கன்னக்குழி

     

      அம்மா தம்பி முழிச்சிட்டாம்மா… ங்கற மூனு வயச தாண்டுன மக, மலர்க்கொடிய பாத்து பதட்டமா, மலரு தம்பிய எழுப்பிடாதடீ நா கூலி காசு வாங்கியார போவோனும் என்றாள் துளசிமணி. தொட்ட சீலய ரெண்டு கைலயும் பிரிச்சு பாத்த மலர்க்கொடி, இல்லம்மா அவென் முழிச்சிகிட்டாம்மா, இங்க பாரு வெளயாடிட்டு இருக்காங்கறா. சீமெண்ண அடுப்புக்கு திரி சொருவிக்கிட்டு இருந்த துளசிமணி கைய கரித்துணில தொடச்சிகிட்டு வந்து நடு உத்தரத்துல தொங்குன தொட்டல எட்டிப்பாத்தா. பொறந்து ஆறு மாசங்கூட ஆவாத சத்திவேலு அவிய அம்மாவப் பாத்ததும் கையாயும் காலயும் வெசயா ஆட்டிகிட்டு சிரிக்கிறான். சத்திவேலு நல்லா கொழு கொழுன்னு அவன் அம்மா மாறியே லச்சணமா இருப்பான். கொழந்த சிரிச்சான்னா கன்னத்துல குழி உழுவறது இன்னு அழகு. பெருமூச்சுவுட்ட துளசிமணி இடுப்புல கையவச்சுகிட்டு, தொட்டல்ல போட்டு ஒரு மணி நேரங்கூட ஆவுல அதுக்குள்ள எந்திரிச்சிக்கிட்டானே. மானொ வேர நேத்து மாரியே கருக்கீட்டு வருது, மழக்கி முன்ன நா போயி கூலி வாங்கியாரோனும் இப்ப நா யென்ன பண்றதுன்னு சொல்லிட்டே மவன தூக்கி தரயில கோரவச்சா.

துளசிமணி புருஷனத் தின்னு ரெண்டு மாசந்தெ ஆவுது. இதுக ரெண்டெயும் வெச்சிகிட்டு பாவம் தடுமாறிட்டு இருக்கறா. செல்லத்துரை தண்டவாளத்துகிட்ட செத்துக்கெடக்கறான்னு காதுல கேட்டதுல இருந்து இன்னிக்கி வரைக்கும் நடக்கரது நெசமான்னு இன்னும் அவளால நம்ப முடில. செல்லத்துரை இருந்த வரைக்கும் இவுளுக்கு ஒரு கொறையும் வெக்காம அவ்ளோ நல்லா கீழ எறக்காம வெச்சிருந்தான். செல்லத்துரை சாமியப்பன் தோட்டத்துல தான் ஒம்போது வருஷங்கிட்ட பண்ணைத்துக்கு வேல பாத்துக்கிட்டிருந்தான். சாமியப்பன் தோட்டம் இருக்கறது வேடப்பட்டி கெராமத்துல இருந்து மூனு மைலு தொலவுல இருக்குது. தோட்டத்துல இருக்கற சாளை வூட்டத்தான் இவுங்க பொழப்புத்தனம் பண்ண உட்டுருந்தாப்டி சாமியப்பன். மண்ணுல கட்டுன செவுரு, மேல பன ஓல வேஞ்சது. சோராக்கறது வெளிய வெறகடுப்புலதான் ஆக்கனும். குளிக்கறதுக்கு வூட்ட ஒட்டியே தென்னங்கீத்துலயே படல கட்டிக்கிட்டான் செல்லத்துரை. துளசிமணி வூட்டு வாசல நல்லா சாணில வளிச்சி சிண்ணாம்புல கர கட்டி அழகா வச்சிருப்பா. செல்லத்துரை இருந்தவரைக்கும் துளசிமணிக்கு கருக்கடை இருந்ததே யில்ல. பக்கத்துல எட்ட எட்ட அங்கொன்னும் இங்கொன்னுமாதான் ரெண்டு மூனு கொட்டாயி இருக்கும். காவலுக்கு மணின்னு ஒரு நாயி இருந்துது அதுவும் செல்லத்துரைய எடுத்த அன்னிக்கி போனது போனது தான்.

