ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளின் பிற்பகுதி. இரவு 11 மணி, பெங்களூர் பேருந்து நிலையம் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. மாதுவை மேஸ்திரி டிவிஎஸ்-ல் கூட்டி வந்து பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். மேஸ்திரி புறப்படும் போது, மாது நல்லா கேட்டுக்க. பொங்கலுக்கு மூணு நா முழுசா லீவு குடுத்ததே பெருசு. திங்கக்கிழம பொங்க முடிஞ்சதும் செவ்வாக்கிழம வண்டி ஏறிடனும். இங்க ஏகப்பட்ட வேலைய உட்டுட்டு போற, நெனப்புல வச்சிக்க. என்று கூறி டிவிஎஸ் வண்டிய திருப்ப, மேஸ்திரி மேஸ்திரி கொஞ்சொ மனசு வையிங்க. இன்னு ஒரு ஆயிரம் ரூவா மட்டுங் குடுங்க திரும்பி வரப்போ ஊட்டுக்காரிக்கு செலவுக்கு குடுத்துட்டு வரனும் என்றான் மாது.
இங்க பாரு மாது தீவாளிக்கப்புறம் நீ செலவுக்கு வாங்குனது போவ மீதி சம்பளக்காசு மொத்தம் நாலாயிரம் ரூவா. அதுல நீ தீவாளிக்கி ரொம்ப அவசரன்னு ரெண்டாயிரம் ரூவா அட்வான்ஸு வாங்கிருக்க. இப்ப ஆயிரம் ரூவா குடுத்துருக்கேன். மீதி ஆயிரம் ரூவா எங்கிட்ட இருக்கு. மிச்ச வெவரம் வேணுமுன்னா போயிட்டு வா அப்பறம் பேசிக்கலாம் என்றார். அதற்கு மாது, மேஸ்திரி நா அட்வான்ஸு கேக்கல, அந்த பாக்கி ஆயிரத்த மட்டுங்குடுங்கன்னு தான் கேக்கறேன்ங்க. இந்த ஆயிரந்தான் எனக்கு புடிமானமே. பாக்கி வேல ரொம்ப அவசரம், நீ போயிட்டு வல்லையினா எனக்கு பிரச்சனையாயிடும். அதனால அத கேக்காத நீ போயிட்டு வந்து சேர்ர வழியப்பாருங்க. சரி மேஸ்திரி ஒரு அம்பது ரூவாயாவது குடுங்க, சட்டைய ரூம்லயே வுட்டுட்டு வந்துட்டேன். சில்லரை பணம் பூரா அதுல மாட்டிகிச்சி என்றான் மாது. ஊஹூம்.. நீ அதுலயே சில்லரை மாத்திக்கவென்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
மாதுவுக்கு திருமணமாகி பள்ளிக்குச் செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள சிறிய கிராமம். தருமபுரியிலிருந்து ஒரு மணி நேரப் பயணம். மாது பிழைப்புக்காக பெங்களூரில் கொத்தனார் வேலை பார்க்கிறான். தீபாவளிக்குப் பின்னர் தற்பொழுது தான் ஊருக்குப் போகிறான். வேலை பார்க்கும் இடந்திலிருந்து நேரே அழுக்குச் சட்டை மற்றும் கரையேறிய வேட்டியிலேயே புறப்பட்டு விட்டான். இன்று வெள்ளிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் பொங்கல் விடுமுறை ஆதலால் பேருந்து நிலையம் ஆட்களால் நிறம்பியிருக்கிறது.
நின்று கொண்டிருந்த பேருந்துகளில் மூச்சு முட்டும் அளவுக்கு ஆட்கள் நிறம்பியிருந்தனர். வேறு வழியில்லாமல் அடுத்தப் பேருந்துக்குக் காத்திருந்தான் மாது கூட்டத்தில் ஒருவனாக. வேட்டியில் சுருட்டி வைத்திருந்த ஒத்தை ஆயிரம் ரூபாய் நோட்டை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டான். மணி கிட்டத்தட்ட இரவு ஒன்றை கடத்துவிட்டது. கூடியிருந்த கும்பல் திபு திபு வென உள்ளே நுழையும் இரண்டு பேருந்துகளை நோக்கி ஓட, பின்னாடியே மாதுவும் ஓடினான். இரண்டு பேருந்துகளும் கூட்டத்தில் தள்ளாடி வந்து நின்றதும், முண்டியடித்துக் கொண்டு ஏறி சாமார்த்தியசாலிகள் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டனர். மாதுவுக்கு ஓட்டுனருக்கு பின் இறுக்கையில் இடம் கிடைத்தது. இரண்டில் ஒரு பேருந்து ஆட்களை நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. மாது இருந்த வண்டியின் ஓட்டுநர், ஏம்பா இப்பிடி அடிச்சிக்கறீங்க. இந்த வண்டி இப்ப பொறப்படாது, நாலரை மணிக்குத் தான் பொறப்படும். எல்லாரும் கீழ இறங்கிக்கங்க என்று விரட்டினார்.
