பேய்க் கிழவன்

         


            முருக விலாஸ் - வாசல் கதவருகே ஐந்தாறு சிறுவர்கள் கதவை பிடித்துக் கொண்டு, டேய் இந்த வீட்டுப் பின்னாடி தான்டா பேய்க் கிழவன் இருக்கறான் என்று ஒருவர்க்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டனர். முருக விலாஸ் மொத்தம் ஒன்பது வீடுகள் கொண்ட குடியிருப்பு. அம்மாப்பாளையம் அருகே உள்ள பழைய வண்டிப் பேட்டைப் பகுதி. சேலத்தைச் சேர்ந்த வெள்ளி கடைக்காரர் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

அந்த வீட்டின் பின்புறம் ஒதுக்குப் புறத்தில் உள்ள சிமெண்ட் அட்டை போட்ட ஒத்தை அறையில் தான் சிறுவர்கள் பேய்க் கிழவன் என்று சொன்ன அந்தப் கிழவர் வசிக்கிறார். அவர் அடிக்கடியெல்லாம் வெளியே வர மாட்டார். இரண்டு நாளுக்கொருமுறை தான் கடைக்குப் போக வெளியே வருவார். அண்மைக் காலங்களில் அந்த வீதியில் புதிதாய் வீடுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டதால் கடைக்கு அதிகத் தொலைவு செல்லத் தேவையில்லை.

பெரும்பாலும் இரவு நேரங்களில் கடைக்குப் போக வெளியே வரும் கிழவருக்கு ஒல்லியான தேகம், மேலாடை அணியாத உடம்பு. தலையை மேலிருந்து கீழாக துண்டால் முகத்தைச் சுற்றி ஒரு பக்கம் மறைத்திருப்பார். அவர் வலது பக்க முகத்திலிருந்து வலது பக்க உடம்பு வரை வெந்து போனத் தழும்புகள். வலது பக்கக் கண் மட்டும் கீழ்த் தோல் வெந்து இமை மூடமுடியாமல் பெரிதாய்க் காட்டும். அவர் கடைக்குச் சென்று திரும்பி வரும் வரை அந்தப் பகுதியினர் ஒருவாறு அவரைப் பீதியுடன் தான் பார்ப்பார்கள். தெரு நாய்கள் மட்டுமே அவர் சென்று திரும்பும் வரை வாலாட்டிக் கொண்டே பின் செல்லும்.

வள்ளி டெக்ஸ் இல்ல திருமண வாழ்த்துப் போஸ்டர்கள் சேலத்தின் வீதிகளிலெல்லாம் அலங்கரித்துக் கொண்டிருந்தது. கடையின் நிறுவனர் பெரியசாமி – வள்ளியம்மாள் தம்பதியினரின் கடைக்குட்டியின் திருமண போஸ்டர்கள் தான் அவை. பெரியசாமி-வள்ளியம்மாள் தம்பதிக்கு மொத்தம் மூன்று வாரிசுகள், மூத்தவள் தனம், இரண்டாவது மகன் வரதன் மற்றும் மூன்றாவது பெண் இலட்சுமி. வீட்டில் கடைசி என்பதால் இலட்சுமிக்கு அதிக செல்லம்.

வீட்டில் கடைசித் திருமணமாகையால் பெரியசாமி கொஞ்சம் கூடுதலாகவே செலவு செய்து வந்தோரை வாய்ப் பிளக்க வைத்துவிட்டார். பெரியசாமி சேலம் கடைவீதியில் வள்ளி டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். பெரியசாமி சிறு வயதிலிருந்தே நல்ல உழைப்பாளி. தன்னுடைய கடுமையான உழைப்பால் உருவாக்கிய கடை தான் வள்ளி டெக்ஸ். இன்று பத்து பேர் வேலை பார்க்குமளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் வள்ளியம்மாள் முக்கியக் காரணம். திருமணமான நாள் முதல் வள்ளியம்மாள் அனைத்து விதங்களிலும் பெரியசாமிக்கு உதவியாய் இருந்தது இந்த நிலைக்கு உயர காரணம். தற்பொழுது மகன் வரதனும் கடையைப் பார்த்துக் கொள்கிறான்.