துளசிமணி அம்மா வூட்டுக்கும் அடிக்கடி போவ முடியாது. தோட்டத்துல இருந்து நடந்து வேடப்பட்டி போயி அங்கிருந்து ரெண்டு பஸ்ஸு மாறி நொச்சிப்பாளையம் கெராமத்துக்கு போவனும். அங்க அவிங்கம்மாளே தம்பியும் தங்கச்சியையும் வெச்சிகிட்டு ஒத்தயில ஓரியாடிட்டிருக்கறா. இதுல இவ எங்க அங்க போறது. அதுவுமில்லாம செல்லதுரை அக்கம்பக்கத்துல கொஞ்சம் பாக்கிசாக்கி வேர வெச்சிருக்கறான். செல்லதுரை செத்ததுக்கப்பொறம் சாமியப்பனுக்கு துளசிமணிய அங்கிருந்து போவச்சொல்றதுக்கு மனசு வல்ல. இங்கயே தோட்டத்துல ஆன வேலயப் பாத்துகிட்டு இரு, என்னால ஆனத கொடுகறேன்னு சொல்லீட்டாரு சாமியப்பன். துளசிமணியும் சாமியப்பன் தோட்டத்தையும் பாத்துகிட்டு, அக்கம்பக்கத்துல களையெடுக்க காய் பொறிக்கன்னு எதாவது வேலயிருந்தாலும் போயி பையன மரத்துல தொட்டல கட்டிப் போட்டுட்டு மலர பாத்துக்கச் சொல்லீட்டு வேல செய்வா. நாளு நா முன்னாடி களையெடுத்தக் கூலிய வாங்கத்தான் இப்ப பொறப்பட்டுட்டு இருக்கறா.

வேடப்பட்டிக்கி வண்டித்தடத்துல போனா சுத்திகிட்டு போவனும். அப்பிடியே நாளஞ்சு தோட்டத்துக்கந்தாண்ட தண்டவாளத்த தாண்டி இட்டேரி வழியா போனா கொஞ்ச நேரம் மிச்சமாவும். எப்பிடிப் பாத்தாலும் போவ வர ஒரு மணி நேரமாவது ஆவும். தொட்டல்ல இருந்து பையன எறக்கி வுட்டுட்டு வெளிய வந்தவ நனஞ்சிருந்த வெறகடுப்பையும், வெறவையும் வெறிச்சிப் பாத்தவ. சீமெண்ண அடுப்புல திரிய போட்டாச்சி, கூலிய வாங்குனதும் அப்பிடியே கோனாரு கடையில சீமெண்ணயும் கொஞ்ச சாமணமும் வாங்கியாந்தரனும்னு நெனச்சிக்கிட்டுத் திரும்ப. காத்துல அந்த காலத்து மரக்கதவு மடேர்ன்னு சத்தத்தோட நெலவுல அடிச்சி உள்ளார தாழ் உழுந்திரிச்சி. துளசிமணி வேகமா ஓடி கதவ தள்ளுனா தொரக்கமுடியல. ஏண்டி மலரு கதவ தொறந்துடுரீ ன்னு கத்திகிட்டே தள்ளிப் பாக்கறா முடில. கதவு அடிச்ச சத்ததுல விறுக்குனு விழுந்த ரெண்டு பொடுசுகளும் திரு திருன்னு முழிக்க, அம்மா சத்தங்கேட்டு கதவுகிட்ட வந்த மலரு தாப்பாழ நுனிக்கால்ல எக்கி எக்கி ஒருவழியா தொறந்துவிட்டா. உள்ள வந்த துளசிமணி கோவமா, இந்த கதவுக்கு முட்டக்குடுத்த உருண்ட கல்ல எடுக்காதன்னு எத்தன தடவ சொல்றதுன்னு சொல்லிட்டே மலரு தலயில ஒரு கொட்டு வெச்சா. மலர்க்கொடி, நா எடுக்கலமான்னு தலய தேக்க, ச்சோ.. ஆமாண்டி நா தான் திரிய நறுக்கறதுக்கு கல்ல எடுத்துக் கொட்டுனேன்னு தலயில அடிச்சிகிட்டா. இப்பியே மணி நாளு கிட்ட ஆவுது இந்தப் பய பொழுது வரைக்கும் தூங்குவான்னு பாத்தா இப்பிடி பாதிலயே ஏந்திரிச்சி வெளயாடிட்டு இருக்கு. இப்ப யாருகிட்ட வுட்டுட்டு போறதுன்னு நெனச்சவ, பக்கத்து தோட்டத்து நாச்சாயியம்மாவ ஒதவி கேக்கலாமுன்னு ரோசனையோட கொண்டய போட்டுகிட்டே வெளிய வாசலுக்குப் போயி வடக்கால பத்தெட்டு வச்சவ கூப்புடற தூரத்துல ஆடு மேச்சிகிட்டிருந்தம்மாவ, அம்மோவ்….. ஓ…. அம்மோவ்ன்னு கூப்புட. ஏல தொளசி யென்னொ ன்னு அந்தம்மா பதிலுக்குக் கேக்க. யம்மா கூலி வாங்கறதுக்கு வேடப்பட்டி வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு ஓடியாந்தரனுங்க, செத்த புள்ளைகளப் பாத்துக்கிறீங்களான்னா.