அதிகாலை மணி நாலேகால். பேருந்தில் இடம் பிடித்தவர்கள் தங்களது உடைமைகளை தங்களது இறுக்கையில் வைத்து உறுதிபடுத்தியிருந்தனர். மாதுவும் தன்னுடைய மஞ்சள் பையை இருக்கையில் வைத்துவிட்டு மற்றவர்களுடன் சன்னல் ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தான். பேருந்தில் படுத்திருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கீழே இறங்கி தேனீர் குடிக்கச் செல்ல, காத்திருந்த அனைவரும் முட்டி மோதி ஏறி தங்களது இடங்களில் அமர்ந்து கொண்டனர். இடம் கிடைக்காதவர்கள் படிக்கட்டில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் இருந்தனர். மாது தன்னுடைய இடத்தில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டான். தேனீர் குடித்துத் திரும்பிய நடத்துனர், சேலம் போறவங்க மட்டும் உட்காருங்க மத்தவங்க எல்லாம் கீழ இறங்கிக்குங்க. வண்டி போகும் போது ஏறிக்கங்கவென்று சொன்னார்.
யாரோ தோளை தட்ட திடுக்கிட்டு எழுந்தான் மாது. ஏம்பா எங்க போகனும், டிக்கெட்டு வாங்கிட்டு தூங்கு என்றார் நடத்துனர். கண்ணை தேய்த்துக் கொண்டே இடுப்பிலிருந்த ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டி, தருமபுரி ஒன்னு என்றான். ஏன்யா சேலம் மட்டும் உக்காருங்க மத்தவங்கல்லாம் எறங்குங்கன்னு அப்போ இருந்து கத்திக்கிட்டு இருக்கேன். ஜம்பமா முன்னாடி ஏறி உக்காந்துகிட்டு தருமபுரி குடுன்னு ஆயிரம் ரூபாய நீட்டற என சத்தம் போட. அரைமனதுடன் எழுந்தவன் ஒரு பக்க ஆணி கழன்று தொங்கிக்கொண்டிருந்த திருவள்ளுவர் படத்தின் முனையில் இடித்துக் கொண்டான். தலையை தேய்த்துக் கொண்டே பார்த்தவனை நடத்துனர், போப்பா போய் கீழ நில்லு. போவும் போது ஏறிக்க என்று கூறிவிட்டு, சேலம் செல்லும் நபரை அழைத்து அமர வைத்தார். இப்படியே இடைநகரங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் இறக்கி விட்டுவிட்டு அந்த இடங்களில் சேலம் செல்லும் நபர்களை மட்டும் அமரவைத்தார் நடத்துனர்.
பேருந்து புறப்பட்டுவிட்டது. நடத்துனர் வழியில் இருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்களை ஏறிக்கொள்ளச் சொன்னதும், காத்திருந்த அனைவரும் ஏறிக்கொண்டனர். இப்பொழுது மாதுவுக்கு படிக்கட்டில் கூட அமர இடம் கிடைக்கவில்லை. நடுப் பேருந்தில் நிற்கத்தான் இடம் கிடைத்தது. நடத்துனர் ஒவ்வொருவருக்காய் பயணச்சீட்டு கொடுத்து வந்தவர், மாதுவிடம் வந்தார். தருமபுரி ஒன்னு என அதே ஆயிரம் ரூபாய்த் தாளை நீட்ட, யோவ்.. முப்பத்தி எட்டு ரூவா ஐம்பது காசுக்கு ஆயிரம் ரூவாய நீட்டற. சில்லரையா குடு என நடத்துனர் கடிக்க. எங்கிட்ட வேற ரூவா இல்லியே என திரும்பவும் அதே நோட்டை நடத்துனரிடம் நீட்டினான் மாது. எரிச்சலடைந்த நடத்துனர், காலங்காத்தால ஏன்யா உசுர வாங்கரத்துக்குனே வரீங்க. இவ்ளோ நேரம் வண்டி நின்னுதில்ல கடகண்ணியில சில்லர மாத்தி வச்சிக்கமாட்ட. யாருமே சில்லரையா தரலையினா எப்படி, நா மட்டு என்ன அச்சடிச்சா கொண்டு வருவேன். இந்தா ஒரு ரூவா ஐம்பது பைசா, மிச்சம் தொள்ளாயிரத்தி ஐம்பது ரூவாய்க்கு டிக்கெட்டுப் பின்னாடி எழுதியிருக்கேன். எறங்கும் போது மறக்காம வாங்கிக்க என பயணச்சீட்டை மாதுவின் கையில் தினித்தார் நடத்துனர்.
