செம்மிக் கெடா

      அப்போவ் இன்னும் எவ்ளோ தூரம் போவோனும், குட்டிமணி மிதிவண்டியின் பெரிய அகண்ட பின் இருக்கையில் அமர்ந்தவாறே காலாட்டிக் கொண்டு ராசுப்பையனைக் கேட்டாள். அது இன்னம் ஆறேழு மைலு போவோனும், என்று கூற. இன்னுமா… அதுக்கு எத்தன நேரம் ஆவும் என்று பதிலுக்கு கேட்டாள் குட்டிமணி. இன்னும் அரமணி நேரத்துக்கு மேல ஆவும் என்றான் ராசுப்பையன்.

    யம்மாடி அவ்ளோ நேரமா என்று மிதிவண்டியை ஆட்டிக் கொண்டே வந்தாள். இதா மணி ஏன் ஆட்டிக்கிட்டே வரவ. கம்முனு ஒக்காந்து வர மாட்ட என்று அதட்டினான் ராசுப்பையன். ப்போவ் நீ மொதல்ல கல்லு மேலயே வண்டிய வுடாத வலிக்கிது என்றாள் குட்டிமணி. சொன்னா கேக்கறியா நா யாவாரத்துக்கு போற பக்கம் நீ இப்பிடி ஒட்டிகிட்டு வந்தியனா எப்பிடி பொழப்ப பாக்கறது, என்றவனை சிறிதும் சட்டை செய்யாமல் மீண்டும் மீண்டும் மிதிவண்டியை ஆட்டிக்கொண்டே, ப்போவ் முள்ளாம்பரப்பு சினிமா கொட்டாய்ல பிரபு படம் சின்னதம்பி ஓடுதாம். கூட்டீட்டு போப்பா என்றாள் குட்டிமணி. போவலாம் போவலாம் நீ ஆட்டாத வா என்றபடியே மிதிவண்டியை மிதித்தான் ராசுப்பையன்.

   அவ்வப்போது மகளை அதட்டினாலும் ராசுப்பையன் அவள் சேட்டையை ரசித்துக் கொண்டே மிதிவண்டியை அந்த மண் தடத்தில் ஓட்டிச் சென்றான். இருக்காதா, இவள் அவனுடைய ஒரே செல்ல மகள் இல்லையா? குட்டிமணி உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். அன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை, அதனால் ஆட்டு வியாபாரம் செய்யும் தனது தந்தையுடன் அடம்பிடித்து ஒட்டிக்கொண்டாள். பக்கத்து கிராமங்களில் ஆடுகளை வாங்கி வந்து வியாபாரம் செய்வது தான் ராசுப்பையனுக்கு தொழில்.

    ராசுப்பையனுக்கு பூலப்பாளையம் கிராமம் தான் சொந்த ஊர். கிராமத்திற்கு ஒதுக்குபுறம் ஒரு ஓட்டு வீடும் கொஞ்சம் காலி இடமும் உள்ளது. நாளை ஞாயிறு மாரப்பன் கறிக் கடைக்கு இரண்டு கிடாய் அறுப்புக்கு கேட்டிருந்தார்கள். கடந்த வாரம் தான் உள்ளூர் மாரியம்மன் பண்டிகை முடிந்திருந்தது. பக்கத்து தோட்டங்களில் தனக்கு தெரிந்து கிடாய்கள் இல்லாததால் இப்போது சின்னியம்பாளையம் பக்கம் தெரிந்தவர் தோட்டத்திற்கு போய் கொண்டிருக்கிறான் ராசுப்பையன். அது பூலப்பாளையத்தில் இருந்து எழு எட்டு மைல் இருக்கும்.

    அரை மணி நேர பயணத்தில் தோட்டத்திற்கு ஒரு வழியாக சென்று சேர்ந்தார்கள் ராசுபையனும் குட்டிமணியும். வீட்டருகே சென்றதும் கயித்துக் கட்டிலுக்கு அடியே படுத்திருந்த நாய் இவர்களை குறைத்தவாறே ஓடிவந்தது. கட்டிலில் படுத்திருந்த வெள்ளை சீலை பெரியம்மா காலைத் தொங்கப் போட்டு அமர்ந்து, ஆருப்பா என்று கேட்டார். நாய் ஓடி வந்ததும் குட்டிமணி ராசுபையனின் இடுப்பை இருக்கி பிடித்துக் கொண்டாள். குறைத்துக் கொண்டே வந்த நாயை ச்சூ போ போ நாந்தான் நாந்தான் என்று விரட்டியவாறே, நாந்தாங்க ஆட்டு யாவாரி ராசுங்க. கெடா இருக்குன்னாங்க அதான் அண்ணன பாக்க வந்தேங்க என்றான்.

அதற்குள் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு தோட்டத்துக்காரர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். ஏ ராசு ஆடு புடிக்க வந்தியா… உக்காரு என்றார். தின்னையில் அமர்ந்த ராசுபையனின் அருகில் குட்டிமணி நாயைப் பார்த்தவாறே ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள். ஏ பள்ளிக்கூடத்துக்கு போவுலயா? உக்கொப்பங்கூட யாவாரத்துக்கு வந்துட்ட என்றார் தோட்டத்துக்காரர். குட்டிமணி வெக்கப்பட்டு கொண்டே ராசுப்பையனைப் பார்த்தாள். என்ன படிக்கிற என்ற பெரியம்மாவின் கேள்விக்கு திரும்ப வெட்கப்பட்டுக் கொண்டே ராசுபையனின் முகத்தைப் பார்த்தாள் குட்டிமணி. அட சொல்லு ஆத்தா கேக்கறாங்கல்ல என்றான் ராசுப்பையன். மெல்ல திரும்பி நாலாவது படிக்கறனுங்க என்றாள் குட்டிமணி.