நாச்சாயி பக்கத்துத் தோட்டத்துப் பெரியமனுசி. யெப்பவும் வெடுக்கு வெடுக்குன்னு தா பேசரவ. செல்லத்துரை செத்ததுக்கப்பறம் துளசிமணி மேல கொஞ்சம் பிரியமா பேசும். சொந்தக்கவுங்க ஒரு மாசங்கிட்ட வரப்போவ இருந்ததுக்கப்பறம் துளசிமணிக்கு பேச்சித்தொணைக்கு நாச்சாயம்மாவ வுட்டா வேற ஆளில்ல. துளசிமணி தாலியறுத்தன்னைக்கி நாச்சாயி வெச்ச ஒப்பேரிக்கு செல்லத்துரைகூட பொழச்ச பொழப்பு பூரா கண்ணுல வந்துட்டுப் போச்சி. அந்த ஒப்பேரி தனியா இருக்குற நாச்சாயி பாரத்தையும் அன்னிக்கி எறக்கி வச்சிருக்கும். என்னவோ துளசிமணி பாத்துக்கிறீங்களான்னு கேட்டதுக்கு மறுக்காம, நா இங்கதா ஆடு மேச்சிகிட்டு இருப்பேன். நீ வெரசா போயிட்டு வந்துருன்னு சொல்ல. தா கெளம்பீட்டம்மா, இந்தப் பையன் வேற தூங்காம எந்திரிச்சிகிட்டான். ஒரு தடவ தொட்டல்ல போட்டு ஆட்டிப்பாக்கறம்மா சொல்லிகிட்டே உள்ள போனவ பையன தொட்டல்ல போட்டு ஆட்ட ஆரம்பிச்சா. செத்த நேரத்துல பையன் கண்ணசந்ததும் மெதுவா, மலரு நான் சீக்கரமா போயிட்டு ஓடியாந்தர்றேன். பையன் அழுதான்னா நாச்சாயம்மா பக்கத்துலதான் ஆடு மேச்சிகிட்டிருக்காங்க கூப்புட்டு வுடு ன்னா. பதிலுக்கு ம் னு மண்டைய ஆட்டுன மலருகிட்ட. கண்ணு சத்தங்கித்தம் போட்றாத பையன் எந்திரிச்சிக்குவான் நீயி வாசல்லயே வெளயாடிட்டிரு ங்க. மலரு நோம்பிக்கி வாங்குன பொம்மை ரெண்ட எடுத்துகிட்டு வெளிய போயிட்டா. துளசிமணி மெதுவா உரலக் கல்ல கதவுக்கு மறுபடியும் சரியா முட்டக்குடுத்துட்டு நெலக்கதவ தாண்டற நேரம் கூரமேல சர சரன்னு சத்தம். விறுக்குனு விழுந்தவ பின்னாடி ரெண்டெட்டு வெச்சி கூரய பாக்க மறுபடியும் ஒரு சத்தமும் இல்ல. இப்பெல்லாம் துளசிமணி அடிக்கடி கறுக்கு கறுக்குன்னு பயந்தமாறியே இருக்கா. காரணம்..