பேருந்து ஒசூரைத் தாண்டியதும் கொஞ்சம் இடைஞ்சல் குறைந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்த களைப்பு மற்றும் இரவு முழுவதும் தூக்கவில்லை எனவே மாதுவால் நிற்க முடியவில்லை. அப்படியே நடுப்பேருந்தில் கீழே அமர்ந்து கொண்டான். சட்டைப் பையில் இருந்து தன்னுடைய இரு குழந்தைகளும் சேர்ந்திருக்கும் மடிப்பு விழுந்த புகைப்படத்தைக் கையில் எடுத்து பேருந்தின் மங்கலாய் எரியும் ஒற்றை மஞ்சல் விளக்கின் ஒளியில் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று சனிக்கிழமை, எப்படியும் வீட்டுக்குப் போக மணி பத்துப் பதினொன்னாவது ஆயிடும். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள மூனுபேத்தையும் தருமபுரிக்கி கூட்டியாந்து பொங்கலுக்கு துணியேடுத்துக் குடுத்துடனும், நாளைக்கு வேற ஞாயித்துக்கெழமையா போச்சு. துணிக் கடையெல்லாம் இல்லயின்னா என்ன பன்னறது. பேசாம அரூர்க்கே போயி நாலு பேர்க்கும் துணியெடுத்துரலாம். புள்ளைங்களுக்கும் தீனி எதுவும் வாங்கல, அரூர்லயே வாங்கிக் கொடுத்து கூட்டியாந்துரலாம் என யோசித்தவாரே தூங்கிப் போனான் மாது.
மணி காலை 8.40. பழைய தருமபுரியை பேருந்து தாண்டிச் சென்றது. நடத்துனர், தருமபுரி எறங்கறவங்க நால் ரோட்லயே எறங்கிக்கங்க, வண்டி பஸ் ஸ்டாண்டுக்குள்ள போவாது என இரண்டு மூன்று முறை சத்தம் போட்டார். மாதுவின் காதுகளில் எதுவும் விழவில்லை. அமர்ந்தவாறே நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். பேருந்து நான்கு ரோட்டில் நிற்கவும், தருமபுரியெல்லாம் எறங்குங்க என மறுபடியும் சத்தம் போட்டார் நடத்துனர். பேருந்து நின்றதும் இறங்கத் தயாராய் நின்று கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கினர். இறங்க வேண்டியவர்கள் இறங்கி முடிக்கும் தருவாயில் பேருந்து புறப்பட நடத்துனர் விசில் ஊத தயாரானார். மாதுவின் அருகே அமர்ந்திருந்தவர் மாதுவின் தோளைத் தட்டினார். திடுக்கிட்ட மாதுவிடம், ஏம்பா நீ தருமபுரி தான எறங்கனும் என்றார். ஆமா.. என்றான் மாது. தருமபுரி வந்திரிச்சிப்பா, எல்லாரும் எறங்கீட்டாங்க. வண்டி போவப்போவுது என்றார். எழுந்து ஓட்டமும் நடையுமாய் குறுக்கே நின்றவர்களை தள்ளிக் கொண்டு படிக்கட்டுக்குப் போகவும். பேருந்துக் கிளம்ப நடத்துனர் விசில் கொடுக்கவும் சரியாய் இருந்தது. மெதுவாய் வண்டி நகர, படிக்கட்டிலிருந்து குதித்து இறங்கினான் மாது.
தூக்கக் கலக்கத்திலேயே பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான் மாது. பேருந்து நிலையம் நான்கு ரோட்டிலிருந்து நடக்கும் தூரம் தான். மஞ்சள் பையுடன் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த மாது, மொரப்பூர் வழியாக அரூர் செல்லும் பேருந்து இருக்கைகள் காலியாக இருக்க அப்பாடா என ஏறி அமர்ந்தான். ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு வண்டியில் ஏற, சட்டைப் பையில் கையை விட்ட மாதுவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தான் வந்த பேருந்தின் நடத்துனரிடம் மீதிப் பணத்தை வாங்கவில்லை என்பது அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது. அடுத்த வினாடியே அவன் கால்கள் அவனைக் கேட்காமலேயே இறங்கி நான்கு ரோட்டை நோக்கி ஓடியது. அவன் நான்கு ரோட்டில் இறங்கும் போதே பேருந்து கிளம்பியது அவன் மூலைக்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை. அடுத்த சில நிமிடங்களில் நான்கு ரோட்டை வந்தடைந்தான் மாது. இனி மாது அங்கு நின்று ஒரு பயனுமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் மீண்டும் பேருந்து நிலையத்திற்கே சென்றான்.
