து கடைசியில் இருந்து முன் பக்கமாக கூட்டி வந்தான். முன் பக்கம் கல்லாபெட்டி அருகே வந்ததும் கவனமாக குனிந்தபடி கூட்டினான். யாரும் பக்கத்தில் இல்லை. ஆனாலும் கையை மேசைக்கடியில் நுழைத்து பணத்தை எடுக்க துணிச்சல் வரவில்லை. பணம் இருக்கும் இடத்தைத் தவிர மற்ற இடங்களுக்குள் விளக்கமாறை நுழைத்து பெருக்கினான். அங்கே தாள் இருப்பதை உறுதி செய்து கொண்டான்.
இருந்தாலும் அவனுக்கு அது ரூபாய் தாள் தானா என்னும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அன்று பகல் முழுதும் முதலாளி அந்த பணத்தை தேடுவாரா, கணக்குப் பார்த்து கண்டு பிடிப்பாரா என ஐயம் தோன்ற வேலை செய்தவாரே முதலாளியை கவனித்துக் கொண்டே இருந்தான். முதலாளியின் முகத்தில் பணம் காணாமல் போனதாகவோ, கணக்கு விடுபட்டு தேடுவதாகவோ ஒரு அறிகுறியுமில்லை. இன்று இரவு கிளம்புவதற்குள் எப்படியாவது அந்தப் பணத்தை மேசையின் அடியில் இருந்து எடுத்து விட வேண்டுமென தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். கடை பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்ததால். குமரேசனால் அந்த மேசையின் அருகில் கூட அன்று இரவு வரை நிற்க முடியவில்லை. இரவு வழக்கம் போல் பூட்டி சாவியை முதலாளி கையில் கொடுத்துவிட்டான். திரும்ப வீடு வரும் வரை குமரேசனுக்கு மேசைக்கடியில் இருக்கும் பணத்தின் மீதே சிந்தனை நிறம்பியிருந்தது.
அடுத்த நாளும் குமரேசன் கால் மணி நேரம் முன்னதாகவே கடைக்கு வந்து காத்திருந்தான். முதலாளி வந்ததும் சாவியை வாங்கி கடையைத் திறந்ததும், உடன் வேலை பார்க்கும் இளைஞன் உள்ளே சென்று கூட்டுவதற்கு விளக்கமாறை கையில் எடுத்தான். வேகமாக உள்ளே சென்ற குமரேசன் தானே கூட்டுவதாகக் கூறி விளக்கமாற்றை கேட்டான். நேத்து நீங்க கூட்டினீங்க இன்னைக்கு நான் தான் கூட்டனும் என்று சொன்னான் அந்த இளைஞன். ஆளுக்கு ஒரு நாள் மாறி மாறி கூட்டுவது வழக்கம். குமரேசன் விளக்கமாற்றை கையில் பிடித்துக் கொண்டு இந்த வாரம் நானே கூட்டறேன் அடுத்த வாரம் நீ கூட்டு என்று பிடிங்கிக் கொண்டான். அந்த இளைஞனுக்கு ஒன்னும் புரியவில்லை. குமரேசனையே உற்றுப் பார்த்தான். குமரேசன் கூட்ட ஆரம்பிக்கவே அந்த இளைஞன் கடைக்குள்ளேயே ஒதுங்கி நின்று கொண்டான். கல்லாபெட்டியிடம் கூட்டிக் கொண்டு வந்த குமரேசன் கீழே மண்டியிட்டு குனிந்து பார்த்தபடி கூட்டினான். அந்தத் தாள் அங்கேயே தான் இருந்தது. குனிந்தபடியே பின்னோக்கிப் பார்த்த குமரேசன் அந்த இளைஞன் தன் பின்னால் இருப்பதைக் கண்டதும். பணத்தை எடுக்கும் துணிச்சல் வரவில்லை. இத்தனைக்கும் அந்த இளைஞன் குமரேசனைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
மதியம் உணவு இடைவேளை மாரிமுத்து சாப்பிட வீட்டுக்கு சென்று விட்டார். குமரேசனை அந்த இளைஞன் சாப்பிட அழைத்தான். வழக்கமாக இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவர். குமரேசன் தனக்குப் பசியில்லை நீ சாப்பிடு என்று கூறி நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்தான். அந்த இளைஞன் தான் மட்டும் அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பசியும் பதட்டமும் குமரேசனுக்கு கால்கள் நிலைகொள்ள விடவில்லை. ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் வரப்போக இருக்க நேரம் கடந்து கொண்டிருந்தது. முதலாளி அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார். கடை இளைஞன் கையைக் கழுவ பாத்திரங்களுடன் வெளியே சென்றான். குமரேசன் ஒரு வாடிக்கையாளருக்கு தீவனத்தை அளந்து போட்டுக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர் தீவனத்தை வண்டியில் வைக்கச் சொல்ல. மூட்டையை எடுத்து வண்டியில் வைத்தவன் தூரத்தில் முதலாளி வருவதை கவனித்து விட்டான். இனி தாமதிக்க நேரமில்லை. வேகமாய் கடைக்குள் சென்றவன் படாரென மண்டியிட்டு கையை உள்ளே நுழைத்து அந்த தாளை எடுத்து கால் சட்டைக்குள் திணித்துக் கொண்டான்.