சடையன். செல்லத்துரை சாவுக்கு வந்துட்டு போனவன் அதுக்கப்பறம் வீட்டுப் பக்கம் அடிக்கடி வர ஆரம்பிச்சான். செல்லத்துரைக்கு தூரத்துச் சொந்தங்கறதால ஆரம்பத்துல துளசிமணி பெருசா கண்டுக்கல. அவளே ரெண்டு கொழந்தைங்க மூஞ்சியப் பாத்துகிட்டே பித்து புடிச்சாப்லயே இருப்பா. ஆனா சடையனுக்கு நோக்கம் வேறயா இருந்தது அவளுக்குத் தெரியில. ரெண்டு கொழந்தய வெச்சிகிட்டு தனியா இருக்கற துளசிமணி மேல கண்ணம் வெச்சிட்டான். குடிகார சடையனோட அடி ஒதய தாங்க முடியாம அவன் பொண்டாட்டி ஒரேடியா அவங்கம்மா வூட்டுக்கே போயிட்டா. ஊருக்குள்ள பொரிக்கித்தனம் பண்ணிக்கிட்டு, அடிக்கடி போலீசு கேசுன்னு உள்ள போயிட்டு வர்ர மொரடன். திடீர்னு வருவான் வழ வழன்னு பேசிகிட்டே இருப்பான். ரொட்டி வாங்கியாந்து மலருகிட்ட குடுத்துட்டு வழின்னா நின்னு பேசிட்டே இருப்பான். நாளாக ஆக லேசா துளசிமணிக்கி ஏதோ மனசுக்கு தப்பாப்பட, அன்னையிலிருந்து அவன கவனிக்க ஆரம்பிச்சா. வாய்க்கால்ல பையன கால்ல போட்டு குளிக்கவெக்கம்போதும், சருவ சட்டிய வெளக்கீட்டிருக்கும் போதும் கூட வெள்ளயா தெரியிர அவ ஒடம்ப அங்கங்க மேஞ்சிகிட்டே இருப்பான். துளசிமணிக்கி நல்லா புரிஞ்சி போச்சி, அதுல இருந்து அவளுக்கு அவனக்கண்டா ஒடம்பெல்லாம் ஒதரலெடுக்க ஆரம்பிச்சிடுது. போகப்போக கிட்டக்கிட்ட வந்து குடிபோதயில ரேட்ட அர்த்தத்துல பேச ஆரம்பிச்சான். துளசிமணியும் பையனத் தூக்கி கையிலவெச்சிகிட்டு அவங்கிட்ட இருந்துத் தப்பிக்க அலமோதுவா. பொறுக்கமாண்டாம ஒரு நா நாச்சாயம்மாகிட்ட ஓ..ன்னு அழுதுகிட்டே விசியத்தச் சொன்னா.

அடுத்த நா வரப்புல தடுமாறிட்டே வர்ர சடையன நாச்சாயி கொட்டாயிலிருந்தே பாத்துட்டா. வெரசா துளசிமணி வூட்டுக்கிட்ட வந்த நாச்சாயி சடையன குறுக்காட்டிகிட்டா. ஏம்பா ஆரு நீ, இப்புடி குடிச்சுபுட்டு பொம்பள தனியா இருக்கற வூட்டுப்பக்கம் வந்து ரவுசு பண்ணீட்டு இருக்க. சொந்தக்காரன்னா எழவுக்கு வந்தியா போனியான்னு இருக்கோனும். கேக்க ஆளில்லன்னு பாத்தியா. இத்தான் கடசி ஆமா பாத்துக்கன்னு சத்தம் போட. சடையன் ரெண்டு நிமிஷம் அப்படியே துளசிமணியவே உத்துப்பாத்தான். துளசிமணி வெடவெடத்து நின்னுகிட்டு இருக்கறதப் பாத்து நாச்சாயி, இப்ப போறியா என்னாங்கற ஆளப்பாரு அவனப்பாரு ங்க. அந்த எடத்தவுட்டு திரும்பிப்போன சடையன் அதுக்கப்பறம் ஆளக்கானம். இருந்தாலும் துளசிமணிக்கு உள்ளுக்க எப்பவுமே பயம் இருந்துகிட்டே இருக்கும். வெளிய கெடந்த அம்மிக்கல்ல எடுத்துகிட்டு வந்து கதவுக்குப் பின்னால வச்சிகிட்டு, சாமத்துல படுக்கும்போது மரக்கதவுக்குப் பின்னால முட்டக்குடுத்துடுவா. ஒவ்வொரு சாமத்துல நல்லா தூங்கறப்போ மேக்கூரய யாரோ பிரிக்கறமாறி சத்தங்கேக்கும். அந்நாரத்துல என்னபண்றதுன்னு தெரியாம புள்ளைங்க ரெண்டையும் கட்டிப்புடிச்சிகிட்டு ரொம்ப நேரம் தூங்காம இருப்பா. காலைல எந்திரிச்சி கொட்டாய சுத்திச் சுத்திப் பாப்பா. வூட்டுக்குப் பின்னாடி வேலிவேலா மரமும், பூவரசு மரமும் வளந்து சாள மேல காத்துக்கு ஒரசிகிட்டு நிக்கறத பாத்து, நேரங்கெடக்கறப்பொ இத மொதல்ல வெட்டி சுத்தம்பண்ணோனுமுன்னு நெனப்பா.