இரண்டு மணி நேரமாக சேலம் செல்லும் ஒவ்வொரு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடமும் நடந்த கதையைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான் மாது. பெரும்பாலும் யாரும் காது கொடுத்துக் கேட்பதாயில்லை. இறுதியாக ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மாதுவிடம், நீ இங்க நின்னு ஒன்னும் ஆவப் போறதில்ல. டிக்கெட்ட பத்திரமா எடுத்துகிட்டு சேலம் போயி, இராமகிருஷ்ணா ரோட்டுல ஏடிசி டிப்போ இருக்கும். அங்க போனயினா கணக்குல காசு எச்சா இருந்தாவோ, இல்ல யாராவது பாக்கி வாங்காம இருந்தாவோ அங்க ஆபீஸ்ல குடுத்து வெச்சிருப்பாங்க. அங்க போனியினா ஒரு வேளை வாங்கிக்கலாம் என்றார். மணி இப்பொழுது காலை 10.50. வேறு எதையும் யோசிக்கும் நிலையின் மாது இல்லை. அவர் சொல்வதே சரி என பட. மீண்டும் அவரிடமே, எங்கிட்ட சுத்தமா காசில்ல என்னய சேலத்துல எறக்கி விட்டர்ரீங்களா எனக் கேட்க. ஏம்பா இது கவெர்மெண்ட் பஸ்ஸுப்பா, ஓசில எல்லாங்கூட்டீட்டு போவ முடியாது. என் சீட்ட கிழிச்சிடுவாங்க. காசிருந்தா ஏறிக்க என்றார். வேறு தனியார் பேருந்துகளை அனுகி நிலைமையை விவரித்த மாதுவுக்கு அலட்சியப் பார்வையே பதிலாய் கிடைத்தது.
மீண்டும் தனக்கு ஆலோசனை கூறிய ஓட்டுநரிடமே பின்னால் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தான் மாது. ஓட்டுநரோ சேலத்துக்கு 3 மூட்டைகள் அனுப்ப கேட்டுக் கொண்டிருந்த ஆசாமியிடம் பேசிக் கொண்டிருந்தார். மூட்டைக்காரர் ஓட்டுநரிடம் அவசரமா இதை அனுப்பச் சொன்னாங்க. தனியார் வண்டி கிளம்ப இன்னும் நேரமிருக்குங்கறாங்க. எவ்வளவு கேக்கறீங்களோ வாங்கிக்கோங்க என்றார். அதற்கு அப்பேருந்தின் ஓட்டுநர், ஆளில்லாம லக்கேஜ் ஏத்திக்க மாட்டேங்க. யாராவது கூட வந்த ஏத்திக்குங்க என்றார். ஆளில்லைங்க, அவசரங்க என பேசிக் கொண்டிருந்த ஆசாமியிடம் மாது மெதுவாக போய். ஏங்க எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் குடுதிங்கன்னா, நான் உங்க மூட்டைகள சேலம் வரக்கிம் போயி எறக்கிக் குடுத்தர்ரங்க என்றான். இதைக் கேட்ட ஓட்டுநரும், ம்… ஆமாம்பா லக்கேஜி கூட இந்தாளுக்கும் வேணும்னா ஒரு டிக்கெட் எடுத்துக் குடுத்துடு. நா வேணா ஏத்திக்கறேன் என்றதும். அந்த மூட்டை ஆசாமி சரி என ஒப்புக்கொண்டு மூனு லக்கேஜும் ஒரு பயனச்சீட்டும் வாங்கி மாதுவிடம் கொடுத்து மூட்டைகளைச் சேலம் வரை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.
பேருந்து சேலத்திற்கு ஒரு மணியளவில் சென்று சேர்ந்தது. மூட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டியவர் முன்னமே தயாராய் காத்திருந்தார். அவரிடம் மூட்டைகளை ஒப்படைத்துவிட்டு ஓட்டுநர் விலாசம் கூறிய பணிமனையை நோக்கி வேக வேகமாக நடந்தான் மாது. அரைமணி நேர நடைக்குப் பின் பேருந்துப் பணிமனைக்கு வந்து சேர்ந்தான். காவலாளியிடம் விசயத்தைச் சொல்லி உள்ளே சென்ற மாது, அலுவலகத்திற்குச் செல்ல. அனைவரும் 1.30 – 2.30 உணவு இடைவேளைக்குச் சென்று விட்டிருந்தனர். மாது வெளியே இருந்த இறுக்கையில் அமர்ந்து கொண்டான். மாது காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் மிகவும் சோர்ந்திருந்தான். பசி தாங்க முடியாமல் வெளியில் குடத்திலிருந்த தண்ணீரை வயிரு முட்டக் குடித்தான். மதியம் 2.30 மணிக்கு மேல் வந்த அலுவலர்கள் வந்த விசயத்தைக் கேட்க, நடந்தவற்றையெல்லாம் விரிவாகக் கூறி பரிதாபமாக நின்றான்.