    தோட்டக்காரரைப் பார்த்து ராசுபையன், அண்ணா ரெண்டு கெடா வேணுங்ணா என்றான். அதற்கு தோட்டக்காரர், ராசு நம்மகிட்ட ஒன்னு தான இருக்குது என்றார். அப்டிங்ளா ரெண்டு வேணுமே இல்லீங்ளா என்றான் ராசுபையன். இல்லியேப்பா, மீதியெல்லாம் இன்னும் நாளாவுமே என்றார். சிறிது யோசித்த ராசுபையன், சரிங்ணா பாக்லாங்லா என்றான். வயல்ல தான் கட்டீருக்குது வா பாக்கல்லம்னு எழுந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற ராசுபையனின் பின்னாலேயே எழுந்து ஓடி கையைப் பிடித்துக் கொண்டாள் குட்டிமணி.

    நெல் அறுத்த வயலில் மொழக்குச்சி அடித்து நீளமான கயிரில் ஆடுகளைக் கட்டி மேயவிட்டிருந்தார்கள். இந்த கெடா தான் குடுக்கறது என்று காட்டினார் தோட்டக்காரர். அண்ணா இன்னொரு கெடா இருக்குமாட்ட இருக்குது, அதயும் குடுங்ணா புடிச்சிக்கறேன் என்றான் ராசுப்பையன். ஏம்பா அதய குடுத்துபோட்டு அப்பறம் ஆட்டுக்கு கெடாய்க்கு எங்க போவேன், அது வேணும்பா இத மட்டும் புடிச்சிக்க என்றார் தோட்டக்காரர். வேறு வழியில்லாமல் அவர் காட்டிய கிடாய்க்கு விலை பேசிக்கொண்டிருந்தனர். குட்டிமணி விலை பேசிக்கொண்டிருந்த கிடாயின் அருகில் போய் நின்றாள்.

    அந்த கிடாய்க்கு ஒன்னரை வயது இருக்கும். உடல் முழுதும் மொசு மொசுன்னு செம்மி நிறம். நான்கு கால்களிலும் முட்டிக்கு கீழே வெள்ளை நிறம். இரண்டு கண்களைச் சுற்றி வெள்ளை நிறம். நடு நெற்றியில் விரல் ரேகை அளவுக்கு பொட்டு வைத்தது போல வெள்ளை. பார்க்கவே குட்டிமணிக்கு அவ்வளவு அழகாகத் தெரிந்தது. முன்னங்கால்களைத் தூக்கி குட்டிமணியை முட்டுவது போல் வந்தது. குட்டிமணி கைகளால் தடுக்க, மீண்டும் இரண்டடி பின்னோக்கி சென்று மெல்ல வந்து முன் கால்களைத் தூக்கி முட்டுவது போல் மீண்டும் மீண்டும் விளையாடியது.

           விலை பேசிக் கொண்டிருந்த வயலுக்கு மெதுவாய் வந்த அந்த தோட்டத்து பெரிய மனுசி, ராசு ஒரு பிருவ இருக்குது அதயும் கையோட புடிச்சிக்க, செனை புடிக்க மாண்டேங்குது என்றார். ஆத்தா செனை புடிக்காத ஆட்ட கொண்டு போயி நா என்னங்க பண்றது என்றான் ராசுப்பையன். அட அறுப்புக்கு வித்துபுடு, என்ன பன்றதுன்னு கேக்கற என்றார் பெரியம்மா. இல்லீங்காத்தா பிருவ போவாதுங்லே என்க. தோட்டக்காரர், ராசு அத வெச்சிருக்க முடியாது. அப்பறம் ஆடு முத்திப் போச்சுனா விக்க முடியாது. முன்ன பின்ன ஒரு வெலைய போட்டு அனுசரிச்சி வாங்கிக்க. நான் உனக்கு இன்னோரு கெடா இப்பவே ஏற்பாடு செஞ்சி தாரேன் என்றார்.

    ராசுப்பையன் அரமனசா எதுன்னு காட்டுங்ணா பாக்கறேன் என்றான். தா இது தான் ராசு, நல்லா  தின்னுபோட்டு எப்பிடி கொழு கொழுன்னு இருக்குது பாரு. நல்லா திருட்டு தீனி தின்னு எப்பிடி வயிரு பொட்டுக் கூடையாட்டம் இருக்குது பாரு. நல்ல கொழுப்புக் கறியா இருக்கும் பொட்டாட்டம் வாங்கிக்குவாங்க என்றார் பெரியம்மா. அவர்கள் காட்டிய வெள்ளாட்டை பார்த்தான் ராசுப்பையன். ஒரு கொம்பு நேராகவும் ஒரு கொம்பு வளைந்தும் இருந்த வெள்ளாட்டின் பின்பக்க முதுகெலும்பை ஒற்றைக் கையால் பிடித்து தூக்கிப் பார்த்தான் ராசுப்பையன். ஆத்தா ஆடு நல்லாத்தான் இருக்கு இல்லைங்கிலங்க, ஆனா நம்மூர்ல பிருவ கறி போடமாட்டங்கலே. விக்கிலீனா என்னங்க பண்ணுட்டும். இன்னோரு தடவ கெடய்க்கு உட்டுப் பாருங்களேன் என்றான்.

    இல்ல ராசு இதோட சேந்த குட்டி ரெண்டு ஈத்து போட்டுறுச்சி. இந்த கெரெகம் இப்பிடியே தின்னுபோட்டு தின்னுபோட்டு தெண்டத்துக்கு இருக்குது. இது ஆவாது தள்ளிவுட்டுரு என்றார் தோட்டத்துக்காரர். ராசுப்பையனுக்கு மனசே ஒப்பவில்லை. தயங்கி தயங்கி ஆனவரைக்கும் மறுத்துப் பார்த்தான். இல்லயினா வுடு ராசு, ரெண்டும் இருக்குட்டும், நாங்க வேற யாவாரிக்கு குடுத்துக்கறம் என்றாள் பெரியம்மா.