நேத்துப் பொழுதோட களையெடுத்துட்டு வந்தவ பையன தொட்டல்ல உக்கார வெச்சி வவுத்துக்கிட்ட துணியச் சுத்திக்கட்டி மலர ஆட்டிக்கிட்டே வெளயாட்டுக்காட்டச் சொல்லீட்டு குளிக்கப் போனா. இருட்ட ஆரம்பிச்சிடிச்சி, வேல செஞ்சுட்டு வந்த அழுப்புக்கு எப்பவும் குளிச்சிடுவா. படல சாத்திகிட்டு நல்லா தேச்சி குளிச்சிகிட்டு இருக்க. ஏ… யாருப்பா அது, அங்கென்ன பண்ணற ன்னு சாமியப்பன் சத்தம் பெருசா கேக்க. ஒரு நிமிஷம் ஆடிப்போன துளசிமணி வெடுக்குனு பொடவய எடுத்து மேல சுத்திகிட்டு கீத்துப் படலப் பிரிச்சி எட்டிப்பாக்க, அங்க கண்ணு செவக்க செவக்க சடையன் படலுபக்கம் கிட்டயே நின்னுகிட்டிருக்கான். அந்த நேரத்துல சாமியப்பன் அங்க வருவாருன்னு சடையன் எதிர்பாக்கல. ஒரு நிமிஷம் சடையன் தெகச்சி நிக்க, இவன் அடிக்கடி இந்தப்பக்கம் வந்துட்டு இருக்கறத தெரிஞ்ச சாமியப்பன் இது தான் சாக்குன்னு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிக்க, வெடுக்குன்னு படலத்தொறந்து பாதிக்குளிச்சதோட வூட்டுக்குள்ள ஓடிப்போயிக் கதவ சாத்திக்கிட்டா. வெளிய குடிபோதயில இருந்த சடையன் சாமியப்பங்கிட்ட வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டான். என் சொந்தக்காரன் வூடு ஏன் வரக்கூடாதான்னு ஒன்னையே திரும்பத்திரும்ப பேசுனவன. இங்க பாரு உன்சொந்த பந்தத்தயெல்லாம் வெளிய வச்சிக்கோ. இனிமே என் தோட்டத்துப்பக்கம் வரக்கூடாதுன்னா கூடாது ஆமா பாத்துக்க ன்னு சொல்ல. சடையனோ தாடைய மெதுவா சொரிஞ்சிகிட்டே கதவயே வெரிச்சி பாத்தான். இதயெல்லாம் கதவு சந்துல இருந்து பாத்துகிட்டே இருந்தா துளசிமணி. சடையனோட பார்வ சாமியப்பனுக்கே கொஞ்சம் கலக்கத்த குடுத்துடுச்சி. கொஞ்ச நேரம் எதுவும் பேசாம சாமியப்பன் இடுப்புக்கு கையக்குடுத்தவாக்குலயே நின்னுகிட்டு இருந்தாப்டி. சடையன் அங்கிருந்து கெளம்புனவன், சாமியப்பனப் பாத்து, ஏங்கிட்ட வச்சிக்காத… உனக்கு நேரஞ்செரியில்ல ன்னு சொல்லிகிட்டே தடுமாறி தடுமாறி போய்ட்டான். வெளிய வந்த துளசிமணி சாமியப்பனப் பாத்து தேம்பித் தேம்பி அழுவ ஆரம்பிச்சிட்டா. சாமியப்பனுக்கோ என்ன சொல்றதுன்னே தெரியல. சேரி சேரி பயப்படாத ஒன்னுமாவாது, பத்தரமா இருன்னு சொல்லீட்டுப் போய்ட்டார். சாமம் பூரா அவுளுக்குத் தூக்கமே வரல. போதாக்கொறைக்கு மழையிம் வேற வுட்டு வுட்டு பேஞ்சிகிட்டே இருந்திச்சி. என்னேரந்தூங்குனான்னே தெரியில.