மாது பெங்களூரில் கிளம்பிய நேரம் மற்றும் தருமபுரியில் இறங்கிய நேரம் ஆகியவற்றையும், கையில் கொண்டுவந்த பயணச்சீட்டையும் வைத்து வண்டி எண் த நா 27 ந 1057 என்று கண்டுபிடித்தனர். அதிகாரி மாதுவிடம், கண்டக்டர் காக்கி சட்டை போட்டிருந்தாரா இல்ல புளு சட்டை போட்டிருந்தாரா என கேட்டார். அதற்கு மாது புளு சட்ட தாங்க போட்டிருந்தாரு என்றான். அப்படினா இரு, பாக்கறேன் என்ற அதிகாரி. பணி முடிந்து செல்பவர்கள் கையொப்பமிடும் புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். ஆமாம்பா மோகனசுந்தரம் தான் இன்னைக்கி இறங்கியிருக்கறாப்ள. அவுரு கையெழுத்துப் போட்டுட்டு போயிட்டாரே, கணக்கும் சரியாக் குடுத்துட்டாரு எதுவும் வித்தியாசம் இல்லயே என்றார் அதிகாரி. பதட்டமடைந்த மாது ஐயா இப்ப நா என்னங்க பண்ணறது, சத்தியமா நா மீதி காச வாங்கலிங்க என்றவன். அவர எங்க பாக்கலாம் கொஞ்சம் அட்ரஸ குடுத்தீங்கன்ன நா நேர்ல போயி பாத்து வாங்கிக்குவேன் என்றான். அப்பிடி அட்ரஸெல்லாம் குடுக்கக் கூடாதுயா, இரு அவருக்கு எப்ப திரும்ப டூட்டின்னு பாத்து சொல்றேன் என்றவர். இங்க மதியம் 12.30 மணிக்கு வருவாரு என்றவாறே ஏட்டைப் புரட்டிப் பார்த்தார். ஏம்பா அவரு திங்கக்கிழமை பொங்கலன்னைக்கு மதியானந்தான் திரும்ப டூட்டுக்கு வராரு அப்ப வந்து நேர்ல பாரு என்று கூறி அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார். தயங்கித் தயங்கி வெளியே வந்த மாது எதிரில் வந்த காக்கிச் சீருடைக்காரரைப் பார்த்து, ஏங்க பெங்களூரு வண்டியில கண்டக்டரா போறாரு இல்லீங்க மோகனசுந்தரம். அவுரு வூடு எங்க இருக்குன்னு தெரியுங்களா என கேட்டான். மோகனசுந்தரம் ஓமலூர்ல இருந்து மேச்சேரி போற வழியில கிராமம். ஆனா அட்ரஸ் தெரியாது என கூறியபடியே சென்றுவிட்டார்.
மாது பித்துப் பிடித்தவனைப் போல கசிந்த கண்களுடன் பணிமனையின் வாசலில் இருந்த மரத்தடியில் வெகுநேரம் அமர்ந்திருந்தான். திரும்ப சுயநினைவு வந்தவனாய் எழுந்து மஞ்சப்பையுடன் வீதியில் நடந்தே சேலம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தான். பசி மாதுவின் கால்களை தடுமாற வைத்தது. சட்டைப் பையை துழாவிய மாதுவின் கைகளில் சில்லரைக் காசு ஒரு ரூபாய் ஐம்பது காசு கிடைத்தது. நேரே தேநீர் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் ஒரு தேனீரும் பன்னும் எவ்வளவு எனக் கேட்க. மூன்று ரூபாய் என்றார் கடைக்காரர். கையிலிருந்த ஒரு ரூபாயைக் கொடுத்து ஒரு பன்னை மட்டும் வாங்கிய மாது கை நடுங்கத் தின்றுவிட்டு வேண்டும் வரை தண்ணீரை குடித்துக் கொண்டான். பின்னர் பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்தவன் எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியவில்லை. தூங்கி எழுந்த மாது தருமபுரி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு சென்று தருமபுரி செல்லும் பயணிகள் ஒவ்வொருவரிடமும் தன் நிலையைச் சொல்லி இருபது ரூபாய்க் கேட்டுக் கெஞ்சிக்கொண்டிருந்தான். ஒருவரும் மாது சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராய் இல்லை. மாதுவை பிச்சைக்காரனைத் துரத்துவது போல் துரத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இப்படியே செல்ல, தருமபுரியை சேர்ந்த ஒருவர் மட்டும் மாதுவை குறுக்கு விசாரனை செய்தார். மாது சொல்வது ஓரளவு உண்மையெனப்படவும், மாதுவிடம் பணமாய் தரமாட்டேன் எனவும் தருமபுரி வரை பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக கூற. மாது சரி என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