குமரேசன் சாப்பிட உட்காரும் பொழுது மதியம் ஏறகுறைய மூன்று ஆகியிருந்தது. குமரேசனுக்கு பாதி சாப்பாட்டுக்கு மேல் உள்ளே இறங்கவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டு கை கழுவிக் கொண்டான். அன்று கடையை அடைக்கும் வரை கால் சட்டையில் இருக்கும் பணத்தை கையில் எடுத்துப் பார்க்கவில்லை. கால் சட்டைப் பையில் கையை நுழைத்தாலே அவனுக்கு கை நடுங்கியது. அவ்வப்பொழுது தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தான். வீட்டுக்கு கிளம்பும் வரை அடிக்கடி தன் முதலாளியின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இயல்பு நிலையிலேயே இருந்தார். ஆனால் குமரேசனுக்கு அந்த இரண்டு நாளும் தன்னுடைய இயல்பிலேயே இல்லாமல் அச்சம் கலந்த பதட்டத்துடனேயே இருந்தான்.
இரவு கடையை மூடியதும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினான். வழியில் ஆர்வம் தாங்கவில்லை. ஒரு மின் கம்பத்தில் அடியில் மிதிவண்டியை நிறுத்திவிட்டு கால் சட்டைப் பையில் கையை விட்டு சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு தன்னை யாரோ கவனிப்பது போலவே தோன்ற, மீண்டும் வீட்டை நோக்கி கிளம்பினான். அவன் குடியிருப்பது ஆறு வீடுகள் கொண்ட வரிசைக் குடியிருப்பில் மூன்றாவது வீடு. அந்த நடைபாதையில் நுழைந்ததும் முன் வீடுகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து தன் வீட்டு வாசலுக்கு வெளியில் அமர்ந்து மனைவி துண்டுக்கு முடிபோட்டுக் கொண்டிருந்தாள். அவர்களிடம் நின்று கூட பேசாமல் அவன் வீட்டு அருகில் மிதிவண்டியை நிறுத்தி விட்டு சட்டென்று உள்ளே சென்று விட்டான். வீட்டைப் பெருக்கிகொண்டிருந்த அவன் அம்மா ஏதோ சொல்ல அவன் காதில் விழவில்லை.
உள்ளே சென்றவன் கை கால்களைக் கூட கழுவாமல் நேரே படுக்கை அறைக்குச் சென்றான். படுக்கை அறையில் கட்டில் மேல் மகன்கள் இருவரும் வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று கால் சட்டைப் பையில் இருந்த தாளை வெளியே எடுத்தான். ஆம் அது உண்மையிலேயே இரண்டாயிரம் ரூபாய் தாள் தான். ஒரு முறைக்கு இருமுறை தாளை திருப்பித் திருப்பி பார்த்து உறுதி செய்து கொண்டான். மீண்டும் ரூபாய் தாளை சட்டைப் பையில் வைத்துவிட்டு, துணிகளைக் களைந்து சட்டைகள் மாட்டியிருக்கும் கொக்கியில் மாட்டினான். அவனுக்கு கடையில் படபடக்க ஆரம்பித்த இருதயமும் நெஞ்சு அழுத்தமும் இன்னும் குறையவில்லை. நிதானம் குறைந்தவனாய் கொக்கியில் மாட்டியிருந்த லுங்கியை எடுக்க மாட்டியிருந்த துணிகள் கீழே விழுந்தன. விழுந்த துணிகளை கொத்தாக எடுத்து ஒவ்வொன்றாய் மாட்டினான். இரண்டை மாட்டினால் ஒன்று விழ குமரேசனுக்கு சரியான எரிச்சல்.