    குட்டிமணி செம்மி கிடாவை நீவி விட்டுக் கொண்டிருந்தாள். செம்மிக் கிடாயும் குட்டிமணியை உரசுவதும், அவள் பாவாடை நாடாவை மெல்லுவதும் இழுப்பதுமாக அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தது. தோட்டத்துக்காரர் ராசு இங்க வா என்று அழைத்து பக்கத்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். குட்டிமணியை ராசுப்பையன் கண்ணு நீ இங்கயே இரு வரேன்னு சொல்லிவிட்டு தோட்டத்துக்காரருடன் சென்றார். குட்டிமணி மறுப்பேதும் சொல்லாமல் செம்மிக் கிடாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோட்டத்துக்காரர், அவர்களிடம் ராசுக்கு ஒரு கெடா வேணுமாம் கெடா குடுக்கறாப்ல இருக்குதா எனக் கேட்க. ரெண்டு இருக்குது வெல படிஞ்சா புடிச்சுக்க சொல்லுங்க என்றார்.

    ராசுப்பையன் எனக்கு ஒரு கெடா போதுங்க. மறுக்கா அடுதத சனிக்கெழமக்குள்ள இன்னொன்ன புடிச்சிக்கிறேங்க என்றான். இல்லப்பா புடிச்சா ரெண்டையும் இப்பவே புடிச்சிக்க எனக்கு செலவு கெடக்கு என்றார். ரெண்டு வெள்ளாட்டுக் கிடாயும் நல்லா கொழு கொழுன்னு இருந்தது. கிடாய்களைப் பார்த்ததும் ராசுப்பையனுக்கு விட மனசு வரல. ஒரு வழியா விலை பேசி முடித்துவிட்டான். முதலில் செம்மிக் கிடாவையும் கோணக்கொம்பு பிருவை ஆட்டையும் அவர்களின் தாம்புக் கயிரை தும்புடன் அவிழ்த்து தான் வைத்திருந்த மாற்றுக் கயிரைக் கட்டி மிதிவண்டியில் கட்டிக்கொண்டு, மிதிவண்டியின் முன்பக்க கம்மியில் குட்டிமணியை அமரவைத்து கிளம்பினான். ராசுப்பையன் தோட்டத்துக்காரரைப் பார்த்து, அண்ணா இது ரெண்டையும் வூட்ல கட்டீட்டு புள்ளைய வுட்டுப்போட்டு ரூவாய எடுத்துட்டு வாரேன் என்றவாரே மிதிவண்டியை உளட்டிக்கொண்டே கிளம்பினான்.

    ராசுப்பையன் ரெண்டு ஆடுகளை சாதாரணமாக மிதிவண்டியில் கட்டிக்கொண்டு ஓட்டுவான். அவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. குட்டிமணிக்கு தான் முன் கம்பியில் உட்கார்ந்து வருவது சிரமமாய் இருந்தது. மிதிவண்டியில் கட்டியதில் இருந்து இரண்டு ஆடுகளும் பே பே என கத்திக் கொண்டே வந்தது. குட்டிமணிக்கு பாவமாய் இருந்தது. யப்போவ் செம்மி கெடா அழகா இருக்கில்ல என்றாள். ம் என்றான் ராசுப்பையன். செம்மி கெடாவ நாமலே வெச்சிக்கிலாமா என்றாள் குட்டிமணி. மீண்டும் ம் என்றான் ராசுப்பையன். ராசுப்பையனுக்கு நினைப்பெல்லாம் எப்படி இந்த கோணக்கொம்பு வெள்ளாட்ட விற்பது என்பதிலேயே தவித்தது. குட்டிமணிக்கு செம்மிக் கிடாவை அப்பா நம்மை வைத்துக்கொள்ளச் சொல்லி விட்டார் என்ற மகிழ்ச்சி. இடையிடையே செம்மிக் கிடாவை எட்டிப் பார்ப்பதும் கையை நீட்டி தடவிக் கொடுப்பதுமாக வந்தாள்.

    வேர்த்து விறுவிறுத்து ஒரு வழியாக பூலப்பாளையம் வந்து சேர்ந்தார்கள். வீட்டு வாசல் வந்ததும் குட்டிமணி இறங்கிக் கொண்டாள். ராசுப்பையன் மிதிவண்டியின் பின் பகுதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே உள்ளே தள்ளி வந்தான். உள்ளே வந்ததும் மிதிவண்டியை தூக்கி நிறுத்திவிட்டு ஆடுகளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். இரண்டு ஆடுகளும் கால்கள் கட்டப்பட்டிருந்தன. ராசுப்பையன் கோணக் கொம்பு ஆட்டின் கால் கட்டினை அவிழ்த்ததும் ஒரு துள்ளு துள்ளியது. ராசுப்பையன் சுதாரிப்பதற்க்குள் மிதிவண்டி எதிர்புறமாக சாய, கோணக் கொம்பு ஆட்டை மட்டும் தான் தாங்கிப் பிடிக்க முடிந்தது. பாவம் செம்மிக் கிடாய் மிதிவண்டியுடன் தொப்பென கீழே இருந்த கறுங்கல் மீது விழுந்து பே வென கதறியது. மிதிவண்டி விழுந்த சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த ராசுப்பையனின் மனைவி சாந்தா என்னாச்சிங்க என்று கேட்டுக் கொண்டே மிதிவண்டியை தூக்கி நிறுத்தினாள். ராசுப்பையன் கோணக் கொம்பு ஆட்டின் கயிற்றை சாந்தாவிடம் கொடுத்துவிட்டு செம்மிக் கிடாயின் கால் கட்டினை அவிழ்த்தான். துள்ளி எழுத்த செம்மிக் கிடா ஒரு பக்க முன் காலை ஊன்ற முடியாமல் நொண்டியது. ராசுப்பையன் செம்மிக் கிடாயின் சப்பை முதல் கால் வரை நீவிவிட்டுப் பார்த்தான். நீவும் பொழுது செம்மிக் கிடாய் வலியால் கத்தியது. நெற்றியை சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்த குட்டிமணி, யேம்பா என்னாச்சி என இரண்டு முறை கேட்டும் ராசுப்பையன் பதிலேதும் சொல்லவில்லை. சாந்தா ஏங்க. என்னங்க என கேட்க, ஒன்னுமில்லை ரெண்டையும் பட்டிக்குள்ள வுட்டு தீனியும் தண்ணியும் வெய்யி என கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