 நல்ல வருமானம் வரவே தான் பட்ட சிரமங்களை தன் குழந்தைகள் படக்கூடாதென கொஞ்சம் தாராளமாகவே செலவு செய்துவந்தார். அவ்வப்போது வள்ளியம்மாள் பெரியசாமியை கண்டிப்பாரே தவிர, அவர் மீது இருக்கும் அன்பு மிகுதியால் குழந்தைகளுக்குச் செய்யும் செலவுகளை கண்டும் காணாமல் இருந்து விடுவார். பெரியசாமிக்கும் வள்ளியம்மாள் மீது அவ்வளவு அன்பு.

இலட்சுமியின் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பெரிய மகள் தனம் வீட்டுக்கு பிரச்சனையைக் கொண்டு வந்தாள். தங்கை இலட்சுமிக்கு செய்த செலவுகளும், சீதனமும் தனம் வீட்டில் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தது. ஒருவாறு பெரியசாமியும், வள்ளியம்மாளும் இரவு தனத்தை சமாதானம் செய்து ஓரிரு மாதங்களில் இலட்சுமிக்கு செய்ததற்கு ஈடாக அவளுக்கும் செய்வதாக உறுதி அளித்தனர்.

அந்த சமயங்களில் கடைவீதியிலும் புதிது புதிதாகவும், பிரம்மாண்டமாகவும் ஜவுளிக்கடைகள் முளைக்க ஆரம்பித்தன. போதாக் குறைக்கு அரசுத் தேர்வு எழுதியிருந்த மருமகளுக்கு பணம் கட்டினால் வேலை உறுதி என புதிதாய் ஒரு குண்டைப் போட்டான் மகன் வரதன். பெரியசாமிக்கும் வள்ளியம்மாளுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. தங்களால் ஆன வரை நிலைமையைப் புரியவைக்கப் பார்த்தார்கள், மருமகள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

பணம் கட்டவேண்டிய நாள் நெருங்கவே தாங்கள் இருக்கும் வீட்டை விற்பனை செய்வது என முடிவுக்கு வந்தனர். ஏற்கனவே இலட்சுமித் திருமணத்திற்கு வாங்கியக் கடன், தனத்திற்கு செய்வதாக கொடுத்த வாக்கு, இப்பொழுது அரசு வேலைக்கு கொடுக்க வேண்டிய பணம். இவையனைத்தையும் ஒருசேர கடனாய் சுமப்பதை விட வீட்டை விற்பதே சிறந்தது என முடிவுக்கு வந்தனர்.

முதன்முதலில் வாங்கிய வீடு பெரியசாமிக்கு மனசெல்லாம் பாரமாகிவிட்டது. வள்ளியம்மாள் தான் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, இதெல்லாம் நம்ம புள்ளங்களுக்குத் தான சம்பாதிச்சோம். இப்பவும் அவங்களுக்குத் தான் செய்யறோம். ஒருத்தருக்குச் செஞ்சு ஒருத்தருக்குச் செய்யலன்னா நல்லாருக்காதுங்க. புள்ளைங்களும் சந்தோஷமாயிடுவாங்க, மருமகளுக்கும் வேலை கெடச்சிடும். கவலைய விடுங்க திரும்ப சம்பாதிச்சு இடத்த வாங்கி புதுசா வீடு கட்டிக்கலாம் என்றாள்.

பேய்க் கிழவன் வரான், பேய்க் கிழவன் வரான்னு வீதியில விளையாடிக்கிட்டிருந்த பசங்களெல்லாம் ஆளுக்கொரு திசையில வீட்டுக்குள்ள ஓடி மறைய, கிழவர் குனிந்தபடி வீதியில் வந்து கொண்டு இருந்தார். இடது தோலில் ஒரு மூட்டையும், வலது கையில் ஒரு பையையும் தூக்கிக் கொண்டு இல்லம் நோக்கி சென்றார். வழியில் வீட்டு வாசலில் கைக்குழந்தைக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்த பெண், கிழவனைக் காட்டி பயமுறுத்தி சோறு ஊட்டினாள்.