துணிகளை மாட்டிவிட்டு மூட்டிய லுங்கிக்குள் காலைத்தூக்கி உள்ளே விட முயற்சிக்க, பெரு விரல் லுங்கியின் நுனியில் மாட்டி ஒற்றைக் காலில் குதித்துக் குதித்து தடுமாறி சரி செய்து கட்டினான். லுங்கியை இடுப்பில் சுருட்டிக் கட்டிக் கொண்டு வெளியே வந்து கடைசியில் இருக்கும் வரிசை வீடுகளின் பொதுக் குளியலறைக்குச் சென்றான். கோப்பையில் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிப்பதற்கு பதிலாக தலையில் ஊற்றிக் கொண்டான். சட்டென தலையை குனிந்து கொள்ள தலையில் இருந்து தண்ணீர் வடிந்தது. குனிந்தபடியே மீண்டும் ஒரு கோப்பை தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டு அணிந்திருந்த லுங்கியிலேயே தலையைத் துவட்டிக் கொண்டான். ஒரு நிமிடம் சிந்தித்தவாறே நின்றிருந்தவன் குளியலறையில் இருந்து வெளியேறி வீட்டுக்குள் சென்றான்.
உள்ளே சென்ற குமரேசன், கொக்கியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு லுங்கியுடன் வீட்டிலிருந்து மளிகைக் கடையை நோக்கிச் சென்றான். மளிகைக் கடை பாக்கியைக் கொடுத்துவிட்டு பஜ்ஜி மாவு வாங்கி வந்து பஜ்ஜி போடச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டே கடை வரை நடந்தவன். சட்டைப் பையில் கையை விட கையில் ஒன்றும் தட்டுப்படவில்லை. சட்டைப் பை காலியாய் இருந்தது. ஒரு நிமிடம் குமரேசனுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. சட்டையில் மீண்டும் மீண்டும் கையைவிட்டு துலாவி லுங்கியை உதறிப்பார்த்தான். நின்ற இடத்தில் காலைச் சுற்றி சுற்றிப் பார்த்தான். பணத்தைக் காணவில்லை. விறுவிறுவென்று வந்த வழியில் தலையைக் குனிந்தபடியே அங்குலம் அங்குலமாய் தேடிக்கொண்டே வீடு வரை வந்துவிட்டான்.
நேரே வீட்டின் உள் நுழைய எதிரில் நூல்கண்டுடன் பக்கத்து வீட்டு பெண் குமரேசன் வீட்டிலிருந்து வெளியேறினாள். குமரேசன் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை குனிந்து தேடியபடியே சட்டை மாட்டும் படுக்கை அறை வரை சென்று கீழே தேடினான். பணம் கிடைக்கவில்லை. குமரேசனுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆயிற்று. பதட்டத்தின் உச்சத்திற்கே சென்றான். சட்டென திரும்பி தன் மகன்கள் இருவரையும் சிறிது நேரம் பார்த்தான். தன்னை அப்பா பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அவர்கள் குமரேசனை நிமிர்ந்து பார்த்தார்கள். குமரேசன் நெற்றி சுருங்க அவர்களையே பார்க்க, புரியாதவர்களாய் குனிந்து கொண்டார்கள். யோசித்தபடியே முன் அறைக்கு வர, குமரேசனின் அம்மா சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி சுருக்குப் பையைத் திறந்து வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டிருந்தாள். அம்மாதானே நாம் வரும்பொழுது வீட்டை பெறுக்கிக் கொண்டிருந்தாள் என்று எண்ணியவாறு அவள் பின்னாலிருந்து கவனித்தான். அவள் சுருக்குப் பையில் இருந்து வெற்றிலையுடன் ஒரு ஐந்து ரூபாய் தாளும், நான்கைந்து சில்லரைக் காசுகளும் கையில் வர, வெற்றிலையை மட்டும் எடுத்துக் கொண்டு காசுகளை உள்ளே போட்டு பையை இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
வீட்டைவிட்டு வெளியே வந்த குமரேசன் தன்னை கவனிக்காமல் அமர்ந்திருந்த மனைவியை வெறித்துப் பார்த்தான். அவளிடம் கேட்டுவிடலாமா என தோன்றியது. ஆனால் அவளிடம் எதுவும் கேட்காமல் நேரே சமையலறைக்கு சென்ற குமரேசன் அங்கிருந்த டப்பாக்களை சத்தமில்லாமல் ஒவ்வொன்றாய்த் திறந்துப் பார்த்தான். பணம் சிக்கவில்லை. இப்போது அவனுக்கு வீட்டிலிருந்து நூல்கண்டை எடுத்துச் சென்ற பக்கத்து வீட்டுப் பெண் சடாரென நினைவுக்கு வந்தாள். விருட்டென வெளியே வந்த குமரேசன் அந்தப் பெண் வீட்டைப் பார்த்தபடி இவன் வாசலில் நின்று கொண்டு சிந்தித்த வண்ணம் இருந்தான். அப்பெண் அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து இவன் மனைவி அருகில் அமர்ந்தாள். தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்த அப்பெண் நிமிர்ந்து குமரேசனைப் பார்க்க. குமரேசன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த அப்பெண் குமரேசனைப் பார்த்ததும் சிரித்தாள். ஆனால் குமரேசன் இறுகிய முகத்துடன் அப்பெண்னை உற்றுப் பார்க்க குழப்பத்துடன் அப்பெண் திரும்பிக் கொண்டாள். இவையனைத்தும் சில மணித்துளிகளிலேயே நடந்து முடிந்து.
திரும்ப வீட்டின் உள் சென்ற குமரேசன் சட்டை மாட்டும் இடத்தில் ஒரு கையை சுவற்றுக்கும் ஒரு கையை இடுப்புக்கும் குடுத்தபடி சிறிது நேரம் நின்றவன். நிமிர்ந்து சட்டை மாட்டியிருக்கும் கொக்கியை பார்க்க அவன் அன்று வேலைக்கு போட்டுச் சென்ற சட்டை மாட்டியிருந்தது. அடுத்த வினாடி மாட்டியிருந்த சட்டையை எடுத்து, சட்டைப் பையில் கையை நுழைக்க அந்த இரண்டாயிரம் ரூபாய் தாள் கையில் வந்தது. அவனுக்கு இருந்த மனநிலையில் தவறுதலாக சட்டையை மாற்றி அணிந்து சென்றிருந்தான். கையில் அந்த இரண்டாயிரம் ரூபாய் தாளை இறுக்கிப் பிடித்தபடி அப்படியே விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறினான்.
அடுத்த நாள் கடையை பூட்டும் போது குமரேசனை அழைத்த முதலாளி அந்த மாத சம்பளப் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய குமரேசன், அண்ணா இரண்டாயிரம் ரூபாய் தாளாய் குடுக்கறீங்களா என கேட்க. கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு அதற்கு பதில் இரண்டாயிரம் ரூபாய் தாளாய்க் கொடுத்தார். கையில் வாங்கிக் கொண்ட குமரேசன் பணத்தை எண்ணிக் கொண்டே திரும்பி நடந்தான். நான்கடி தூரம் நடந்தவன், திரும்பி முதலாளி மாரிமுத்துவின் கண்களைப் பார்த்து அண்ணா இரண்டாயிரம் ரூபாய் அதிகமா குடுத்துட்டீங்க எனக் கூறி மொத்தப் பணத்தையும் அவர் கையில் கொடுத்தான். வாங்கி எண்ணிப்பார்த்த முதலாளிக்கு குழப்பம். சரியாய் தானேபா கொடுத்தேன் என கூறிக்கொண்டே மீண்டும் இரண்டு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, ஒன்னோடு ஒன்னு ஒட்டியிருந்துருக்கும்னு நினைக்கறேன்பா என்று கூறி இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை குமரேசனிடம் கொடுத்தார். அடுத்த நாள் முதல் குமரேசன் அங்கு வேலைக்கு வரவில்லை. குமரேசனை மிதிவண்டியின் பின்னால் சாக்குப் பையுடன் கடைவீதியில் பார்த்ததாக முதலாளியிடம் கடையில் வேலை பார்க்கும் இளைஞன் கூறினான்.
--ஆரன் 10.07.2021
0 comments:
Post a Comment