பேருந்து தருமபுரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சேலத்திலிருந்து தருமபுரிக்கு ஓமலூரைக் கடந்து தான் செல்லவேண்டும். பேருந்து ஓமலூரில் நிற்கவும், விலாசம் கிடைத்திருந்தால் வீடு வரை சென்று பணத்தை மீட்டிருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால் இப்போது திரும்பி ஊருக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. சேலம் வரை சென்றும் பணத்தை மீட்க முடியவில்லையே என்ற ஏக்கமும், அந்தப் பணம் திரும்பக் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகமும் மட்டுமல்லாமல். ஒரு வேலை அவரைக் கண்டுபிடித்து நேரில் கேட்கும் பொழுது, பாக்கி கொடுத்து விட்டேன் என்றோ தனக்கு ஞாபகம் இல்லை என்றோ கூறிவிட்டாள் என்ன செய்வது என்ற பயமும் அவன் மனதை என்னவெல்லாமோ செய்தது. பேருந்தின் சன்னல் ஓரம் அமர்ந்திருந்த மாதுவுக்கு வெளியில் தெரியும் காட்சிகள் கண்களில் தேங்கியிருந்த நீரால் கலங்கலாகவே தெரிந்தது. தருமபுரி வந்து சேரும் போது மணி பத்தைத் தாண்டியிருந்தது. அரூர்க்குப் போக இனி கடைசி இரண்டு பேருந்துகள் தான் உள்ளன. பதினொரு மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது. அந்த கடைசி இரண்டு பேருந்து நடத்துனர்களும் பயணச்சீட்டுக்குப் பணம் இல்லாததால் மாதுவை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டனர். அவன் பசியில் தள்ளாடியதையும், உடைகளையும் பார்த்து குடிகாரன் என நினைத்திருக்கலாம்.
மஞ்சப்பையை தலைக்கு வைத்து கடை வாசலில் படுத்திருந்த மாதுவை கடைக்காரர் எழுப்பி விரட்டிவிட்டார். மணி காலை நாலில் இருந்து ஐந்துக்குள் இருக்கும். மாது இரவு பேருந்து நிலையத்திலேயே ஒரு கடை வாசலில் படுத்துத் தூங்கி விட்டான். கடைக்காரர் எழுப்பிவிடவும் குளிரில் நடுங்கியபடியே மீண்டும் பயணிகள் அமரும் இருக்கையில் குறுக்கிப் படுத்துக்கொண்டான். காலை ஆறு மணிக்குமேல் பயணிகள் பேச்சொலியும், பேருந்துகளின் ஒலிப்பான் சத்தமும் மாதுவின் தூக்கத்தைக் கலைத்தது. தான் சிறிது நேரம் அமர்ந்து யோசித்தவன், அருகிலிருந்த ஒரு ரூபாய் போட்டு பேசும் போனில் கையிலிருந்த ஐம்பது பைசாவைப் போட்டு, வீட்டுக்கு அருகே இருக்கும் மளிகைக் கடைக்காரர் வீட்டுக்கு பேச முயற்சித்தான். அந்த எண்ணும் முழுமையாய் நினைவுக்கு வரவில்லை, உள்ளே போட்ட ஐம்பது பைசா காசும் திரும்பத் திரும்ப கீழே வந்துவிட்டது. அவன் வைத்திருந்த சிறிய குறிப்பெழுதும் நோட்டு பெங்களூரில் வேறு சட்டை பையில் உள்ளது. சோர்வடைந்த மாது ஒரு முடிவுக்கு வந்தான். அரூர் செல்லும் பேருந்தின் அருகிலேயே அமர்ந்து கொள்வது எனவும். தனக்கு அறிமுகமான ஊர்காரர் யாராவது ஏறினால் அவர் உதவியுடன் எப்படியாவது ஊர் சென்று சேர்வது எனவும் முடிவு செய்தான். அரூர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டவனுக்கு, ஒன்றிரண்டு பேர் தனக்கு தெரிந்தவர் போல் இருக்க அருகில் சென்று பார்ப்பான் மாது. ஆனால் அது வேறு யாரோவாக இருக்கும்.
