ஜூன் 6 வெள்ளிக்கிழமை 1997-ம் ஆண்டு ஸ்ரீதரன்-சுந்தரி தம்பதி வந்த வாடகை வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஸ்ரீதரன் முன்பக்க இருக்கையில் இருந்து இறங்கி, பின்பக்கக் கதவை திறந்துவிட்டான். இருக்கையிலிருந்து இறங்க கதவருகே நகர்ந்து வந்த சுந்தரியிடமிருந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டான். சுந்தரி இறங்கியதும் திரும்ப குழந்தையை சுந்தரியிடமே கொடுத்துவிட்டு, வண்டியில் இருந்த பெட்டி பைகளை இறக்கி வைத்துவிட்டு, வண்டிக்காரனுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பினான்.
வீட்டு வாசலில் அருகில் வசிப்பவர்கள் பத்துப் பேர் வரை குழுமியிருக்க நடுவில் சுந்தரியின் தாய் ஆரத்தித் தட்டுடன் தயாராய் இருந்தார். முகமகிழ்ச்சியுடன் வாசலுக்கு நேர் நின்ற தம்பதியைக் குழந்தையுடன் மூன்று முறை ஆரத்தித் தட்டை இடமும் வலமும் சுற்றி பொட்டு வைத்துவிட்டு, தட்டிலிருந்த கரைசலை சாலையின் குறுக்கே ஊற்றி விட்டு வந்தாள் சுந்தரியின் தாய்.
ஒரே சிரிப்பும், மகிழ்ச்சியுமாக அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். ஒவ்வொருவரும் தம்பதியை மாறி மாறி நலம் விசாரித்தனர். குழந்தையை ஆளாளுக்கு தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினர். சிலர் குழந்தை அப்பாவைப் போலவே இருப்பதாகவும், ஒரு சிலர் அம்மாவைப் போலவே இருப்பதாகவும் மற்றவர்கள் இருவரும் கலந்த கலவையாக இருப்பதாகவும் கூறினர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் அம்மாவின் முகத்தில் மலர்ச்சி.
ஸ்ரீதரன்-சுந்தரி தம்பதி திரும்பவும் தனது சொந்த வீட்டுக்கு வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. ஸ்ரீதரனுக்கு சொந்த ஊர் திருச்சிப் பக்கம். தனியார் நிறுவணத்தின் மேலாளராக கரூரில் இருந்தவன் அங்கேயே சொந்தமாக வீடு கட்டி தனிக் குடித்தனமும் வந்துவிட்டான். ஸ்ரீதரனுக்கு கதை எழுதுவது பொழுது போக்கு.
1995 ஆகஸ்ட் 4-ம் தேதி. திருமணமாகி இரண்டு வருடங்கூட அந்த வீட்டில் குடியிருக்கவில்லை. அதற்குள் சென்னை அலுவலகத்திற்கு மாற்றல் கேட்டுச் சென்று விட்டனர். சென்னையில் சில தொலைக்காட்சி நாடக நிறுவனங்களை தன் கதையுடன் அணுகுவான். ஆனால் பெரிதாக ஒன்றும் வரவேற்பில்லை. இப்போது கரூருக்கே மீண்டும் மாற்றல் கேட்டு தனது சொந்த வீட்டுக்கே குடிவந்து விட்டனர்.
ஏற்கனவே அக்கம் பக்கத்தினர் பெரும்பாலானோர் நல்ல அறிமுகம் தான் இவர்களுக்கு. அடுத்த இரண்டு நாட்கள் ஒவ்வொருவராக வரவும் குழந்தையைப் பார்ப்பதும் போவதுமாக இருந்தனர்.
ஸ்ரீதரனும் இப்போது விடுப்பு முடிந்து பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டான். சுந்தரியின் தாயும் ஊருக்குச் சென்று விட்டார். அடுத்த நாள் முதல் தனது வேலைகளை தானே செய்து கொள்ள ஆரம்பித்து விட்டாள் சுந்தரி.