துளசிமணி ஒரு வழியா கெளம்பி ரப்பர் செருப்ப கால்ல தொட்டுகிட்டு ஆடு மேச்சிக்கிட்டு இருந்த நாச்சாயம்மாவக் கூப்புட்டு. அம்மோவ்.. பையன் தூங்கீட்டான், தா நா போனவுடன வந்தர்றேன்னு சொல்லீட்டு வெரசா தடத்துல போவ ஆரம்பிச்சா. பத்து நிமுசம் நடந்தவ வண்டித்தடத்துல இருந்து தண்டவாளத்துக்கு பிரியிற நடதடத்துல நடந்தா. அவ காலு தான் நடந்துச்சு ஒடம்பு மனசு பூரா புள்ளங்கக்கிட்டயே சுத்திகிட்டு இருக்குது. நடந்து நடந்து தண்டவாள பெருஞ்ஜல்லி மேட்டுல ஏறி ரெண்டு பக்கமும் பாத்துட்டு தண்டவாளத்த தாண்டத் தாண்ட செல்லதுரை நெனப்பு வந்து கண்ணெல்லாங் கதகதன்னு தண்ணி முட்டிக்கிட்டு வருது.

ஈரம் ஒடம்புக்கு ஏற தொட்டல்ல ஒன்னுக்கிருந்த சத்திவேலு விறு விறுப்புக்கு முழிச்சிக்கிட்டான். நய் நய்ன்னு அழுவுற சத்தங்கேட்டு உள்ர ஓடுன மலரு தொட்டலுக்கடிய ஒன்னுக்குமேல சாக்க இழுத்துவுட்டுட்டு, தொட்டல ஆட்டுனா. ஆட்டிக்கிட்டு இருக்கறப்போ மேல விட்டத்துல பூன விடாம சீறிக்கிட்டே இருக்க அன்னாந்து பாத்தா. அங்க பூனையத் தவர வேற எதோத் தெறிய உத்துப்பாத்தா, நல்லா வளந்த பாம்பு பனங்கையுக்கும் பனவோலைக்கும் நடுவ பாதி ஒடம்ப நெழிச்சி உள்ள தள்ளிக்கிட்டே பூனக்கிட்ட மல்லுகட்டிக்கிட்டு இருந்திச்சி. பாம்பப் பாத்த மலரு பதறியடுச்சுக்கிட்டு பையன தூக்க முடியாமத் தூக்க, பையன் காலு தொட்டல்ல மாட்டிக்கிச்சி.

உன்ன சீமயில கட்டிவந்து…

இங்கச் சீரழிய வேணுமுன்னு.

இந்த சிரிச்சமொகம் ஊருசனம்..

கண்ணு பட்டு போயிருச்சா.

முந்தியில சேத்து வச்ச…

ஆச முச்சூடும் தீருமுன்னே.

பொட்டழிஞ்சி பூவழிஞ்சி உன்ன…

முண்டச்சியா ஆரு வெச்சா.

மானமெல்லாந் தேடி நிக்க…

அந்த மாயவரும் கேக்கலியா.

இந்த கண்ணுக்குழி வத்தலயே…

எங்க பூமாத்தா பாக்கலியா.

 ..ன்னு நாச்சாயி வெச்ச ஒப்பேரி மனசுக்குள்ள ஓட, முந்தானில கண்ண தொடச்சிகிட்டே அந்தப்பக்கம் எறங்குனவ அப்பிடியே இட்டேரித் தடத்துல வளஞ்சி வளஞ்சி கள்ளிச்செடியும் எருக்கஞ்செடியும் வெளஞ்சிருக்கற தடத்துல படக்கு படக்குன்னு ரப்பரு செருப்பு சத்தத்தோட போனா.

 கீழ உழுந்து எந்திரிச்சி ரெண்டு இக்கத்துக்கு நடுவ கையக்குடுத்து பாதி தொங்குனாப்டி பையனத்தூக்கீட்டு வெளிய வந்த மலரு பையன வாசல்ல உக்கார வெச்சிட்டு நாச்சாயம்மாவக் கூப்புட ஓடுனா. பின்னாடி மரத்துவழியா ஏறுன பாம்பு திரும்பிப் போறதுக்கு வழிவுடாம பூனக் குறுக்காட்டிட்டு நிக்க, திரும்பி சாளைக்குள்ளயும் போவமுடியாம பனங்கையிலயும் ஏற முடியாம முக்காவாசி கீழத் தொங்கவும் மேல ