ஏன் ஆயா இங்க வந்திங்க?...
அப்படீன்னு நா ஒரு தடவ கேட்டேன். இன்னமும் எங்க ஆயா சொன்னது நெனப்புல இருக்குது.
எஞ்சாமி நீங்கலாம் இங்க பொறப்பைங்கன்னு அந்த சின்னாயி பெரியாயி தான் அனுப்பி வச்சான்னு மேவறம் எங்க குல சாமி இருக்குற தெசையக் காட்டுச்சு. அப்ப எனக்கு பத்து வயசு தான் இருக்கும்.
உண்ணம்மாள், எங்கப்பனுக்கு பெரியம்மா. அதாவது எங்க அப்பத்தாவோட கூடப் பொறந்த அக்கா. எங்கப்பத்தாவுக்கு பத்து வயசு மூத்தது. சின்ன வயசிலேயே தாழியறுத்துட்டா. எங்கப்பா சிறு வயசா இருக்கும் போதே இங்க வந்துட்டதா சொல்லுவாங்க. உண்ணமாயாவுக்கு குழந்தை குட்டி எதுவும் கிடையாது. அதுக்கு எல்லாமே நாங்க தான். உண்ணம்மாயாவுக்கு கட்டிக் குடுத்த ஊரில புருசன் வகையில கொஞ்சம் நெலம் இருப்பதா பேச்சு. ஒன்னு ரெண்டு தடவ சொந்த ஊருக்கு போயிருக்கிறா. இப்பயெல்லாம் கீழ் பவானி பாசன வாய்க்காலுக்கு அந்த புறம் என்ன இருக்குதுன்னே உண்ணமாயாவுக்குத் தெரியாது. தோட்டமே கதின்னு பொழப்ப ஓட்டீட்டா.
நாங்க பேரப் புள்ளைங்க பூங்காயா.. பூங்காயா ன்னு தான் கூப்புடுவோம். பூங்காவனம் என்பது உண்ணம்மா ஆயாவோட பட்ட பேரு. வேற யாராவது அந்தப் பேர சொல்லி கூப்புட்டா ஆயாவுக்கு பயங்கர கோவம் வந்துடும். ஏன்னு தெரியில. அப்புறம் வாயில வர வார்த்த காதைப் பொத்திக்கனும். ஒல்லியான ஒடம்பு. வயசாயிடுச்சு. கொஞ்சம் நிறம். சுத்தமா நரச்ச முடி. சோத்தாங்கை தோள்பட்டையில இருந்து மணிக்கட்டுக்கு மேல வரைக்கும் வெத்தலக் கொடி பச்சை குத்தியிருக்கும். வெள்ளைப் சீலையும் பாவாடையும், ஒரு மாரை மட்டும் மறச்ச முந்தானி. மாராப்பு போட்டுக்கற பழக்கமில்லை, இது தான் எங்க உண்ணம்மா ஆயா. எங்களுக்கு ஏன் அந்த முகம் பிடிச்சிருந்துன்னு தெரியலை. ஆனால் உண்ணமாயாவ எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
இப்ப தோட்டத்துல அப்பத்தாவும், உண்ணம்மாயாவும் மட்டுந்தான் இருக்காங்க. மவனுங்க ரெண்டு பேரும் பக்கமாதான் கிராமத்துக்கு குடி போனாங்க. பத்து ஏக்கரா தோட்டத்துக்கு நடுவ பாறை மேல வடக்க பாத்த ஒரே ஓட்டு வீடு. பாதி மரக்கதவு போட்ட வீடாவும், பாதி திறந்த ஆசாரமாகவும் இருக்குற தோட்டத்து வீடு. பக்கத்திலேயே கிழக்க பாத்து மூட்டையெல்லாம் அடிக்கி வைக்க ஓட்டு வீடும் இருக்கும். வீடு பாறை மேட்டு மேல இருக்கறதால அங்கிருந்தே தோட்டத்தை பூரா பாத்துக்க முடியும். அக்கம் பக்கத்திலைலாம் வீடுங்க கெடையாது. பக்கத்து காட்டுக்காரங்க எல்லாம் தெனமும் காலையில வந்துட்டு சாயங்காலம் கிராமத்துக்கு போயிருவாங்க. ஒன்னு ரெண்டு சைக்கிளு தான் தூரத்தில வாய்க்கா கரையில போகும். காக்கா குருவி, ஆடு மாடுங்க சத்தத்த தவர ஒரு சத்தமும் இருக்காது.