பிரதானக் கதவைத் திறந்து உள்ளே சென்ற கிழவர் வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்ய வந்திருப்பதைக் கண்டார். வீட்டு உரிமையாளரிடம் சில குடியிருக்கும் பெண்கள் பேசிக் கொண்டிருக்க கிழவரைக் கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டனர். வீட்டு உரிமையாளரைக் கடந்து சிறிது தூரம் சென்று நின்ற கிழவர் திரும்பி பார்த்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் பேசிக் கொண்டனர்.

கிழவர் சென்றதும் மொட்டை மாடியில் தனி வீட்டில் குடியிருக்கும் பெண் வீட்டு உரிமையாளரிடம், ஏங்க அந்த ஆளப் பாத்தாலே பயமா இருக்குங்க. திடீர்னு மொட்டை மாடிக்கு வராரு. எங்க வீட்டையே ஒரு மாதிரி படிக்கட்டு வரைக்கும் திரும்பித் திரும்பி பாத்துக்கிட்டே போறாருங்க. அந்த ஆளு போன கொஞ்ச நேரங்கழிச்சு தான் படபடப்பே குறையுது என்றாள். கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்மணி, அவரக் கண்டாலே குழந்தைங்க எல்லாம் பயப்படுதுங்க, விளையாடிட்டு இருக்கற குழந்தைங்ககிட்ட கிட்ட கிட்ட போறாருங்க என புகார் தெரிவித்தனர். கிழவர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்ற வீட்டு உரிமையாளர். கிழவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார்.

பெரியசாமி வீட்டை விற்று சில ஆண்டுகள் கடந்து விட்டிருந்தது. மருமகளுக்கு அரசு வேலை கிடைத்ததும் மகன் வரதன் தனிக்குடித்தனம் சென்று விட்டான். ஜவுளிக்கடையில் வியாபாரம் முன்பு போல் இல்லை. தானும், மகன் வரதனும் தவிர மேலும் இரண்டு பேர் மட்டுமே வேலைக்கு இருக்கின்றனர். கடைவாடகை, வீட்டு வாடகை, வீட்டுச் செலவு மற்றும் வள்ளியம்மாளுக்கு மருத்துவச் செலவு என தேவை கூடிக்கொண்டே சென்றதால் நிலை தடுமாற ஆரம்பித்தது.

ஒரு நாள் கடையில் நீண்ட யோசனையில் இருந்து தெளிந்த வரதன் தந்தைப் பெரியசாமியைப் பார்த்து, அப்பா இப்படியே போனால் நஷ்டம் அதிகமாயிடும். பேசாம இந்தக் கடையை காலி செஞ்சிட்டு, நாம அம்மாபாளையத்திலயே சின்னதா ஒரு கடைய பாத்து மாத்திக்கலாம் பா. அம்மாபாளையத்தில பெருசா ஜவுளிக்கடைங்க ஒன்னுமில்ல, நீங்க என்ன சொல்லறீங்க என்க. நான் இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் அம்மா கிட்ட பேசிட்டு நாளைக்கு சொல்றேன்பா என்றார் பெரியசாமி.

இரவு ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பெரியசாமியின் அருகே வந்தமர்ந்தார் வள்ளியம்மாள். என்னங்க ஏதோ சிந்தனையிலயே இருக்கீங்க, எனக் கேட்க. இல்ல வள்ளி, இன்னைக்கு கடையில வரதன் ஒரு விசயம் சொன்னான். அதான் ஒரே குழப்பமா இருக்கு, உங்கிட்டயும் எப்படிச் சொல்லறதுனு தெரியில என்றார் பெரியசாமி. அதற்கு வள்ளியம்மாள், அதெல்லாம் ஒன்னும் நினைக்காதிங்க. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க என்றார். வரதன் கடைய காலி பண்ணிடலாம்னு சொல்றாம்மா. இதுக்கு மேல நஷ்டப்பட வேண்டங்கறான். காலி பண்ணீட்டு அம்மாபாளையத்துல சின்னதா ஒரு கடை பாத்துக்கலாம்னு சொல்றாம்மா என்ன செய்யலாம் நீ சொல்லு என்றார் தலையை குனிந்தபடியே பெரியசாமி. இருங்க வரேன்னு சமையலறைக்குச் சென்ற வள்ளியம்மாள் சிறிது நேரம் வரவில்லை. எழுந்து சமையலறைக்குச் சென்று பார்த்தார் பெரியசாமி. சுவரில் சாய்ந்தபடியே நின்றிருந்த வள்ளியம்மாள் கன்னங்களில் தாரை தாரையாக கண்ணீர்.