காலையில் ஸ்ரீதரன் வேலைக்குச் சென்றவுடன். குழந்தையைக் குளிப்பாட்டி முடித்து வாசலிலே வெய்யிலில் காட்ட வந்துவிடுவாள். வெளியே வந்தாள் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும் திரும்ப வீட்டிற்குள் செல்ல, அருகில் உள்ள பெண்கள் சுற்றி நின்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.
அக்கா பையனா பொண்ணாக்கா? பொண்ணுமா. அக்கா பேருக்கா? கண்மணி. எத்தனை மாசமாவுதுங்க்கா? மூனு மாசம்மா. இப்படியே ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிவிட்டு உள்ளே வருவாள் சுந்தரி.
ஏங்க. வேலைக்கு போகும் போது மூணாவது வீதிக்கு போய், அங்கிருக்கிற மளிகைக் கடையில அருக்காணியம்மா வீடு எங்கன்னு கேட்டீங்கன்னா சொல்வாங்கலாம். அப்படியே அந்தம்மாவப் பாத்து தினமும் கண்மணிய குளிக்க வைக்க வரச்சொன்னீங்கன்னா கூலி பேசிக் குடுத்திடலாம் என்றாள் சுந்தரி.
உண்மையிலேயே சுந்தரிக்கு குழந்தையை சரியாக குளிக்க வைக்கத் தெரியவில்லை என்பது ஸ்ரீதருக்குத் தெரியும்.
சுந்தரி சொன்னபடியே விசாரித்து அருக்காணியம்மாவை அடுத்த நாள் முதல் குளிப்பாட்ட வரச்சொல்லி விட்டான் ஸ்ரீதரன். அருக்காணி குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு பேர் போனவள்.
அடுத்த நாள் மதிய நேரம் வந்து விட்டாள் அருக்காணி. அருக்காணி குளிப்பாட்டுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. அருக்காணி குழந்தையை ஒவ்வொரு அங்கமாக தேய்த்து நீவி குளிப்பாட்ட குழந்தைக்குக் கண் தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.
அருக்காணி சுந்தரியைப் பார்த்து, சரிம்மா இப்ப பால் குடுத்தீங்கன்னா நல்லா தூங்குவா என்று கூறினாள், குழந்தையை சுந்தரி கையில் கொடுத்துவிட்டு நான் கிளம்பறேன்மா என்றவள் கையில் புட்டிப்பாலை பார்த்ததும். ஏம்மா குழந்தைக்கு ஆறு மாசந்தான் ஆவுது, தாய்ப் பால் குடுக்காம புட்டிப்பால் குடுக்கறீங்க என்றாள்
அவளுக்குத் தாய்ப்பால் பத்தரது இல்லம்மா. இப்பெல்லாம் எங்கிட்ட குடிக்கறதில்ல புட்டிப்பால் தான் குடிக்கறாள் என்றாள் சுந்தரி. சரிம்மா நாளைக்கு மதியம் வருகிறேன் எனக் கூறிவிட்டு அருக்காணி சென்றுவிட்டாள்.
சுந்தரியின் அம்மாவும் ஊருக்குச் சென்று விட்டதால் தனி ஆளாகவே கண்மணியை வளர்க்க வேண்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் பேறு கால ஆலோசனை கேட்டால் ஆர்வமாகக் கூறத் தொடங்கிவிடுவாள்.
செப்டெம்பர் 2002, இப்பொழுது கண்மணிக்கு ஐந்து வயது. பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். தினமும் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வருகிறாள். தினமும் மாலை நாலு மணியானால் வாசலில் வந்து உட்கார்ந்து கொள்வாள். அது தான் கண்மணி பள்ளி விட்டு வரும் நேரம்.