இன்னிக்கி நான் பார்க்கற தோட்டம் ஒரு போகமோ, இரண்டு போகமோ வெளயிது. இப்பவும் யாராவது தோட்டத்துக்கு போனாங்கன்னா வயல்ல மேயர ஆட்ட புடிச்சி ஒரு தொட்டாச்சில பால கறந்து ஆட்டுப் பால் காபி போட்டுத்தரும் எங்க ஆயா. பழைய காளைங்க ஒரு சோடி வைக்கப்போர்ல கட்டி இருக்குது. ஆயாங்க ரெண்டு பேரும் ஆடு மேய்க்கறது தான் அன்னாடம் வேலை. நாலஞ்சு கோழிங்க மேயிது. இருக்கறத வெச்சி பொழப்ப ஓட்டிகிட்டு இருக்காங்க. இப்பெல்லாம் மானம் ஏமாத்திப்புடுது, இந்த பக்கமெல்லாம் செரியா வெவசாயம் பண்ண லாக்கிப்படுலைன்னு நெலமய கதகதயா சொல்லுவாங்க. இப்ப இருக்கற நெலைல தோட்டத்த பாத்தா பட்டணத்துக்காரங்களுக்கு புடிக்கும். ஆனா இதே பல வருசத்திக்கு முன்ன நாங்க இங்க சின்னப் பசங்களா இருக்கும் போது பாத்த, அனுவவிச்ச தோட்டமே வேற.
வீட்டுக்கு கெழக்க தென்னந்தோப்பும், நடுவ மாமரங்க, கொய்யா மரங்க பட்டம் மாறாம காய்க்கும். வீட்டுக்கு வடக்க அறுவது பங்கு தோட்டமும், வீட்டுக்கு தெக்க நாப்பது பங்கு தோட்டமும் இருக்கும். அப்பறம் வீட்டுக்கு மேக்க பாற நெடுவ போயி, முடிவுல பாறக்குழி (பாளி) இருக்கும். பாளியில பாசி பூத்து உரம்புத் தண்ணீ தேங்கியிருக்கும். கீழ் பவானி பாசன தண்ணீ எங்கள் தோட்டத்து மேல தான் வாய்க்கால்ல ஓடும். அப்போவெல்லாம் வாய்க்காலுக்கு ரெண்டு பக்கமும் தும்பப்பூ செடிங்க நெறையாயிருக்கும். அவ்வளவு வண்ணத்துல பட்டாம் பூச்சிங்க இப்பயெல்லாம் பாக்க முடியாது. விதவிதமா வண்ண வண்ணமா கூட்டமா தும்பப்பூவுல தேனு குடிக்கும். நாங்களுந்தான்.
நெரம்பி வழிஞ்சி கடபோகுற நல்ல தண்ணீ கிணறு. வருசம் முழுசும் கிணத்துப் பாசனம், வருசத்திக்கு ரெண்டு தடவ கீழ் பவானி வாய்க்கா பாசனம். ஒரு சோடி காயடிச்ச காங்கயங் காளைங்க உழவுக்கு, ஒரு சோடி காராம் பசுங்க பாலுக்கு, நாட்டு எருமைகள் மூணு, பத்து உருப்படிக்கு மேல குட்டியோட வெள்ளாடுங்க, நெறய சித்து வெடக் கோழிங்க இருந்துச்சு. அப்பவெல்லாம் எங்க பாத்தாலும் வயலெல்லாம் பயிரா நெறம்பி பச்சப் பசேல்னு அத்தனை பேரு தோட்டமும் செழிச்சு கெடக்கும். சாமத்துல பத்து மணிக்கு மேல நரிங்க ஊளையிடற சத்தம் தூரத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமா பக்கத்தில கேட்டு வயித்த கலக்கும். நரிங்க ஊளையிடற சத்தம் வர்ர பக்கத்த பாத்து படுத்துருக்கற வெள்ளாடுங்க எந்திரிச்சி ஒன்னா தலயத் தூக்கி திருதிருன்னு பாக்கும். ஆட்டுக்குட்டிங்க மூடியிருக்கற பெரிய கூடைக்கு மேல பெரிய கல்ல தூக்கி வெச்சிருக்கும் உண்ணமாயா. நரிங்க ஊளையிடற சத்தம் கிட்ட வர வர ரெண்டு நாய்ங்களும் பயிந்துகிட்டு பின்னாடியே குரைச்சுகிட்டே வீட்டுகிட்ட ஒடியாந்துரும். அப்பெல்லாம் எல்லாருமே தோட்டத்துல தான் குடியிருந்தோம்.
நாங்க பேரப் புள்ளைங்க பத்து வயசுக்கு கீழ இருப்போம். கயித்துக் கட்டில எல்லாத்தையும் வாசல்ல எடுத்துப் போட்டு, நெலா வெளிச்சத்தில எங்க உண்ணமாயா கதைய கேக்க ஆசையா உக்காந்து இருப்போம். எங்க அப்பத்தா சோத்து உருண்டைய உருட்டி உருட்டி ஒவ்வொருத்தரு கையிலையும் கொடுக்க, சாப்புட்டுக்கிட்டே கதை கேக்க ஆரம்பிச்சிடுவோம். உண்ணமாயா, நல்லதங்கா கதை, குன்னுடையான் கதை, பொன்னரு சங்கரு, வீரப்பூர் படுகளம், மாயவரு பாட்டுன்னு ஒவ்வொரு நாளும் ஒன்ன எடுத்து பாட்டாவும் கதையாவும் சொல்லும்.
அதே மாரி ஒரு நாளு நாங்களும் கடைசியா எங்கூரு டெண்டு கொட்டாயில பாத்த தாயைக் காத்த தனயன் எம்ஜியார் படத்தோட கதைய ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மொத்த படத்தையும் உண்ணமாயாவுக்கு சொன்னோம். கெட்டவன் அப்படி பண்ணுனான்யா. எம்ஜியாரு பயங்கரமா சண்டை போட்டாரு ஆயா என தூக்கம் வர்ர வரைக்கும் நாங்களும் கதை சொல்லுவோம். கண்ணூ நான் இன்னும் கொட்டாயிக்கெல்லாம் போயி சீனிமா பாத்ததே இல்ல. நீ என்னய நம்மூரு டெண்டு கொட்டாய்க்கு கூட்டிட்டு போறியா, அப்படீன்னு ஆசையா கேக்கும். நாங்களும் நீ உடு ஆயா, நான் பெரிய ஆம்பளையானதும் உன்னய சைக்கிள்ல வெச்சு மொத ஆட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லுவோம். ம்…அப்பிடியா தங்கங்களா, என்னய சைக்கிள்ள்ள்ல வெச்சு கூட்டீட்டு போவீங்களா ன்னு சொல்லி ஆசையா சிரிக்கும். ஆமாம், அவள் டெண்ட் கொட்டாய பார்த்தது கூட இல்லை.
எங்க அப்பத்தா உண்ணமாயாவுக்கு நேர் மாறா வாட்ட சாட்டமா இருக்கும். கருப்பா இருந்தாலும் கலையா ஒயரமா இருக்கும். ரெண்டு பேருமே தனி மரந்தான். எனக்கு நெனவு தெரியிரதுக்கு முன்னையே தாத்தா செத்துப் போயிட்டார். இப்பொ இருக்கற தோட்டமும் வீடும் எங்க அப்பத்தாவுக்கு பினாங்கிலிருந்து எங்க தாத்தா அனுப்புன காசுல வாங்கினது. இந்தத் தோட்டம் வாங்குன போது கரடு முரடா, குண்டும் குழியுமா இருந்ததாம். அத கடுமையாப் பாடுபட்டு ராப்பகல்னு பாக்காம உழைச்சு உருவாக்குனது முச்சூடும் உண்ணம்மாயா தான். அந்த தோட்டத்துல எங்க உண்ணமாயா காலு படாத எடமே கெடயாது. நெலத்த பக்குவப்படுத்தி இன்னைக்கு பாக்கறதுக்கே லச்சணமா இருக்குதுன்னா அதுக்கு உண்ணமாயா பட்டபாடு சொல்லி மாளாது. ஒரு ஆம்பளைக்கு ஈடா பாடுபட்ட கடுமையான பாட்டாளி. பத்து ஏக்கரு பண்ணையத்தையும் ஒத்த ஆளா பாத்துடும். என்ன சோராக்கத்தான் தெரியாது.
ஆனா அவ கூடப் பொறந்தவ, எங்கப்பத்தா நல்லா சோராக்கும். எங்க அப்பத்தாவுக்கு காட்டு வேளையெல்லாம் செய்யத் தெரியாது. ஆனால் சோராக்குச்சுன்னா அவ்வளவு ருசியா இருக்கும். ஆரியத்த அரைச்சு களி கிண்டி கீரையும் பருப்பும் அருமையா செய்யும். எருமைக்கு பருத்திக்கொட்டை ஆட்டற செக்குல வேவவெச்ச கொள்ளு பருப்பை நாலு திருப்பு திருப்பி திப்பி திப்பியா எடுத்து சாப்பாட்டுக்கு போட்டு நல்லெண்ண ஊத்தி பிசைஞ்சு குடுத்துச்சுன்னா அவ்வளவு ருசியா இருக்கும். எங்க உண்ணமாயா அவ்வளவு பெரிய ஆரியம் அரைக்கற கல்ல ஒத்தை ஆளாவே பக்குவமா சுத்தி அரைப்பா.