காலை ஐந்து மணி, என்னங்க. என்னங்க என பெரியசாமியை எழுப்பினார் வள்ளியம்மாள். தூக்கத்திலிருந்து எழுந்த பெரியசாமி வள்ளியம்மாளைப் பார்த்தார். வள்ளியம்மாள் நேரமே எழுந்து குளித்து கையில் காபியுடன் சிரித்தபடி நின்றிருந்தார். இரவெல்லாம் தூக்கத்தில புலம்பிகிட்டே இருந்தீங்க, எனக்குத் தான் தூக்கமே வல்ல. அதான் நேரமே எந்திரிச்சு குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் என்றார் வள்ளியம்மாள். வள்ளியம்மாள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் பெரியசாமி. இரவு பார்த்ததுக்கும் காலையில் பார்ப்பதற்கும் வள்ளியம்மாளிடம் அவ்வளவு மாற்றம்.

கிழவர் மளிகைக் கடை வாசலில் எவ்வளவு நேரம் நின்றிருந்தார் எனத் தெரியவில்லை. கடைக்காரர் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாரே தவிர கிழவரைக் கண்டு கொள்ளவேயில்லை. கையில் ஒரு பத்து ரூபாய்த் தாளை இருக்கப் பிடித்துக் கொண்டே அவ்வப்போது கடைக்காரரை நோக்கி கையை நீட்டிக் கொண்டே இருந்தார். கடைக்கு வருபவர்கள் எதேச்சையாக கிழவரைப் பார்த்தால் திடுக்கிட்டு தள்ளி நிற்பர். இதைப்பார்க்கும் கடைக்காரர் எரிச்சலுடன், பெரியவரே வர்றவங்களுக்கு இடைஞ்சல் பண்ணாம கொஞ்சம் தள்ளி நில்லுங்க என எரிந்து விழுவார்.

கிழவரும் முடிந்தவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுங்கி நின்று கொள்வார். எல்லாம் அந்தக் கடைக்காரர் இறுதியாய்க் கொடுக்கும் சில உபரிக் காய்களுக்காகத் தான். அவரால் அதற்கு மேல் செலவு செய்ய முடியாத சூழல். அதனால் ஒரு ரூபாய்க்குக் கூட ஒரு சில நாள் காய் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டுக் காத்திருப்பார். ஆனால் ஒரு நாளும் கடனுக்குக் கேட்க மாட்டார்.

வண்டிப்பேட்டை முருகவிலாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு. பெரியசாமியின் நண்பர் வீடு. முதல் மாடிக்கு வீட்டுப் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டிருந்தனர் பெரியசாமியும் வரதனும். வீட்டுக்குள் இறக்கி வைக்கும் இடங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார் வள்ளியம்மாள். அடுத்த வாரம் அம்மாபாளையத்தில புது கடை திறப்பு. எல்லாம் பெரியசாமிக்கு வள்ளியம்மாள் என்ற ஒரே நம்பிக்கைப் பெண்மணியினால் நடந்தேறி வரும் மாற்றம். இப்பொழுதெல்லாம் வள்ளியம்மாளும் பெரியசாமியுடன் காலையியேயே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார். இருவருக்கும் இழந்ததை மீட்க இருக்கும் ஒரே உறுதி நம்பிக்கை மட்டுமே. சிந்தனையின் வேகத்திற்கு உடலும், சூழலும் காலமாற்றத்திற்கு ஒத்துழைக்குமா என்ன?