    வியாபாரத்திற்கு வாங்கி வரும் ஆடுகளை வீட்டை ஒட்டியே இருக்கும் தன்னுடைய ஓலைக் கொட்டாய் வேய்ந்த பட்டியில் தான் அடைத்து வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் இருந்து கையில் பணத்துடன் வெளியே வந்த ராசுப்பையன், சாந்தா இன்னம் ரெண்டு உருப்படி பேசியிருக்கேன். போயி ரூவாய குடுத்துபுட்டு அதையும் புடிச்சிக்கிட்டு வந்தர்றேன் என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் இரண்டு மாற்றுக் கயிரையும் கட்டும் கயிரையும் மிதிவண்டியின் பின்னால் கட்டிக்கொண்டு கிளம்பினான். குட்டிமணியோ பட்டிக்குள் சென்று செம்மிக் கிடாவை கை நீட்டி தடவச் சென்றாள். புது இடம் என்பதால் அவளிடம் வராமல் மிரண்டபடி நொண்டிக் கொண்டே ஓடியது. கோணக் கொம்பியோ எதையும் சட்டை செய்யாமல் கயிற்றில் தொங்கவிட்டிருந்த சோளத்தட்டை மறுக் மறுக்கென்று தாண்டுகால் போட்டு திண்கத் தொடங்கியது.

    மாலை ஐந்து மணிக்கு மாரப்பன் டிவிஎஸ் 50 மொப்பட்டில் ராசுப்பையன் வீட்டு வாசலில் வந்து நின்றார். வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த ராசுப்பையன் வாண்ணா என்றான். ஏ ராசு கெடாய புடிச்சாந்திட்டியா என்றவாறே உள்ளே வந்தார். காலைலயே புடிச்சாந்துட்டேன் வாங்க என்று பட்டிக்கு கூட்டிச் சென்றான். நாலு உருப்புடி இருக்குது நமக்கு அப்பறம் வேற ஆருக்கு என்றார் மாரப்பன். உங்குளுக்கு தான் புடிச்சாந்தேன், எல்லாத்தையும் நீங்களே புடிச்சிக்குங்க என்றான் ராசுப்பையன். ஏம்பா இப்பதான் நோம்பி முடிஞ்சிது நாலு குட்டியெல்லாம் இழுக்காது, ரெண்டு குட்டி போதும் என்றார் மாரப்பன். சேரிங்ணா இதா இந்த செம்மிக் கெடாவையும் இந்த பிருவையையும் புடிச்சிக்குங்க என்றான் ராசுப்பையன். ராசு நா என்னிக்கி பிருவ குட்டி அறுத்தேன். நீ இருக்கற பாரு, எனக்கு ரெண்டு கெடாய மட்டும் வெலய முடிச்சு வுடு என்றார் மாரப்பன். இல்லீங்ணா பிருவ சென புடிக்கலியாம், வாங்கியாந்துட்டேன். ஆடும் நல்லாதான் இருக்குது வெடியக்காலைல அறுத்துட்டுருங்க கறி நல்லாருக்கும்ணா என்றான். நம்மூருக்கு அதெல்லாம் செரிபட்டு வராது. நீ வெளயாடாத, அப்பறம் நம்ம பேரு கெட்டு போயிரும். நீ கெடாய்க்கு மட்டும் வெல சொல்லிக் குடு என்றார் மாரப்பன்.

       ண்ணா என்னங்ணா உங்கள நம்பித்தான் தெகிரியமா புடிச்சிட்டு வந்தேன் இப்பிடி சொல்றீங்க என்க. ஏ ராசு டவுனுக்கு செரிவரும். இங்கல்லாம் செரிவராது நீ வேற ஆருக்காவுது குடுத்துடு, நமக்கு வேண்டாம் என்று கராராக சொல்லிவிட்டார் மாரப்பன். ராசுப்பையனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. செரிங்ணா இந்த செம்மிக் கெடாவையும் அந்த வெள்ள கெடாவையும் புடிச்சிக்குங்க என ஆடுகளைக் காட்டினான் ராசுப்பையன். ஏ ராசு அதென்ன அந்த கெடா மொண்டுது என செம்மிக் கிடாவைக் காட்டிக் கேட்டார் மாரப்பன். ஒன்னுமில்லைங்ணா வண்டியில இருந்து கீழ குதிச்சதுல காலு சுழிக்கிகிச்சாட்டருக்குது என்றான் ராசுப்பையன். ஏம்பா கால இப்பிடி மொண்டுது. அடிபட்ட மாரி தெரியிது. நீ என்னமோ சுழிக்கிக்கிச்சுங்கற. நீ அந்த ரெண்டு வெள்ள கெடாய்க்கு வெலயச் சொல்லு நா காலைல அஞ்சு மணிக்கு வந்து புடிச்சிக்கறேன் என்று சொல்ல, ராசு பையனுக்கு கறுக்குனு ஆகிப்போச்சு. நோம்பிக்கி ஆடுங்க வித்த லாபக் காசு பூரா இப்பிடி மாட்டிகிச்சே என சரியான எரிச்சல் ராசுப்பையனுக்கு. மாரப்பனோ தொடர்ச்சியா வியாபாரம் கொடுப்பவர். அவரிடம் சங்கடம் பண்ணிக்கொள்ள ராசுப்பையனுக்கு விருப்பம் இல்லை. சரி இதுக இரண்டையும் வேற யாருக்காவது வித்துக்கலாம் என்று முடிவு செய்தவனாக மற்ற இரண்டு வெள்ளைக் கிடாக்களுக்கு விலை பேசி முடித்துக் கொண்டான்.