அதுக்கு பின்னாடி நடந்ததெல்லாம் வேக வேகமா நடந்தமாறி தோணுது. மகங்களுக்கு கல்யாணம் ஆனதும் வீடு பத்தல. ரெண்டு பேருமே கிராமத்திற்கு குடி போயிட்டாங்க. இப்ப மகனுங்க கிராமத்திலையும், மகளுக கல்யாணம் முடிஞ்சி கொழந்த குட்டியோட அசலூர்ல இருக்காங்க. மகன்களுக்கு தோட்டத்த ரெண்டா பாகம் பிரிச்சி கொடுத்தாச்சு. பெத்த தாய்க்கு ரெண்டு பேரு பாகத்திலும் வெளையரதுல பங்கு. ஒன்ன மட்டும் பிரிச்சிக்கவோ வெச்சிக்கவோ ஆளில்ல. வேற எது எங்க உண்ணமாயா.
மவனுங்க கிராமத்துக்கு குடி போனதுக்கப்புறம் அக்காளும் தங்கச்சியும் மட்டும் சோராக்கித் தின்னுக்கிட்டு ஆடுங் கோழியும் வெச்சிகிட்டு பொழப்ப ஓட்டிகிட்டு இருந்தாங்க. எங்கப்பத்தா மாசத்துல நாலஞ்சி நாளு மவ வீட்டுக்கு போயிரும். அப்பெல்லாம் உண்ணமாயாவே சோராக்கித் திங்கனும். எங்க உண்ணமாயாவுக்கு வேற சரியா சோராக்கத் தெரியாதே. சோரு கொழம்பு ரசமுன்னு எதையோ ஒன்னா ரெண்டா ஆக்கி தின்னுகிட்டு இருக்கும். அந்த நேரத்துல தனியா அந்த அத்துவானக் காட்டுல பொழைக்கறது அவ ஒடம்பையும் மனசையும் பெருசா பாதிச்சிருக்கனும். தனக்குத் தானே பேசிக்கறது, பொழம்பறதுன்னு ஆயிடுச்சி. எங்க அப்பத்தாவுக்கு ஒடம்புல தெம்பு இருக்கறதால, நெனச்சா உண்ணமாயாவ தனியா உட்டுட்டு பஸ்ஸு புடிச்சி மவ ஊட்டுக்கு போயிரும்.
ஒரு நாலஞ்சு மாசத்திலயே உண்ணமாயாவுக்கு ஒடம்பு செரிவரல. தப்பு தப்பா, தடுமாறி தடுமாறி தான் வேலய செய்ய. அப்பத்தானால வெச்சி சமாளிக்க முடியல. அதுக்கும் வயசாகுதில்ல. தன்னயே ஒருத்தரு அனுசரனையா பாத்துக்க வேண்டிய வயசுல, முடியாத கெழவிய பாத்துக்கறது அப்பத்தாவுக்கு எரிச்சலுங்கோவவுமா மாறுது. சமளிக்க முடியாம அடிக்கடி தனியா உட்டுட்டு, மவ ஊட்டுக்கு தனியா சோராக்கிக்கச் சொல்லீட்டு போயிரும். எல்லாருக்கும் வந்து பாக்கறதுக்கோ போயி பாக்கறதுக்கோ ஆளுங்க இருக்காங்க. உண்ணமாயா மனசில என்ன நெனச்சிருக்கும்னு தெரியல. திரும்ப வந்து பாத்தா அரிசி பருப்பு சாமானெல்லாமும் ஒன்னோட ஒன்னு கலந்து, எண்ணைய கீழே ஊத்தி ஒரு வழி செஞ்சி வெச்சிருக்கும். சோத்த தண்ணி குடத்திலயோ இல்லையினா தண்ணிய சோத்திலயோ கொட்டி வெச்சிரும். ஒரு நேரத்துல பொறுத்துக்க முடியாம அப்பத்தா அவளே இவளே என சத்தம் போட உண்ணமாயாவுக்கு ஒன்னும் புரியாது.
ஒவ்வொரு நாளு அப்பத்தா ஊருக்கு போவயில மகனுங்கக்கிட்ட சொல்லிட்டு போயிடும். அந்த மாறி நேரத்துல மருமகளுக தான் சோரு கொண்டு வந்து கயித்துக் கட்டலுக்குப் பக்கத்தில வெச்சிட்டு, குடத்தில இருக்குற தண்ணிய மாத்தி வெச்சிட்டு போவாங்க. அடுத்த நாளு அந்த சோரு பாதிக்கு மேல தின்னுருக்காது. ஈ மொச்சுகிட்டு கெடக்கும். ஆயா சாப்புட்டுச்சா இல்லை ஏதாவது நாய்ங்க வந்து சாப்புட்டுச்சான்னு தெரியாது.