மூன்றாண்டுகள் முயற்சித்தும் எதிர்பார்த்தபடி புதிய கடையில் வியாபாரம் ஆகவில்லை. என்ன செய்வது எனப் புரியாத சூழல். மேலும் வரதன் மனைவிக்கு இனிமேலும் வரதன் அத்தொழிலில் இருப்பது பிடிக்கவில்லை. சிறு சிறு சண்டை பெரிதாக ஆரம்பித்தது. இறுதியில் கட்டாய பணி இடமாறுதல் பெற்று ஊரை விட்டே குடும்பத்துடன் காலி செய்து சென்றுவிட்டனர். வரதனும் அந்த ஊரிலேயே வேறு வேலைக்குச் சென்றுவிட்டான். மகனின் பலத்தை நம்பி அனைத்தையும் எதிர்கொள்ள தயாராய் இருந்த பெரியசாமி தற்பொழுது நற்றாற்றில் விட்ட நிலைக்கு வந்து விட்டார். கூடவே பேரப் பிள்ளைகளைப் பிரிந்தது பெரியசாமிக்கும் வள்ளியம்மாளுக்கும் ஆறாத மன வேதனையை உண்டாக்கி விட்டது.

கையில் இருந்த துணி இருப்புகளையெல்லாம் தெரிந்த ஒருவரிடம் பாதி விலைக்குக் கொடுத்துவிட்டு இந்தக் கடையையும் காலி செய்துவிட்டார். கடையின் முன் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்த வகையில் வந்த பணம் இவை மட்டும் தான் இப்பொழுது இருவருக்கும் மீதி. பெரியசாமி கிட்டத்தட்ட ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. அவருக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஒருபோது எதிர்பார்க்கவில்லை. துக்கம், ஏக்கம், வெறுப்பு என அவர் மனம் அல்லல் படுவதை வள்ளியம்மாளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு வள்ளியம்மாளுக்குச் தலைச் சுற்றல் அதிகமாக, மருத்துவரைப் பார்த்தால் வள்ளியம்மாளுக்குச் சக்கரை உடம்பில் அதிகமாயிருந்தது.

மருத்துவரின் ஆலோசனைப்படி அடுத்த நாள் முதல் இருவரும் காலையும் மாலையும் காலார சிறிது நேரம் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர். சிறிது நேர நடைக்குப் பின் வீதியின் எல்லையில் உள்ள பிள்ளையார் கோவில் மரத்தடியில் அமர்ந்து பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர். வழக்கமாக வள்ளியம்மாள் தான் பேசுவாரே தவிர பெரியசாமி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருப்பார். அன்று வள்ளியம்மாள் பெரியசாமியிடம், ஏங்க. நீங்க இப்படியே இருக்கறது என்னால பாக்க முடியலைங்க. தயவு செய்து பழசையெல்லாம் மறந்தரலாங்க. கையில கொஞ்சந்தான் பணம் இருக்கு இதையும் நோய்க்கு வைத்தியம் பாத்தே செலவாயிடக் கூடாதுங்க. அப்பறம் உங்களுக்கும் ஒடம்புக்கு ஏதாவது ஒன்னுன்னா ரெண்டு பேருக்குமே ரொம்பச் சிரமமாயிடும். போகற காலம் வரைக்கும் நாம யாருக்கும் பாரமா இருந்திட வேண்டாங்க. இருக்கற நிலைமை நம்ம புள்ளைங்களுக்குத் தெரியும். அவங்கனால முடிச்சத செய்யட்டும். என்ன சொல்லறீங்க என பெரியசாமியின் முகத்தைப் வள்ளியம்மாள் பார்க்க. பெரியசாமி வள்ளியம்மாள் கண்களை ஒரு நிமிடம் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, வாம்மா நேரமாயிடிச்சி வீட்டுக்குப் போலாம் என எழுந்தார்.

வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம் வள்ளியம்மாள் சமாதானம் சொல்லிக் கொண்டே வர, பெரியசாமியோ வழக்கம் போல கையிலிருந்த பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாகத் தெரு நாய்களுக்கு கொடுத்துக் கொண்டே வந்தார். முதல் மாடிக்கு பெரியசாமியின் கையைப் பிடித்தபடியே தாங்கித் தாங்கி ஏறி வந்த வள்ளியம்மாள் பெரியசாமியிடம், அடுத்த வாரம் மொட்டை மாடியில குடியிருக்கறவுங்க காலி பண்ணறாங்கலாம். நம்ம ரெண்டு பேர்க்கு இவ்வளவு பெரிய வீடு வேண்டாங்க. உங்க நண்பருக்கு இப்பவே சொல்லி வச்சிருங்க. நாம மேல குடி போயிரலாம் என்றார். மொட்டை மாடி வீட்டுக்கு இரண்டே அறை. ஒன்று சமையலறை இன்னொன்று படுக்கைக்கு. கழிவறை வெளியே தனியாய் இருக்கும். பெரியசாமி மறுப்பேதும் கூறவில்லை. அடுத்த மாதமே மொட்டை மாடிக்கு குடி மாறினர்.