      எப்பொழுதும் விற்பனைக்கு வரும் ஆடுகள் பட்டியில் சில நாட்கள் இருக்கும். பிறகு விற்பனையாகிவிடும். இந்த வாரம் முழுவதும் ஆடுகள் பட்டிக்கு வருவதும் போவதுமாக இருக்க, ராசுப்பையனுக்கு மட்டும் மனதில் குறை இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் நொண்டிக் கொண்டிருக்கும் செம்மிக் கிடாயும் கோணக் கொம்பு பிருவையும் தான். நோம்பிக்கு கிடாய்கள் விற்ற வருமாணத்திற்கு மீறி பணம் இந்த இரண்டு ஆடுகளிலும் முடங்கி விட்டது. அவனும் ஆனவரை பலரிடம் விற்க முயன்றும் முடியவில்லை. செம்மிக் கிடாயின் கால் சரியாகிவிட்டால் போதும் அதை விற்றுவிடலாம். ஆனால் இந்த கோணக் கொம்பு பிருவையைத் தான் எப்படி விற்பது என்பது அவனுக்கு பெரிய தலை பாரமாகவே இருக்கிறது. செனை பிடிப்பது போலவும் தெரியவில்லை. அப்படியும் ஒரு முறை கறிக்கடைக்கு கெஞ்சிக் கட்டாயப்படுத்தி அறுப்புக்கு கோணக் கொம்பு பிருவையை விட்டுவிட்டு வந்தான். அன்று மாலையே திரும்பக் கொண்டு வந்து ஆகாது என விட்டுவிட்டார்கள். தினமும் அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

        அதைப் பற்றியெல்லாம் குட்டிமணிக்கு கவலையில்லை. தினமும் பள்ளி விட்டு வந்ததும் செம்மிக் கிடாய்க்கு சோளத்தட்டை கையால் ஊட்டி விடுவதும் அதற்கு தண்ணீர் வைப்பதும் என்று எப்பொழுதும் செம்மிக் கிடாயுடனேயே அதிக நேரத்தை கழிப்பாள். காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் கூட செம்மிக் கிடாயை பார்த்து நீவி விட்டுத்தான் செல்வாள். செம்மிக் கிடாயும் அவள் தலையைக் கண்டால் போதும் பே பே என்று கத்திக் கூப்பிடும். அவளுக்கு பொழுதுபோக்கே செம்மிக் கிடாயுடன் பேசுவது விளையாடுவது என ஆகிப் போனது. சில நாட்களில் கால் சரியாவதற்காக தினந்தோரும் மாலையில் தனியாகவே செம்மிக் கிடாயை நடக்கவைத்து ஒரு மணி நேரம் மேய்ச்சலுக்கு கூட்டி செல்வாள். மெல்ல மெல்ல செம்மிக் கிடாயின் கால் சரியாகிக்கொண்டு வந்தது. கிட்டத்தட்ட இருவருக்கும் இடையே நல்ல உறவு உருவாகி வந்தது. கோணக் கொம்பு பிருவையை பெரிதாய் யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் கோணைக் கொம்பு பிருவை எப்படியும் தன் வயிற்றை நிறப்பிக் கொள்ளும். புதிது புதிதாய் வரும் கிடாய்களைக் கூட கிட்ட அண்ட விடுவதில்லை. அதற்கு நன்றாய் தின்பது தண்ணீர் குடிப்பது, அது தான் வேலை.

        கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. தற்பொழுது செம்மிக் கிடாயின் கால் நன்கு குணமாகிவிட்டது. அன்று காலை குட்டிமணி தூங்கி விழித்து வெளியே வந்தாள். ராசுப்பையனும் வசந்தாவும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். வசந்தாவின் கையில் கோணக் கொம்பு பிருவையை கயிற்றுடன் பிடித்துக் கொண்டிருந்தாள். ராசுப்பையன் அந்த ஆட்டை சினை ஆடு என்று பொய் சொல்லி பேரம் பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி முன்பணத்தை மட்டும் கையில் கொடுத்துவிட்டு மீதியை இரண்டொரு நாளில் தருவதாக கூறினாள். மொத்த ரூபாயையும் இப்பொழுதே தரவேண்டும் என்று கராராக பேசுவது போல் நடித்தான். உள் மனதில் எப்படியாவது இந்த ஆட்டை விற்றால் போதும் என்று இருந்தது. சாந்தாவும் இரண்டு பேருக்கும் நடுநிலையாய் பேசுவது போல் பேசி அந்த பெண்ணுக்கு இரண்டு நாள் அவகாசம் வாங்கிக் கொடுத்தாள். அந்தப் பெண் கோணக் கொம்பு பிருவையை ஓட்டிச் சென்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குட்டிமணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் அவளுடைய செம்மிக் கிடாயைக் கொஞ்ச சென்றுவிட்டாள். கொணக் கொம்பு பிருவை போனதில் அவளுக்கும் மகிழ்ச்சியே. அவளுக்கு அதைக் கண்டாலே பிடிக்காது.

        இந்த வாரம் வியாபாரத்திற்கு கிடாய்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை ராசுப்பையனுக்கு. கிடைத்த கிடாய்களை மிதிவண்டியில் கட்டிவந்து பட்டியில் அடைத்துக் கொண்டிருந்தான். இவைகளை வழக்கமாக தன்னிடம் வாங்கும் கறிகடைகாரர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். பொதுவாக சனிக்கிழமை மாலையே இருக்கும் கிடாய்களை பிரித்துக் கொடுத்து விடுவான். இந்த வாரம் சனிக்கிழமை மாலை திருப்பூருக்கு சொந்த விசயமாக செல்லவேண்டியிருந்தாதால் அன்று காலையில் இருந்து இன்னாருக்கு எந்தெந்த கிடாய்களென்று பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தான் ராசுப்பையன். மதியம் நேரமாகவே மனைவி சாந்தாவிடம் மீதி இருக்கும் ஆடுகள் யார் யார்க்கென்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

        குட்டிமணி சனிக்கிழமை என்பதால் மதியமே பள்ளி முடிந்து புத்தகப் பையை தோளில் போட்டுக் கொண்டு சாலையில் நடந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். எதிரில் டிவிஎஸ்-50யில் ஆட்டை வைத்துக் கொண்டு இருவர் வருவதைப் பார்த்தாள். வண்டியின் பின்னால் ஆட்டை மடியில் வைத்திருப்பவர் ஆட்டின் இரண்டு பக்க கால்களையும் இரண்டு கைகளால் இருக்கி பிடித்துக் கொண்டிருந்தார். வண்டி அவள் அருகில் வர வர ஆடு கத்தும் சத்தத்திற்கு திரும்பிப் பார்த்தாள். அது அவள் செம்மிக் கிடாய் போலவே தெரியவும் ஒரு நிமிடம் நின்றவளுக்கு அதிர்ச்சி. ஆம் அது அவளுடைய செம்மிக் கிடாய் தான். இவள் பார்த்த கணமே அதுவும் இவளைப் பார்த்துவிட்டது. குட்டிமணியைப் பார்த்ததும் செம்மிக் கிடாய் பிடித்திருந்தவர் நிலை குலையும் அளவுக்கு துள்ளியபடி அடி வயிற்றில் இருந்து பே பே என சத்தமாக அலரியது. மடியில் வைத்துப் பிடித்திருந்தவர் தன் மொத்த வழுவையும் ஆட்டின் மீது செலுத்தி அழுத்திப் பிடிக்க வண்டி அவளைக் கடந்து போனது.

        சில வினாடிகள் குட்டிமணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. செம்மிக் கிடாய் தலையை இவள் பக்கம் நீட்டி கத்தியபடியே முக்கு திரும்பியது. குட்டிமணி ம்மா…. என கத்தி அழுதபடியே வீட்டை நோக்கி ஓடினாள். வீட்டு வாசலில் நின்றிருந்த சாந்தா, குட்டிமணி அழுதபடி ஓடிவரவும் பதறியபடி அவளை நோக்கி சென்றாள். ஏஞ்சாமி என்று கேட்டபடி அருகில் வந்த சாந்தாவை சட்டை செய்யாதவளாய் பட்டியை நோக்கி ஓடினாள். ஆம் அவள் நினைத்தது போலவே செம்மிக் கிடாயைத் தான் தூக்கிச் சென்றனர். பட்டியில் செம்மிக் கிடாய் இல்லை. குட்டிமணி பள்ளிப் புத்தகப் பையை வீசி எறிந்து விட்டு கீழே படுத்து கத்தி அழுது புரண்டாள். சாந்தாவுக்கு புரிந்துவிட்டது. அதற்காகத் தான் குட்டிமணி பள்ளியை விட்டு வருவதற்குள் அவசர அவசரமாக செம்மிக் கிடாயைக் கொடுத்துவிட்டாள்.

    சாந்தாவும் ஆனவரை குட்டிமணியைச் சமாதானம் செய்து பார்த்தாள். குட்டிமணியின் அழுகை ஓயவே இல்லை. சாந்தாவும் வியாபாரம் பேசும் போதே ராசுப்பையனிடம் சொல்லிப் பார்த்தாள். ராசுப்பையன் தான் கோபமாக, அவ தான் ஏதோ வெளயாட்டுக்கு கேக்கறான்னா, உனக்கும் என்ன கூரு கெட்டுப் போச்சா. காசு மொடங்கிப் போச்சே இத எப்படா வித்து காசாக்குவோம்னு ஒரு மாசமா அல்லாடிகிட்டு இருக்கேன். வெளயாட்டு பண்ணீட்டு இருக்கீங்களா என்று சத்தம் போட்டுவிட்டு இவர்கள் வந்தால் கொடுக்கச் சொல்லிவிட்டு தான் ஊருக்கு போனான். குட்டிமணி எந்த சமாதானத்தையும் கேட்பதாய் இல்லை. நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள். இரவு எவ்வளவு கெஞ்சியும் குட்டிமணி ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. தரையில் படுத்தவள், தேம்பித் தேம்பி அழுதபடியே தூங்கிப் போனாள். நன்றாக தூங்கிய குட்டிமணியை தூக்கி கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தாள் சாந்தா.

    விடியற்காலை முதல் பஸ்ஸில் வந்து இறங்கிய ராசுப்பையன் வீட்டை அடைந்தான். வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த சாந்தா ராசுப்பையனைப் பார்த்ததும், உங்க புள்ள என்ன பண்ணா தெரிய்ங்லா னு ஆரம்பித்து அனைத்தையும் கூறினாள். செரி வுடு அதுக்கென்ன பண்றது, கோளாறா சொல்லிக்கலாம் என்று கூறிக்கொண்டே விட்டுக்குள் நுழைந்தான். கட்டிலில் படுத்திருந்த குட்டிமணி முனகிக் கொண்டிருந்தாள். அருகில் சென்ற ராசுப்பையன் குட்டிமணியை தொட்டுப் பார்க்க, உடல் அனலாய் கொதித்தது. மணி மணி என்று ராசுப்பையன் குட்டிமணியை எழுப்ப, அவளோ முனகியபடியே நடுக்கினாள். ராசுப்பையன் சாந்தாவை கூப்பிட்டு, லே சாந்தா ஒடியா. மணியப்பாரு காச்ச வந்து நடுங்கறா என்க. உள்ளே ஓடி வந்த சாந்தாவும் குட்டிமணியைத் தொட்டுப் பார்த்துவிட்டு. ஆமாங்க, இப்பிடி நெருப்பா கொதிக்கிது என்றாள்.

        ராசுப்பையன் மிதிவண்டியை வேக வேகமாக மிதித்தான். பின்னால் சாந்தா குட்டிமணியை கம்பிளி போர்த்தி மடியில் வைத்து உட்கார்ந்திருந்தாள். பூலப்பளையத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் ஒரு மருத்துவர் தோட்டம் உள்ளது. அவருக்கு ஈரோட்டில் மருத்துவமனையும் வீடும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் தோட்டத்திற்கு வந்துவிடுவார். யாராவது அக்கம் பக்கத்தினர் உடல் நிலை சரியில்லாமல் வந்தால் மருத்துவம் பார்த்து மாத்திரை மருந்து கொடுப்பார். அவரைப் பார்க்கத்தான் குட்டிமணியை அழைத்துச் செல்கிறான் ராசுப்பையன். மருத்துவருக்கும் ராசுப்பையன் நல்ல அறிமுகம். மருத்துவரின் தோட்டத்திற்குச் சென்ற ராசுப்பையனை பார்த்த மருத்துவர், ஏ ராசு மவளுக்கென்ன? என விசாரித்தார். விவரத்தைச் சொன்னதும், அட ஊருக்கெல்லாம் ஆடு விக்கிற ராசு புள்ளைக்கி ஒரு ஆடு இல்லியா. வுடு உங்கொப்பன உனக்கு புதுசா ஒன்னு புடிச்சிச் தாறச் சொல்றேன் என்று குட்டிமணியிடம் சொன்னவர். ராசு என்ன சொல்ற என ராசுப்பையனைப் பார்த்து சிரித்தார்.

        காச்ச உண்டுனாத் தான் இருக்குது, இந்த மாத்தரைய மூனு நாலைக்கு ரெண்டு வேல குடு. அப்பறம் கஞ்சி வெச்சி குடுக்கச் சொல்லு. செரி ஆயிடும், செரி ஆவுலைனா ஈரோட்டுக்கு கூட்டீட்டு வா பாத்துக்கலாம்னு சொல்லி அனுப்பிச்சார் மருத்துவர். மீண்டும் மிதிவண்டியில் இருவரையும் ஏற்றிக் கொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான். குட்டிமணியின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. சோர்ந்து முகமே சுண்டிப் போய் இருந்தது. ஏதோ யோசனையிலேயே வண்டியை வீட்டுக்கு ஓட்டியபடியே வந்து சேர்ந்தான். வீட்டில் இருவரையும் இறக்கி விட்டதும். சாந்தா புள்ளைக்கி கஞ்சி வெச்சி குடுத்துட்டு மாத்தரைய போடச் சொல்லு, தா வந்தர்றேன் என்று கூறிவிட்டு மிதிவண்டியை சாலையை நோக்கி செலுத்தினான். பின்பு ஒரு மணி நேரம் கழித்து வந்தவன் சாந்தாவைப் பார்த்து, மணி என்ன பண்றா என கேட்டான். ம் ஒரு நாலு வாய் தா கஞ்சி குடிச்சா. மாத்தரைய குடுத்து படுக்கவெச்சிருக்கேன் என்றவள். நீங்க யெங்க போனீங்க என கேட்டாள்.

        சிறிது நேரம் ஆட்டுப் பட்டியின் அருகில் நின்றவன். சாந்தாவைப் பார்த்து, பேட்டைக்கு கறிக்கடைக்காரன பாக்கத்தான் போனேன் என்றான். சாந்தா கண்களை அகல விரித்தபடி, செம்மிக் கெடாய புடிச்சார போனீங்களா? என்னாச்சி ஆட்ட அறுத்துபுட்டாங்களா என்றாள். ஆட்ட அறுக்கல ஆனா யாரோ கெழக்க ஏழூர் பண்ணையாயி கோயலுக்கு புதங்கெழம அறுக்கறதுக்கு புடிச்சிக்கிட்டு போயிட்டாங்கலாம். என்ன பண்றது வந்துட்டேன் என்றான் ராசுப்பையன். உள்ளே படுத்திருந்த குட்டிமணி தூங்கவில்லை. வெளியில் பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டுக் கொண்டவள் மீண்டும் விசும்பி அழத் தொடங்கிவிட்டாள். ராசுப்பையனுக்கு ஒரு பக்கம் எரிச்சலும் இன்னொரு பக்கம் மகளை பார்த்து விசனமாயும் அன்றைய பொழுதைக் கழித்தான்.