தன்னால திங்க முடியிதோ இல்லையோ, பாக்கற எல்லாத்துக்கிட்டயும் எனக்கு அது வாங்கிட்டு வா இது வாங்கிட்டு வான்னு குழந்தையாட்டம் கேட்பா. அவ அன்னைக்கி பசிக்கிதுன்னு அல்லாடுனது கண்டிப்பா வயித்துப் பசியா இருந்திருக்காது. எந்த தனிமைய தொலைக்க இங்கு வந்தாளோ அதே தனிமை அவளை என்னவெல்லாமோ ஒடம்புக்குள்ள செஞ்சிருக்குது. அவளுக்கு அத வெளிய காட்டத் தெரியல. அவளுக்கு அன்னிக்கு என்ன பசின்னு யாருக்கும் புரியல. கேட்கற தீனிங்க மூலமா சொந்தங்கள கிட்டக்க அடிக்கடி பாக்க நெனச்சிருக்கா.
நெலம மோசமாயிட்டே வருது. நெனவு தப்பிப்போச்சு. நிமுந்து நடக்கறது குறைஞ்சு முதுகு கூனு விழுந்து போச்சு. வீட்டுக்கு முன்னாடி பாற களத்துல குனிஞ்சிகிட்டே வேப்பம்பழத்த பொருக்கி, வாயில பிதுக்கி, சப்பி கொட்டைய துப்பிக்கிட்டே இருப்பா. சுத்தியுமுத்தியும் ஆள் அரவமில்லாம தனியா இருந்து இருந்து உள்ளுக்குள்ள இருக்கற வெறும, வெறுப்பு, பயம், திங்க முடியாத பசி, பழைய நெனப்பு, மனசு பாரம் இதெல்லாஞ் சேந்து உளரதும் திடீர்னு கத்தறதும் அன்னாடும் நடக்குது. நடு சாமத்துல இன்னு அதிகமா என்னென்னமோ ஒளரிக்கிட்டு இருக்கும். யாராவது பேச்சு கொடுத்தாங்கன்னா தம் பேரப்பிள்ளைங்கன்னு நெனச்சு பேர சொல்லி கொழந்த மாறி சத்தமா அழுவ ஆரம்பிச்சிடுது. அடே பசங்களா எங்கடா போனீங்க, இந்த ஆயால பாக்க வர மனசு வருலயா ன்னு அழுவுதாம். அடிக்கடி பேரப்பிள்ளைங்க நெனப்புலயே இருந்திருக்கிறா. எங்களுக்கு அது புரியல. எங்களுக்கும் வயசு பத்தல, நாங்க நகரத்துல அம்மாயி ஊட்டுல இருந்து பள்ளிக்கூடம் படிச்சிக்கிட்டு இருந்தம். யாராவது கூட்டிகிட்டு வந்தாத்தான் உண்டு.
இப்ப அங்க தோட்டத்திலயும் பஞ்சம் தலவிரிச்சு ஆடுது. ரெண்டு மூனு வருசமா மழையில்லை. ஆடு மேயறதுக்கு புல்லு பூடு கூட இல்லை. வருசம் முழுசும் வெய்யிலு போட்டு வறுத்தெடுக்குது. குமிஞ்சு நடந்தாக் கூட நெலத்துல பட்ட வெய்யிலு நெருப்பா மூஞ்சில அப்புது. கெணறு சுத்தமா வரண்டு போயி வெறுமையா கெடக்குது. கொல கொலயா காச்சித் தொங்குன தென்னம்பிள்ளைங்க தெனமும் ஒவ்வொன்னா குருத்தொடிஞ்சி கழுத்து முறிஞ்சி கீழ உழுவுது. எங்க திரும்புனமின்னாலும் கண் கூசற அளவுக்கு பூமி காஞ்சி போய் மரமெல்லாம் மொட்டையா நிக்கிது. மாடுங்க எல்லாம் போய் சேந்திடுச்சு. கோழிங்க சீக்கு வந்து கொத்து கொத்தா செத்துப் போச்சாம். இருந்த ரெண்டு வெள்ளாட்டையும் இழுத்துக் கட்ட முடியாம வித்து தள்ளியாச்சு. வெவசாயம் முப்போவம் வெளைஞ்சது போயி இப்ப ஒரு போவத்துக்கே வழியில்ல. மகனுங்க வெவசாயத்த பேருக்கு வச்சிகிட்டு வேற வேல பாக்க போயிட்டாங்க. தென்னை மர பொந்துல கூடு வெச்சிருந்த கிளிங்க எங்க போச்சுன்னு தெரியல. இப்பெல்லாம் மொட்டை மரத்துல உட்காந்து கோட்டான் கத்துது. அப்பிடின்னு எங்களுக்கு அப்பப்ப தகவலு வரும்.
போன வாரம் நாயித்துக்கிழம உண்ணமாயாவ பாக்கப் போலம்னு எங்கம்மா கூட்டீட்டு வந்துச்சு. எங்க தோட்டந்தானானு என்னால நம்ப முடியல. சோன்னு அவ்வளவு சத்தமில்லாம கெடக்குது. வண்டி தடத்துல திரும்பி ஊட்டுகிட்ட போனா ஊடே அடையாளந்தெரியில. அங்க வேப்பமரத்துகிட்ட கயித்து கட்டலு மட்டுந் தெரியிது. பஸ்ஸுல வரவர ஆயாகிட்ட என்னென்னமோ பேசனும்னு நெனச்சிக்கிட்டு வந்தேன். ஆனா நேர்ல எங்காயாவ பாக்கறப்போ எனக்கு ஒன்னுமே புரியல. எங்க உண்ணமாயாவா இதுன்னே தெரியாத அளவுக்கு ஒடம்பு ஆளே அடையாளந் தெரியாத அளவு மாறிப்போச்சு. இத்துப் போன கயித்துக் கட்டல்ல படுத்திருந்தா. பொறந்து ரெண்டு மாசம் ஆன கொழந்தைக்கு இருக்கற மாதிரி முடி இங்கொன்றும் அங்கொன்றுமா உழுந்தது போவ மிச்சமிருக்குது. முன்னாடி பல்லுங்க மட்டும் அவ்வளவா உழுவுல மத்த பல்லெல்லாம் போச்சு. மூஞ்சி எலும்பும், நெஞ்செலும்பும் ஒடம்புக்கு வெளிய துருத்திக்கிட்டு நிக்குது. இதுக்கு மேல சுண்டரதுக்கு ஒடம்பில எடமில்ல. சுருங்கி வத்திப் போன மாரு ரெண்டும் ஒடம்போட ஒட்டிப்போயி எலும்புந் தோளுமா, ரத்தம் செத்துப் போயி செவந்த ஒடம்பு கறுத்துப் போயிருக்குது. ரத்தம் சுண்டுனதால ஒடம்பு முழுசும் பிப்பு தாங்க முடியாம அடிக்கடி ஒடம்பு முழுசும் சொரிஞ்சிகிட்டு தேச்சிகிட்டு இருந்தா. தேய்க்கத் தேய்க்க அழுக்கு தெரண்டு வந்து உருண்டு உருண்டு உதிருது.
கண்ணுல கருப்பு முழி முழுசும் பனி மூடுனாப்ல மயமயன்னு மங்கிப்போச்சு. எப்பன்னாலும் கீழ உழுந்துருவாங்கற மாறியே நடக்கறா. அப்பிடியே ஒரு நெதானத்துல நடந்துகிட்டு இறுக்கிறா. அவ பொழங்குன தோட்டமில்லியா, எந்த எடத்துல மேடு இருக்குது எந்த எடத்துல பள்ளமிருக்குதுன்னு அவ காலுக்கு தெரியிது. வழக்கமா வெளிக்கி போவ வீட்டு பொடக்காலிக்குத் தான் உண்ணமாயா போவும். இப்ப அவ்ளோ தூரம் நடக்க முடியாதனால ஆங்கங்க நின்னுகிட்டே வெளிக்கி போயிடறா.
நாங்க போயிருந்த போது அவ ஒடம்புல ஒட்டுத்துணி இல்ல, பேருக்கு ஒரு வெள்ளத்துணிய மேலுக்கு சுத்தியிருக்கறா. அதெயும் அப்பப்ப தூக்கிப் போட்டுட்டு அம்மணமாவே இருப்பாளாம். கட்டல்ல படுத்திருக்கறப்போ யாராவுது அந்தப்பக்கமா போனா அந்த துணிய எடுத்து போத்தீட்டு போவாங்கலாம். அம்மணமா நடந்து போகற உண்ணம்மாயாவுக்கு முன்னாடி பின்னாடி எந்த பக்கமும் ஒடம்புல கொஞ்சங்கூட கறியே இல்ல. வயித்துல ஒன்னும் இல்லாததால வெளிக்கி சரியா போறதில்ல. ஆனாலும் மெதுவா நடந்து போயி பூவரசு மரத்த புடிச்சிகிட்டு ரொம்ப நேரம் முக்கி முக்கிப் பாத்துகிட்டே இருக்கறா. வெளிக்கியே வல்ல. கொஞ்சம் மூத்தரந்தான் தொடை இடுக்குல வழிஞ்சி போவுது. குண்டி கழுவி எத்தன நாளு இருக்கும்னே தெரியல.