முருகவிலாஸ் குடியிருப்பு வாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். இனிமேல் அந்தக் கிழவரை வீட்டுக்கு மேலே செல்ல அனுமதிக்கக் கூடாது என்பது தான் அது. ஆனால் யார் அவரிடம் இதை கூறுவது என்பது தான் இப்பொழுது தயக்கம். எனினும் அவர் மேலே வருவதைத் தடை செய்ய அனைவரும் உறுதியாக இருந்தனர். அடுத்த நாள் காலை குழந்தைகள் பயந்தபடி வீட்டுக்குள் ஓடி வருவதை கண்ட முதல் மாடியில் குடியிருக்கும் பெண் வீட்டுக்குள் சென்று.

ஏங்க அந்தப் பேய்க் கிழவன் மேல மொட்டமாடிக்கு போறாங்க, என கணவனைக் கூப்பிட்டுச் சொல்ல. வீட்டிலிருந்து வெளியே வந்து படியேரும் கிழவரைப் பார்த்து, ஏங்க பெரியவரே எங்க மேல போறீங்க. இனிமே நீங்க மேலயெல்லாம் வராதீங்க. அங்க என்ன வேல உங்களுக்கு, என சத்தம் போட்டான். சத்தம் கேட்டு மற்ற வீடுகளில் குடியிருப்பவர்களும் சேர்ந்து கொள்ள ஆளுக்கு ஒருவாறு வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டனர். சிறிது நேரம் அன்னாந்துப் பார்த்தபடி நின்ற கிழவர் தலையைக் குனிந்தபடி தயங்கித் தயங்கி கீழே இறங்கிச் சென்றார். தன்னுடைய அறைக்குச் சென்ற கிழவர் கட்டிலை வாசலில் போட்டுப் படுத்தவர், அந்த இரண்டு மாடி கட்டிடத்தின் உச்சியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசி வரை இமைக்கவில்லை.

வள்ளியம்மாள் இக்கட்டான அந்த சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். கடைக்குப் போன பெரியசாமியை வெகு நேரம் காணாது வெளியே வந்து மொட்டை மாடியில் இருந்து எட்டிப் பார்த்தார். வீதியில் தூரத்தில் பெரியசாமி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஆறுதலடைந்தவர், அவரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நடையிலிருந்த தளர்வு, நடக்கும் விதம் வள்ளியம்மாளை என்னவோ செய்தது. அவர் கீழே வீட்டின் நுழைவாயிலுக்குள் நுழையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா அடுப்புல ஏதோ தீயிர வாசம் வருது பாருங்க என்று துணி காயப் போட வந்த கீழ் வீட்டுப் பெண் கூற. சுயநினைவுக்கு வந்த வள்ளியம்மாள் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்தது நினைவுக்கு வந்து நேரே உள்ளே சென்றார். சட்டியில் இருந்த எண்ணெய் தீப்பிடித்து எரிய, தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அடுப்பிலிருந்தச் சட்டியை முந்தானைச் சீலையால் இறக்க முயற்சிக்க கை நழுவி சட்டி தனது காலடியில் விழுந்து நெருப்பு குபீரென்று வள்ளியம்மாளின் புடவையில் பற்றிக் கொண்டது.

