சுட்ட வடை

      

      தீபாவளி அன்று மதியம் சமையலறையில் வடை சுட்டுக்கொண்டிருந்த அம்மா மகனைக் கூப்பிட்டு, பாட்டிக்கிட்ட இந்த வடைய கொடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்னாள்.

       வரவேற்பறையில் பாட்டி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். பாட்டிக்குக் கண் பார்வை தெரியாது. பேரனிடம் வடையை வாங்கி சாப்பிட்ட பாட்டி, வடை சுவையாக இருக்கிறது என்றும் கொஞ்சம் உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொன்னாள்.

       உண்மையிலேயே அன்று அம்மா சுட்ட வடை அருமையாக இருந்தது. பேத்தியின் காலடிச் சத்தம் கேட்டப் பாட்டி, பேத்தியிடம் உள்ளே ஓடும் மின் விசிறியை நிறுத்தச் சொன்னாள். சமையறை உள்ளே ஒரே களேபரமாக இருந்தது.

       அம்மா நீ என்ன அண்ணனுக்கே குடுத்துக்கிட்டு இருக்கற, நான் நாலு தான் சாப்பிட்டேன். அண்ணன் இதோட ஆறு சாப்பிட்டுட்டான் என்று சத்தம் போட்டாள். இருமா தரேன்னு சொல்லி இன்னும் இரண்டு வடையை மகளிடம் கொடுத்தாள்.

       தன்னை கடந்து சென்ற மகனிடம் பாட்டி, ஏம்பா நீ வடை சாப்பிட்டாயா என்று கேட்க. இதா சாப்புடறேன்மா என்றவர் சமயலறையில் சேர்ந்து கொண்டார். அப்பாவுக்கு கொடுக்கச் சொல்லி மகனிடம் வடையைக் கொடுத்தாள் அம்மா.

       அம்மா பணம் குறைவாக இருந்ததால் வடைக்குத் தேவையான பொருட்கள் அளவாகத் தான் வாங்கியிருந்தாள். அடிக்கடியெல்லாம் வடை சுடமாட்டாள் அம்மா. குழந்தைகள் ஆசையாய்க் கேட்டதால் இன்று செய்தாள்.

       மறுபடியும் வடைக்குச் சண்டையிட்டுக் கொண்ட சிறுவர்களிடம் அம்மா, அவ்வளவு தான் இதொட முடிஞ்சது, இந்தாங்க ஆளுக்கொன்று இனிமே கேட்காதிங்க என்று கூறினாள். அதற்கு அப்பா, ஏன் பாத்திரத்தில் இருக்கிறதே என்று கூற. ம்…. இன்னும் நான் சாப்பிடவில்லை, மீதமிருந்தால் மாலையில் சாப்பிடத் தருகிறேன் என்றுக் கூறினாள்.

       வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவையே சிறுவர்கள் சுத்திச் சுத்தி வந்தார்கள். அப்பாவும் அம்மாவை நோக்கிக் கையை நீட்ட, அவ்வளவு தான் முடிந்தது. எல்லோரும் கிளம்புங்க. இன்னும் நாலு தான் இருக்கு மாலை ஆளுக்கு ஒன்றுத் தருகிறேன் என்றுக் கூறிவிட்டு பாத்திரத்தை மூடி வைத்துவிட்டாள்.

       அப்பா, நான் தான் சரியாகச் சாப்பிடவில்லை நீ எனக்குத் தான் கொடுக்க வேண்டும் என்றுக் கூற. இல்லை இல்லை எனக்குத் தான் என்று சிறுவர்களும் கூறினார்கள். அனைவரையும் சமயலறையை விட்டு விரட்டி விட்டாள் அம்மா.

       பிள்ளைகள் மாலை வரை வெளியே சென்று விளையாடுவதும் வருவதுமாக இருந்தனர். அப்பா மாலை வரை படுக்கையறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். பாட்டி வரவேற்பரையில் வழக்கம் போல் கட்டிலில் படுத்திருந்தாள்.

       மாலை அம்மாவைப் பார்க்க வந்திருந்த அவளது பிரியமான தம்பியிடம் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். சமையலறையிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்த அப்பாவிடம் பாட்டி எனக்கும் கொஞ்சம் தண்ணீர் குடுப்பா என்று கேட்க, தண்ணீர் கொடுத்து விட்டு வெளியே வந்து தானும் மைத்துனனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

       இரவு உணவு நேரம் மீண்டும் சமையலறையில் ஒரே களேபரம். பாத்திரத்தில் இருந்த வடையைக் காணவில்லை. சிறுவன் தங்கையைக் காட்டி, அம்மா இவ தாம்மா எடுத்து சாப்பிட்டிருப்பா என்று குற்றம் சொல்ல. அழுதபடியே தங்கை இல்லம்மா இவன் தான் அடிக்கடி வீட்டுக்குள்ள வந்துட்டுப் போனான்னு சொன்னாள்.

       என்னங்க நீங்க தான என்று அம்மா அப்பாவக் கேட்க, என்ன விளையாடறயா… நான்லாம் எடுக்கலன்னு கூறினார். இப்படியே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார்கள்.

       கடைசியாக விவாதம் வரவேற்ப்பறையிலும் நீண்டது. ஒவ்வொருவரும் எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது என கூற.

      பாட்டியும் எனக்குத் தெரியாது என்றுக் கூறினாள்.


-ஆரன்   29.04.2021

 

1 comment:

  1. சுட்ட வடை சரியாக வேக வில்லை என நினைக்கிறேன்

    ReplyDelete