சட்டென்று யோசனை வந்தவனாய் நேற்று வந்த வண்டியை நான்கு ரோட்டில் சென்று பார்த்து உதவி கேட்களாமா என பேருந்து நிலைய மணிக்கூண்டைப் பார்க்க மணி ஒன்பதைக் கடக்க சில நிமிடங்களே இருந்தது. ஏமாற்றத்துடன் அமர்ந்தவன் முன் வயதான பிச்சைக்காரி வந்து நின்று பிச்சைக் கேக்க, தாமதிக்காமல் சட்டைப் பையில் இருந்த ஐம்பது பைசாவை எடுத்து பிச்சைக்காரியின் கையில் வைத்தான். காசுடன் கையில் வந்த குழந்தைகளின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தபடியே இருந்தான். குழந்தைகள் தன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்குமே. கணவன் கொண்டுவரும் காசில் பொங்கலுக்கு புதுத்துணியும் பலகாரமும் பிள்ளைகளுக்கு செய்து குடுக்கக் மனைவி காத்திருப்பாளே. இப்போழுது எப்படி அவர்கள் முன் வெறுங்கையுன் போய் நிற்பது. இல்லை திரும்பி பெங்களூருக்கே பொகவேண்டுமென்றாலும் பேருந்துக்குப் பணம் வேண்டுமே. இப்படி பலவாறு தனக்குள் மனப்போராட்டம் செய்து கொண்டிருந்தவனுக்கு இறுதியாக தன்னுடைய மனைவி மக்களைக் காணும் ஆறுதலே தற்பொழுது அவனுக்குத் தேவைப்பட்டது. இனியும் காத்திருந்து பயனில்லை முப்பது மைல் நடந்தே ஊருக்கு போவது என மன உறுதியுடன் புகைப்படத்தை சட்டைப் பையில் வைக்கப் போக.
மாதுவின் தோளை பின்னாலிருந்து ஒருவர் வேகமாய்த் தட்டினார், திடுக்கிட்டுத் எழுந்தபடியேத் திரும்பிப் பார்த்தான் மாது. பின்னால் சுமார் ஐம்பத்தைந்து வயதுடைய வெள்ளைச் சட்டை அணிந்த நபர் தன்னைப் பார்த்து முகமலர்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் உற்றுப் பார்த்த மாதுவுக்கு யாரென்று பிடிபடவில்லை. மீண்டும் சிரித்தபடியே இருந்த அந்த நபரைப் பார்த்த மாதுவுக்கு கண்கள் குளமாயின. எதிரில் நின்றிருந்தவர் நடத்துனர் மோகனசுந்தரம். தன்னிலை மறந்து இருவரும் சிறிது நேரம் சிரித்தபடியே இருந்தனர். முதல் வேலையாக மோகனசுந்தரம் தொள்ளாயிரத்தி ஐம்பது ரூபாயை மாதுவின் உள்ளங்கையில் வைத்து அழுத்தி தனது இரு கைகளால் இருக்கிப் பிடித்தபடியே இருந்தார். பலமிழந்த மாதுவின் கைகளை அவரால் உணர முடிந்தது. மாதுவின் கோலம் பலவாரான எண்ணங்களை நடத்துனர் மோகனசுந்தரத்தின் மனதில் உணர்த்த. மாதுவின் கையைப் பிடித்து அழைத்துச் பழச்சாறு கடைக்குச் சென்றார். மறுமொழி பேசாமல் மோகனசுந்தரத்தின் பின் சென்றான் மாது.
பழச்சாறு மாதுவின் தொண்டைக்குள் செல்வதை விவரிக்க முடியாது. மாது இரண்டு கோப்பைகள் வாங்கிக் குடித்தான். பழச்சாற்றைக் குடிக்கும் பொழுது ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். குடித்துவிட்டு கடைக்காரருக்கு மோகனசுந்தரமே காசு கொடுத்தார். இறுக்கிப் பிடித்திருந்த கையை விரித்துப் பார்த்தான் மாது. கையில் இருக்கும் பணம் வேர்வையில் நனைந்திருந்தது. பணத்தை இடுப்பு வேட்டியில் சுருட்டிவிட்டு நடந்தபடியே நடத்துனர் மோகனசுந்தரத்தைப் பார்த்து நடந்தவையற்றையெல்லாம் விவரித்த மாது பயணச்சீட்டை சட்டைப் பையிலிருந்து எடுத்து மோகனசுந்தரத்திடம் நீட்டினான். பயணச்சீட்டை கையில் வாங்கிய மோகனசுந்தரம் அதை கசக்கி எறிந்துவிட்டு, மன்னிச்சுக்கப்பா… என்னால நீ எவ்வளவு சிரமப்பட்டுட்ட. நான் வண்டியிலிருந்து இறங்கி கணக்கு குடுக்கும் போது தான் மீதி சில்லறை தராம விட்டுட்டோம்னு தெரிஞ்சிது. ஆனா நீ வருவையினு நேத்து உடனே கெளம்பி சேலம் பஸ் ஸ்டேண்டுக்கு வந்துட்டேன். நீ எப்படியும் பின்னாடி வண்டிய புடிச்சி வருவையினு ரெண்டு மணி நேரம் அங்கயே இருந்தேன். நீ வரல, அதுக்கப்புறம் கெளம்பி வீட்டுக்குப் போயிட்டேன். ராத்திரி ஒரே யோசனை ஒரு வேளை சேலம் வர்ரதுக்கு பணம் இல்லையினா என்ன பண்ணுவேன்னு நினைக்கும் போதே எனக்குத் தூக்கம் போச்சு. நீ பெங்களூர்ல டிக்கெட் வாங்கும் போதே உங்கிட்ட சில்லறை இல்லைன்னு சொன்னது ஞாபகம் வந்துது. நீ கீழ உக்காந்து தூங்கும் போது உன் கையில இருந்த புள்ளைங்க போட்டோ கீழ விழுந்திடுச்சு. நாந்தான் அத உன் சட்டப் பையில வச்சேன். இன்னைக்கு காலைல தூங்கியும் தூங்காம எந்திரிச்சி ஒரு வேளை அதே பஸ்ஸ காலைல 8.30 மணிக்கு பாக்க வந்தியன்னா உன்ன புடிச்சிறலாமுனு காலையில 8 மணிக்கே நால்ரோட்டுக்கு ஓமலூர்ல இருந்து வந்துட்டேன். 8.30 மணிக்கு நீ வந்த வண்டிய நிறுத்தி மறுபடியும் நீ விசாரிக்க வந்தையினா உங்கிட்டக் குடுக்கச் சொல்லி என் மகன் வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டு எதுக்கும் பஸ் ஸ்டேண்டுக்குள்ள ஒரு நட போலான்னு வந்தேன். நீ அதே உன் புள்ளைங்க படத்தை கையில வெச்சிகிட்டு என் கண்ணுல பட்ட என்று பெருமூச்சுடன் கூறி முடித்தார்.