வள்ளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கீழ் வீட்டுப் பெண் பதறியபடி முதல் மாடிக்கு சென்று சத்தம் போட்டு ஆட்களை உதவிக்குக் கூப்பிட, முதல் மாடிக்காரர்கள் ஓடோடி மேலே சென்றனர். சத்தம் கேட்டுப் படியேறிக் கொண்டிருந்த பெரியசாமி கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு மொட்டை மாடிக்கு வேக வேகமாகச் சென்றார். அங்கே கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த வள்ளியம்மாள் மீது குழாயில் தண்ணீரைப் பிடித்துப் பிடித்து ஊற்றிக் கொண்டிருந்தனர். என்னங்க கிட்ட வராதிங்க….. கிட்ட வராதிங்கவென்று கத்திக் கொண்டிருந்த வள்ளியிடம் யாரும் எதிர் பாராத நேரத்தில் பெரியசாமி, ஓடிச் சென்று வள்ளியம்மாளைப் பிடித்துக் கொண்டார்.

அரசு மருத்துவமனையில் என்னங்க…கிட்ட வராதிங்க…..என்னங்க… கிட்ட வராதிங்க என்றபடியே வள்ளியம்மாள் உயிர் பிரிந்தது. பக்கத்துப் படுக்கையில் ஒரு பக்கம் வெந்த நிலையில் இருந்த பெரியசாமிக்கு சுயநினைவில்லை. புண் ஆறிய பின் பெரியசாமியை வீட்டுக்கு கூட்டி வந்த மகள்கள் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டனர். வரதன் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் அவனுடன் செல்ல மறுத்து விட்டார் பெரியசாமி. தனியே வாசலில் கட்டிலில் அமர்ந்தபடியே வீட்டையே வெறித்துப் பார்த்தபடியே இருப்பார். அதன் பின்னர் சிறிது நாட்களில் யாருடனும் பேசுவதை நிறுத்தி விட்டார்.

வீட்டு உரிமையாளர் பெரியசாமியின் நிலையைக் கருதி அங்கே குடியிருக்க வேண்டாமெனவும், மேலும் அந்த வீட்டை சீரமைக்க வேண்டுமெனவும் கூற. அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கிய பெரியசாமி. இந்த வீட்டை விட்டு மட்டும் போகச்சொல்ல வேண்டாமென கெஞ்சினார். வீட்டின் பின்புறம் இருக்கும் அந்த ஒத்தை அறையையாவது தரச் சொல்லி வேண்டினார். வீட்டு உரிமையாளருக்கு மனசு கேட்கவில்லை. மீதமிருந்த பாத்திரங்களையெல்லாம் எடுத்து வீட்டுக்குப் பின்புறம் இருந்த பழைய சாமானங்களைப் போட்டு வைக்கும் ஒத்தை அறையில் வைத்துக் கொள்ள சம்மதித்தார். வள்ளியம்மாளின் நகைகளை விற்று வங்கியில் பெரியசாமியின் பெயரில் போட்டு வைத்தனர் மகனும், மகள்களும். அதில் வரும் சொற்ப வட்டியில் வாழ்கையை வாழப் பழகிக் கொண்டார். ரேஷனில் வாங்கும் பொருட்களும், ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் கெஞ்சி கடைக்காரரிடம் வாங்கி வரும் பொருட்களை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.

பெரியசாமிக்கு வயதாகிவிட்டது. அந்த ஒன்பது வீடுகளுக்கும் பல பேர் குடிவந்து மாறிப் போய் விட்டனர். பெரியசாமி மட்டும் நிரந்தரமாக அங்கேயே இருக்கிறார். வள்ளியம்மாள் நினைவு வந்தால், மெல்லப் படியேறிப் போய் மொட்டை மாடியில் தான் குடியிருந்த வீட்டின் முன் சிறிது நேரம் நின்று வெறித்துப் பார்த்து விட்டு திரும்ப வந்து விடுவார். எப்பொழுதாவது மகன் குடும்பமோ அல்லது மகள்கள் குடும்பத்தினரோ பெரியசாமியைப் பார்த்து விட்டு செல்வர். அவர்களிடம் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. புதிதாக குடி வருபவர்களும் அக்கம் பக்கத்தினரும் பெரியசாமியை அருவருப்பாகத் தான் பார்ப்பார்கள். சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஏன் குழந்தைகளுக்குக் கூட பெரியசாமியின் உருவத்தைக் கண்டால் பயம். அவருக்கு அப்பகுதியினர் வைத்தப் பெயர் பேய்க் கிழவன்.

-ஆரன் 31.05.2021

0 comments:

Post a Comment