அன்று மாலை வழக்கம் போல் வாசலில் கண்மணிக்காக காத்திருந்தாள். அருகில் குடியிருக்கும் இளம்பெண் சுந்தரி வாசலில் நிற்பதைப் பார்த்து அருகில் வந்தாள். அவளுக்கு திருமணமாகி நான்கு மாதம் ஆகிறது. அவளைப் பார்த்ததும் சுந்தரி வாம்மா, நல்லாருக்கியா என்று கேட்டாள். நல்லாருக்கங்க்கா என்றவளிடம், ஏதாவது விசேசம் உண்டா என்கவும். ஆமாங்கா என்றாள்.
அப்பொழுது ஆட்டோ வந்து நிற்க, கண்மணி இறங்கி அம்ம்ம்மா.. என்றவாரே ஓடிவந்தாள். கண்மணியிடமிருந்து பைகளை வாங்கிக் கொண்ட சுந்தரி கண்மணியின் தலையைக் கோதியவாரே அப்பெண்ணிடம் திரும்பவும், சொல்லுமா என்ன விசேஷம் என்றாள். அக்கா நாள் தள்ளிப் போச்சு, அதான் காலைல டாக்டர பாக்கப் போனோம். உண்டாயிருக்கறதா சொன்னாங்க என்றாள். அப்படியா ரொம்ப சந்தோஷம்மா என்றாள் சுந்தரி.
டாக்டரு நல்லா சாப்பிடச் சொன்னாங்கக்கா. அப்புறம் மாசம் ஒருதடவ வந்து பாத்துட்டுப் போகச் சொன்னாங்க என்றாள் அப்பெண். அப்படியா, ஆமா கண்டிப்பா மாசா மாசம் சரியா போய்க் காட்டீட்டு வந்துடுமா என்றாள் சுந்தரி. ஏங்க்கா கரு உண்டானதில இருந்து என்னென்ன சாப்பிடலாம், என்னென்ன சாப்பிடக்கூடாது எனக் கேட்டாள் அப்பெண்.
சுந்தரி ஆர்வமாக, தான் கண்மணி வயித்துல உண்டான போது சென்னையில் மருத்துவமனைக்கு போனதில் இருந்து, டாக்டர் என்னவெல்லாம் சொன்னார் என பட்டியல் போட ஆரம்பித்து விட்டாள். முதல் மூன்று மாதங்களில் தான் பட்ட சிரமங்களைக் கூறக் கூற அப்பெண் மட்டுமல்ல கண்மணியுங்கூட சுந்தரியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அதுமட்டுமல்ல முதல் மூன்று மாசம் வாந்தியே நிக்கல, சாப்பிட்டா ஒமட்டிக்கிட்டே வரும், அப்பப்பா அந்த மூனு மாசத்த கடக்கறதுக்குள்ள பெரும்பாடா ஆயிடிச்சி. நீ இப்ப இருந்தே காய்கள், பழங்கள் கீரையெல்லாம் நல்லா சேத்திக்கோ என்று கண்மணியின் கன்னத்தை தடவிய படி அப்பெண்ணிடம் ஆலோசனைக் கூறியவள். ஒரு நிமிஷம், இதோ வந்துட்டேன் என்று உள்ளே சென்றவள். கையில் சில பேறுகால புத்தகங்களை எடுத்து வந்து அப்பெண்ணிடம் நீட்டி, இது நான் கண்மணி வயித்துல இருந்த போது வாங்கிப் படிச்சது. நீயும் படிச்சிட்டு திருப்பிக் குடுத்துடு என்று கூறி அனுப்பினாள் சுந்தரி.
நாட்கள் ஓடின. இப்போது கண்மணி ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். என்னதான் சுந்தரி கண்மணியை கண் போல கவனித்துக் கொண்டாலும், கண்மணி எப்பவுமே ஸ்ரீதரின் செல்லம். வேண்டிய அனைத்தும் சுந்தரி கண்மணிக்கு செய்தாலும், கண்மணி அப்பாவிடமே ஒட்டிக் கொண்டிருப்பாள். இதைப்பார்த்தாள் சுந்தரிக்கு கோபமே வந்துவிடும்.
இன்று 2009, ஸ்ரீதரின் இல்லத்தில் உறவினர்க்கூட்டம். கண்மணி பெரிய மனுஷி ஆகிவிட்டாள். சுந்தரி உறவினர்களை கவனிப்பதிலேயே மூன்று நாள் ஓடிவிட்டது. இந்த மூணு நாளும் சுந்தரியின் தாய் கண்மணியை சமாளிப்பதற்குள் ஓய்ந்து போய் விட்டாள். வயதுக்கு வந்த சிறுமிகளுக்கு கொடுக்கும் சிறப்பு உணவுகளையும் கூட கண்மணியை சாப்பிட வைக்க சுந்தரியின் அம்மாவுக்கு ரொம்பக் கடினமாகிவிட்டது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுந்தரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. அவளை அமரவைத்து பொறுமையாக புத்திமதி கூற, கண்மணியோ அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கோபத்தில் பொறுமை இழந்த சுந்தரிக்கு இப்போது கண்கள் குளமாகிவிட்டிருந்தது. சுந்தரியை உற்று நோக்கிய கண்மணியும் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள, கண்மணியை தோளில் சாய்த்துக் கொண்டு உணவை ஊட்டி விட்டாள்.
சுந்தரியின் தாயும் கண்மணியிடம் குணமாக வயதுக்கு வந்த குழந்தைகள் இந்த மாதிரி நேரங்களில் அடம்பிடிக்காமல் அம்மா கொடுக்கும் உணவுகளை மறுக்காமல் உண்ண வேண்டும் என்றுக் கூறினாள்.
கண்மணியின் அருகில் வந்து அமர்ந்த சுந்தரி கண் கலங்கியவாறு, செல்லம் தயவு செஞ்சு அம்மா சொல்லரத கேளு. இல்லனா பின்னால பேறு காலத்தில ரொம்ப சிரமமாயிடும் கண்ணு. நீ வயித்துல இருந்த காலத்துல ஒவ்வொரு மாசமும் எவ்வளவு சிரமப்பட்டேன், வைத்தியம் பாத்தேன்னு உனக்குச் சொன்னா புரியாது என்றாள். சுந்தரி சொல்வது புரிந்ததோ இல்லையோ, நா தளுதளுக்கப் பேசிய அம்மாவின் குரல் கண்மணியை ஒருவாறு அமைதிப்படுத்தியது. சுந்தரியும் இனிமேல் என்னவெல்லாம் உண்ண வேண்டும், என்னவெல்லாம் உண்டால் மாத மாதம் வரும் உதிரப் போக்கு காலங்களில் ஆரோக்கியமாக இருப்பது மற்றும் கர்ப்பப்பையின் வளர்ச்சிக்கு தேவையானவை என அறிவுரை கூறிக்கொண்டே போக, சுந்தரியின் அம்மா வருந்திய முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்மணியும் வளர வளர இப்போதெல்லாம் அம்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டவள் ஆகிவிட்டாள். அம்மா தன்னை சுமந்தது, வளர்த்தது என ஒவ்வொரு நிகழ்வும் தற்பொழுது கண்மணிக்கு அத்துபடி. கண்மணிக்கு மட்டுமல்ல அந்த வீதிக்கே கண்மணியின் பிறந்த வரலாறு தெரியும். 2016-ம் ஆண்டு, கண்மணி இப்போது கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.
ஒரு நாள் திருமண விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய விருப்பத்திற்குத் தான் திருமணம் செய்வேன் என பேசப்போய் வாக்கு வாதத்தில் முடிந்தது. இப்படி உன் விருப்பத்திற்கு நடப்பதற்கா கண்ணுக்குள்ள வச்சி வளர்த்தேன். நீ உன் விருப்பப்படி செய், ஆன அதுக்கப்புறம் அம்மாவ உயிரோடப் பாக்கமாட்ட என்றவளிடம் ஸ்ரீதர், சுந்தரி ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசற. அவ விளையாட்டுக்குத் தான சொன்னா. அத போயி பெருசா எடுத்துக்கிட்டு என்னென்னவோ பேசிகிட்டு இருக்க என்று சமாதானப்படுத்தினான்.
அன்றிரவு படுக்கையில் சுந்தரி மேல் கையையும் காலையும் போட்டபடியே கண்மணி, ஏம்மா காலையில அவ்வளவு கோபப்பட்டீங்க. மன்னிச்சிடுமா நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்றாள். இல்ல கண்மணி நீ இனிமே அப்படிப் பேசாத, என்னால தாங்கிக்க முடியாது. எனக்கு நீ ஒத்தக் குழந்தை, உனக்கு ஒவ்வொரு நாளும் வேணும்கறத பாத்துப் பாத்து செஞ்சிகிட்டிருக்கேன். உனக்கு என்ன செய்யனும் எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியாதா என கண் கலங்கினாள்.
சரிமா இனிமே உன் விருப்பத்துக்கு மாறா நான் எதையும் செய்யமாட்டேன் என்ற கண்மணி, ஏம்மா நீ இன்னொரு குழந்தை பெத்துக்கல என கேட்டாள். அதுவா நீ வயித்துல உண்டான நேரத்தில என சுந்தரி ஆரம்பிக்க. ஸ்ரீதர், ஏம்மா மணி என்ன ஆவுது, இன்னும் பேசிகிட்டே இருக்கறீங்க. பேசாம படுங்க காலையில பேசிக்கலாம் என்றதும் இருவரும் அமைதியானார்கள்.
ஒரு ஞாயிறு, பரண் மேல் இருந்த பழைய பொருட்களையெல்லாம் கீழே இறக்கிச் சுத்தப் படுத்தி, வேண்டியது வேண்டாதது என பிரித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதர். கூட சுந்தரியும் கண்மணியும் உதவி செய்து கொண்டிருந்தனர். வேண்டாத குப்பைகளையெல்லாம் வீட்டின் எதிரே உள்ள காலி இடத்தில் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீதரும் சுந்தரியும் வேண்டாததைப் பிரித்துக் கொடுக்க கண்மணி கொடுப்பதையெல்லாம் கொண்டு சென்று நெருப்பில் எறிந்து வருவாள். சுந்தரியின் அம்மா சமையலறை வாசலில் அமர்ந்து இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். சுந்தரியின் அம்மாவுக்கு வயசாகிவிட்டது.
கண்மணி நடந்து நடந்து சலிப்படைந்து விட்டாள். அப்பா இன்னும் எவ்வளவு பா இருக்கு. எவ்வளவு நேரம் நடக்கறது என சலித்துக் கொண்டாள். அதற்கு ஸ்ரீதர் அவ்வளவு தான் டா கண்ணா இன்னம் கொஞ்சந்தான் என்க. போங்கப்பா நான் செய்ய மாட்டேன் எனக்கு கால் வலிக்குது என்றாள் கண்மணி.
சுந்தரியின் அம்மா, கண்ணு எங்களுக்கு ஆசைக்கும் ஆஸ்திக்கும் நீ ஒருத்தி தான். நீ செய்யாம இந்த வேலையெல்லாம் வேற யாருமா செய்வாங்க என்றாள். இதைக் கேட்ட கண்மணி எரிச்சலாக, ஏன்மா நீ இரண்டாவது குழந்தை பெத்துக்கல இப்ப பாரு நானே இந்த வீட்ல எல்லா வேலையும் செய்ய வேண்டியதா இருக்கு என சுந்தரியை நோக்கிக் கேட்டாள்.