        இரண்டு நாளாய் குட்டிமணி பள்ளிக்குப் போகவில்லை. வீட்டிலேயே ஓய்வில் இருந்தாள். அன்று மாலை வெளியில் சென்றிருந்த ராசுப்பையன் வீட்டு வாசலை அடைந்ததும் ஒரே அதிர்ச்சி. கோணக் கொம்பு பிருவையுடன் வாங்கிச் சென்ற பெண்மணியும் இருந்தாள். ராசுப்பையனைப் பார்த்ததும். ஏங்க உங்கள நம்பி ஆடு வாங்கீட்டு போனா, இப்பிடியா ஏமாத்துவீங்க என்று சத்தம் போட்டாள். ஏங்க என்னங்க ஏமாத்திப்புட்டாங்க என்றான் ராசுப்பையன். எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா? இந்த ஆடு சென புடிக்காத ஆடாமா. இத சின்னியம்பாளையத்துல இருந்து கறிக்கு புடிச்சாந்துட்டு செனை ஆடுன்னு எந்தலைல கட்டிபுட்டீங்க. நல்லாருக்குது நாயம். எனக்கு எல்லாத்தையும் சின்னியம்பாளையத்து யாவாரி சொல்லிபுட்டான். நானும் மடியப் பாத்து ஏமாந்துட்டேன் பாறேன். மருவாதையா எம்பட காச குடுத்துபுடுங்க என்று ஆடினாள்.

        ஏம்மா உம்பட காசு தான வேணும், சத்தம் போடாத. இதா வரென் என்று கூறி வீட்டுக்குள் சென்று சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்தபடியே வந்தான். எண்ணிய பணத்தை அந்த பெண்மணியிடம் கொடுத்துவிட்டு, உம்பணத்த புடி. ஆட்ட வுட்டுப் போட்டு போ என்றான் கோபமாக. பணத்தை வாங்கிக்கொண்ட அந்த பெண்மணி, இந்த மாரி யாவாரமெல்லாம் பண்ணாத என்று திட்டியபடியே சென்றாள். இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குட்டிமணியைப் பார்த்து சாந்தா, மணி இந்தா இந்த கெரகத்த பட்டில கொண்டு போயி தள்ளு என்று கயிற்றை நீட்டினாள். குட்டிமணி கயிற்றைப் பிடித்துக் கொண்டு கோணக் கொம்பு பிருவையை பட்டிக்கு ஓட்டிச் சென்றாள். போகும் குட்டிமணியைப் பார்த்து சாந்தா, ஆடு ஆடுன்னு காச்ச வந்து படுத்தியல்ல, இது வித்து தொலையற மாறி தெரியல இதெயே வெச்சிக்கோ என்றாள். வெடுக்கென்று கயிறை வீசிய குட்டிமணி, எனக்கொன்னும் இது வேண்டாம் எம்பட செம்மிக் கெடா தா வேணும்னு மூஞ்சிய இழுத்தபடி வர. அப்பிடியே சாத்துனன்னா பாரு. ஒழுங்கு மருவாதயா இன்னும் ஒரு வேல மாத்தரய ரவைக்கி முழுங்கிப் போட்டு காலைல பள்ளிக்கோடத்துக்கு ஓடிப்போயிரு என்று பல்லைக் கடித்தாள் சாந்தா. குட்டிமணி ராசுப்பையனைப் பார்க்க, அவனும் கோபத்துடன் குட்டிமணியைப் பார்த்தான். மீண்டும் அழுதபடியே குட்டிமணி உள்ளே சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

        அடுத்த நாள் புதன்கிழமைக் காலை தூங்கி எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த குட்டிமணி பட்டியில் இருந்து கோணக் கொம்பி கத்தும் சத்தம் கேட்டு அருகில் சென்றாள். கோணக் கொம்பி மீண்டும் மீண்டும் குட்டிமணியைப் பார்த்து அடிவயிற்றில் இருந்து கத்தியபடியே முன்னும் பின்னும் காலை அகட்டியபடி இருந்தது. அதிகாலை வெயில் குட்டிமணியின் முகத்தில் அடிக்க, கண்களை சுருக்கியவாறு கோணக் கொம்பியை உற்றுப் பார்த்தாள். முக்கி முனகி பின் கால்களை அரைநிலையில் அமர்ந்த கோணக் கொம்பியின் பின்புறம் இருந்து இரத்தம் வடிய பனிக்குடத்துடன் இரண்டு குட்டி வெள்ளைக் கால்கள் வெளியே வந்தது. பட்டியின் படலை பிடித்தபடி நின்றிருந்த குட்டிமணியின் கண்கள் விரிந்தது. மெல்ல மெல்ல குட்டியின் தலைப்பகுதி வெளியே வர குட்டிமணியின் இரண்டுக் கண்களிலும் சூரியன் கண்ணீர் துளியில் தங்கி மின்னியது. அடுத்த சில வினாடிகளில் குட்டியின் முழு உடலும் பனிக்குடத்துடன் கீழே விழ, பனிக்குடம் நீர்ப்பை உடைப்பட்டு சிதற குட்டியின் முழு உடலும் தெரிந்தது. குட்டியின் உடல் முழுதும் செம்மி நிறம், நெற்றியில் வெள்ளைப் பொட்டு, கண்களைச் சுற்றி வெள்ளை நிறம், நான்கு கால்களும் முட்டிக்கு கீழ் வெள்ளை நிறம். கோணக் கொம்பி குட்டிமணியைப் பார்த்து முணகியவாறே குட்டியின் உடலை நக்கிக் கொடுத்தாள்.

        குட்டிமணி கண்களில் தேங்கிய இரு சூரியனையும் ஒற்றைக் கையால் துடைத்தெரிந்தாள்.

-ஆரன்

09.02.2022

0 comments:

Post a Comment