முன்னால ஆசாரத்து பனங்கையெல்லாம் இத்துப் போயி அரைகுறையா ஓடுங்கள தாங்கீட்டு இருக்குது. வாச களத்துக்குப் பக்கத்துல வேப்பமரத்தடியில பாறை சரிவா இருக்கும். ஒன்னுக்கோ வெளிக்கியோ போனா கழுவிவுட சவுகிரியமா கட்டலைத் தூக்கி அங்கயே நெரந்தரமா போட்டுட்டாங்க. ஒவ்வொரு நாளு கட்டல்லயே வெளிக்கியும் ஒன்னுக்கும் பொயிருவா. அதனால எப்பயாவது கட்டல்ல படுத்த கெடையாவே கைபடாம குளிப்பாட்டி விடுறாங்கலாம். நாயி கூட இப்ப தோட்டத்துல தங்கறதில்ல. ஏம்பா அடிக்கடி ஒரு எட்டு வந்து இந்த கெழவிய பாத்துட்டுப் போவக்கூடாதா. எப்ப பாரு உங்க பேரையெல்லாம் சொல்லி சொல்லி சத்தம் போட்டு அழுதுட்டிருக்கும் ன்னு பக்கத்து தோட்டத்து மருமவ எங்கள பாத்ததும் சொல்லுச்சு. எனக்கு பழைய உண்ணம்மாவும் அவ இருந்த இருப்பையும் இப்ப மனசில வெச்சி பாக்கவே முடியல. கண்டீப்பா அவளால தனியா இருக்க முடியாது. பழசயெல்லாம் நெனைக்க நெனைக்க உள்ள எனக்கு என்னென்னவோ பன்னுச்சு. எங்கம்மா பக்கத்துல உக்காந்து பேசுனது எவ்ளோ புரிஞ்சிதுன்னு தெரியல. எங்கம்மா அரமனசா உண்ணமாயா கிட்ட நேரமாவுது கெளம்பறேன்னு சொன்னா. பதிலுக்கு உண்ணமாயா எம்பக்கம் கைய நீட்டி திரும்ப எப்ப வருவன்னு மூக்கு விசும்ப கேட்டா. நான் கண்டீசனா வரன்னு சொன்னத அவ காதுலயே வாங்கிக்கல. அது சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுச்சு. திரும்ப வீடு போற வரைக்கும் ஆயாவே கண்ணு முன்னால வந்து வந்து போனா.
தோட்டத்துக்கு போயிட்டு வந்ததிலருந்து ஒரு வாரமா உண்ணமாயா நெனப்பாவே இருக்க. கூட படிக்கற பசங்களோட அப்பத்தாங்கள பத்தி பள்ளிக்கூடத்தில பேசிகிட்டு இருந்தாங்க. அத கேக்க கேக்க எனக்கு மனசுல அப்பத்தாவ மறுபடியும் பாக்கனும்னு நெனப்பெடுத்துக்கிச்சு. இதுவரைக்கும் அம்மாயி அனுசரணை அப்பத்தாவோட நெனப்ப மறக்கடிச்சிடிச்சின்னு நெனைக்கறேன். ஒரு வழியா வீட்டுல ஓறியாண்டு எப்பிடியோ உத்தரவு வாங்கீட்டு இதா கெளம்பீட்டன். எப்பிடியும் சைக்கிள்ல போயி சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவும். மறுபடியும் எங்க உண்ணமாயாவ பாக்கற ஆச சைக்கிள மிதிக்கறதே தெரியில. ஒரு வழியா வேத்து விறுவிறுத்து கிராமத்துக்கிட்ட வந்துட்டேன். எனக்கு கிராமத்துக்குள்ள போவ தோனல, நேரா ஆயாவ பாத்துட்டு அப்பறம் போலாம்னு சைக்கிள தோட்டத்துக்கு உட்டேன்.
ராத்திரி பகலா புலம்புன சத்தம் தெனமும் அங்குலம் அங்குலமா கொறைஞ்சி கட்டலு சட்டத்துக்குள்ள அடங்கிபோச்சு. ஆயா நாந்தான் வந்துருக்கறேன்னு திரும்பத் திரும்ப அவ காதுகிட்ட சத்தமா பேசறேன். அவகிட்ட இருந்து ம்… ம் ன்னு ஒத்த அனத்தர சத்தம் மட்டுந்தான் பதிலுக்கு வருது. அம்மா குடுத்த சோத்து போசிய தொறந்து சோத்த எடுத்து ரெண்டு வாயி ஊட்டுனேன். அதுக்கு மேல போவுல. எங்க ஆயாவுக்கு என்ன கத சொல்றதுன்னு தெரியல. தோள்ல சாச்சி ஒரு வா தண்ணி குடுத்துட்டு திரும்ப படுக்க வச்சிட்டேன். அன்னைக்கு பொழுது எறங்கற வரைக்கும் தோட்டத்த நடையில அளக்கறதும், ஆயாவ பாக்கறதுமா போயிருச்சு. ராத்திரி அங்க தங்க முடியாது அதனால கிராமத்துல தங்கீட்டு காலைல ஊருக்கு போலாம்னு கிளம்பீட்டேன். அதுக்கு மேல உண்ணமாயாகிட்ட பேச ஒன்னுமில்ல.