நீ வயித்துல மூணுமாசமா இருக்கும் போது வயித்து வலி இருந்து கிட்டே இருந்தது. டாக்டருகிட்ட போய் விசயத்தை சொன்னேன். வயித்தப் பரிசோதனை செஞ்ச டாக்டர், என் கர்ப்பப்பை பலவீனமா இருக்கறதாச் சொன்னாங்க. இந்தக் கருவை தாங்கற வழு கர்ப்பப்பைக்கு குறைவா இருக்கு. அதனால நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் இல்லனா உயிருக்கே ஆபத்துன்னுச் சொன்னாங்க. அதுக்கப்புறம் எனக்கு ஒவ்வொரு நாளும் எப்படி கடந்துச்சுன்னு இப்ப நெனச்சாலும் சொல்ல முடியாது. கடைசியா பிரசவ காலத்தில கூட ரொம்பச் சிரமப் பட்டுதான் உன்னய பெத்தெடுத்தேன்.
அதனால நீ எனக்கு அவ்வளவு சிரமத்துக்கப்புறம் கெடச்சவ. உன்னத்தவிர எங்களுக்கு இன்னொரு குழந்தை பெத்துக்கற ஆசையும் இல்ல, அதுக்கான தெம்பு எனக்கோ என் வயித்துக்கோ இல்ல. அதான் நாங்க நீ மட்டும் போதும்னு முடிவு பண்ணீட்டோம். ஆனா நீயி என்று கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் விட, அம்மாவின் அருகில் சென்ற கண்மணி, நான் எவ்வளவோ அம்மாக்கள பாத்திருக்கேன், ஆனா நீ இருக்க பாரு என சுந்தரியின் கன்னத்துடன் கன்னம் வைத்து, சரிம்மா கோவிச்சுக்காதமா என்று கொஞ்சலாகக் கூறினாள். சுந்தரியின் அம்மாவும், ஸ்ரீதரும் கண் கலங்க சுந்தரியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாய் சுந்தரி சமாதானமடைந்ததும், சுறுசுறுப்படைந்த கண்மணி, அப்பா… அம்மா ஒன்னும் செய்யவேண்டாம்பா. நானே எல்லாத்தையும் சுத்தம் செய்யறேன்பா. நீங்க வேண்டாதத மட்டும் நெருப்புல போட்டுட்டு வாங்க எனக் கூறி அட்டைப் பெட்டியில் இருந்தவற்றையெல்லாம் வெளியில் எடுத்துப் போட்டாள். பழைய புத்தகங்களுக்கு நடுவே இருந்த ஒரு ஃபைலை கையிலெடுத்த கண்மணி, அப்பா இது என்ன ஃபைல் பா. அம்மா பேர் போட்டிருக்கு என கூறிக் கொண்டே ஃபைலைப் பிரிக்க. வெடுக்கென பிடுங்கிய ஸ்ரீதரின் முகம் வேர்த்துக் கொட்டியது. இது தேவையில்லாத பழைய ஃபைல் மா. இனிமே இது வேண்டாம் என கூறிக் கொண்டே வேகமாக வெளியில் எரியும் நெருப்பை நோக்கிச் சென்றான். அதிர்ச்சியில் இருந்த சுந்தரியின் முகத்தைக் கண்மணி பார்க்கவில்லை.
ஸ்ரீதரின் கையில் 1995 ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் சுந்தரிக்கு கருக்கலைப்பு மற்றும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனையின் ஃபைல். ஃபைலைப் பிரித்து, உள்ளே இருந்த தாள்களைக் கிழித்து பின்பக்கம் திரும்பிப் பார்த்தவாறே நெருப்பில் போட்டு எரிந்து சாம்பலாகும் வரை அங்கேயே இருந்தான் ஸ்ரீதர்.
-ஆரன் 01.06.2021
0 comments:
Post a Comment