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியில. உங்க மேல எந்த தப்பும் இல்ல. நான் தான் தூக்கக் கலக்கத்துல மீதி வாங்காம எறங்கீட்டேன் என்றான் மாது. நீ இரண்டு நாள சாப்பிடாம பட்டினியா இருக்க. வா ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் புறப்படு என்றார் மோகனசுந்தரம். இல்ல ஜூஸ் குடிச்சதே வயிரு நெரம்பிடுச்சு அப்ப நா கெளம்பறேன் என்ற மாதுவை கட்டாயப்படுத்தாமல் அரூர் செல்லும் பேருந்து நிற்கும் இடம் வரை கூடவே நடந்து வந்தார். அப்பொழுது தான் அரூர்க்குச் செல்லும் பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து அவர்கள் அருகே நின்றது. ஆட்கள் ஒவ்வொருவராக இறக்கிக் கொண்டிருந்தனர். பேருந்தின் உள்ளே இருந்து அப்பா… அப்பா என்று அழைக்கும் சத்தம் கேட்டு உள்ளே பார்க்க, மாதுவின் மனைவி குழந்தைகளின் கையைப் பிடித்தபடி படிக்கட்டில் இறங்கி வந்தாள். குழந்தைகள் இறங்கி ஓடி வந்து குதூகலமாய் மாதுவை கட்டிக்கொண்டனர். மனைவியும் அருகில் வந்து, இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க. நேத்தே வறன்னு சொன்ன என பொய்க் கோபமாகப் பார்க்க. இல்லடி நேத்திக்கி வேலை முடியல. இப்பத்தான் வந்தேன். நீங்க எங்க தருமபுரி வந்திருக்கீங்க. என்றான் பழைய மாது. அதற்கு அவன் மனைவி, ஆமா நேத்தே வரன்னுட்டு நீ வல்ல. புள்ளைங்களுக்கு புது துணி எடுக்கவே இல்ல. அதான் எப்பிடியும் நீ காசு கொண்டு வந்துருவையினு பக்கத்துல கடன் வாங்கீட்டு புள்ளைங்களுக்கு துணியெடுக்க கூட்டியாந்தேன். இது யாரு என்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நடத்துனர் மோகனசுந்தரத்தைப் பார்த்து மாது மனைவி கேட்க. மோகனசுந்தரம் முந்திக் கொண்டு, நாங்க பெங்களூர்ல இருந்து பஸ்ஸுல ஒன்னா வந்தோம் என்றார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தைக் கடந்து ஒரு சேலம் பேருந்து ஊர்ந்து செல்ல, அதன் நடத்துனர் மோகனசுந்தரத்தைப் பார்த்ததும். சுந்தரண்ணா எங்கண்ணா இங்க. சேலம் வரீங்களா என்றார். ஆமாம்பா ஓமலூர்ல எறங்கிக்கறேன் என்று கூறியபடியே மாதுவிடம் சைகை காட்டிவிட்டு ஓடி சேலம் பேருந்தின் பின் வாசற்படியில் ஏறி திரும்பிப் பார்த்தார். மாதுவின் குழந்தைகள் இரண்டும் மோகனசுந்தரத்தைப் பார்த்து, தாத்தா டாட்டா… தாத்தா டாட்டா என்றனர். மோகனசுந்தரமும் புன்னகைத்தபடியே பதிலுக்கு டாட்டா காட்டிவிட்டு.
போலாம் ரைட் என்றார்…..
-ஆரன் 11.06.2021
0 comments:
Post a Comment