விடியகாலைல திடீர்னு கோடை மழை. எங்கிருந்து அவ்ளோ மழை வந்துச்சின்னு தெரியல, கொறஞ்சது ரெண்டு ஒழவு மழை இருக்கும். பேய் மழை வெளுத்து வாங்கீடுச்சு. கிராமத்துக்காரங்க அவங்கவுங்க தோட்டத்துக்கு வெடிஞ்சும் வெடியாம ஓடுனாங்க. ஆனா நாங்க ஆயாவ பாக்க ஓடுனோம். அங்க, அந்த பத்து ஏக்கரா வனாந்தரத் தோட்டம் ரொம்ப நாளைக்கு பின்னால தண்ணி வழிஞ்சி ஓடுது. நேரா உண்ணமாயாகிட்ட போனம். உண்ணம்மாயா சத்தமில்லாம கெடக்கறா. வேப்பரத்து கிளையில இருந்து அனாமுத்தா கெடக்கும் அந்த கட்டலு மேல மழை தண்ணீ சொட்டிக்கிட்டு இருக்குது. ஆதரவில்லாம வந்தா. ஏன் இங்க வந்தா? எந்த நம்பிக்கையில இங்க வந்தா? கடைசியா என்ன நெனச்சிருப்பா?
மழை தண்ணி அவ தொண்டக்குழியில மிச்சமிருக்குது. வேப்பம் பழம் தெறந்திருக்கற அவ வாயிலையும், வேப்பிலைங்க ஒடம்பு மேலையும் செதறிக்கிடக்குது. அது அவ வெச்ச மரம். அவளச் சுத்தி இருந்த நாத்தத்தையெல்லாம் மழை கழுவியிருந்துது. வெட்டி போட்ட முருங்கக்கட்டைக்கும் கட்டில்ல கெடந்த உண்ணமாயாவோட ஒடம்புக்கும் பெரிய வித்தியாசமில்ல. கையில தூக்கறதே தெரியாத அளவுக்கு வெத்து ஒடம்பு.
கிராமத்து சனங்க சும்மா பேருக்கு அவியவிய துக்கத்துக்கு ஒப்பேரி வெச்சிகிட்டு இருக்காங்க. பெருசா பரபரப்பு இல்லாம சுருக்கமாக சாங்கியத்த முடிச்சு கிராமத்து சுடுகாடுக்கு பாடை கட்டி எடுத்துட்டு போறம். அவ செத்த பின்னாடி கூட எனக்குத் தெரிஞ்சி புதுசா சொந்தக்காரங்க யாரும் எழவுக்கு வல்ல.
இந்தத் தோட்டத்த உருப்படியாக்கறதுக்கு காரணமா இருந்த பெரிய மனுஷிக்கு அதே தோட்டத்தில பொதெக்கறதுக்கு யாருக்கும் மனசில்ல. பத்து ஏக்கரா தோட்டத்துல ஆறடிக்கா பஞ்சம்? யாரோ ஒருத்தரு அதையுங் கேட்டுப்பாத்தாரு, அவுரு பேச்ச யாரும் காதுல போட்டுக்கல. இத்தனைக்கும் என்னோட தாத்தாவை தோட்டத்துல வடகெழக்கு மூளையில தான் பொதெச்சிருக்கறோம்.
அய்யய்ய… எப்படியோ இழுத்துகிட்டே இருந்த கட்ட ஒரு வழியா போயிருச்சு ன்னு எங்க பெத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அடக்கம் பன்னதும், எல்லாரும் கும்புட்டுட்டு திரும்பிப் பாக்காம வீட்டுக்கு போங்க ன்னு சொல்லிக்கிட்டே பெரியவங்க முன்னாடி போனாங்க.
நா மட்டும் திரும்பித் திரும்பி பாத்துகிட்டே கடைசியா நடந்து வரேன்.
ஏன் ஆயா இங்க வந்த…
…ஏன் ஆயா இங்க வந்த…யின்னு
அவ சவக்குளி கிட்ட உக்காந்து அந்த பத்து வயசு பேரனா இழுத்து இழுத்து அழுகலாம்னு தோனுது.
-ஆரன் 29.06.2021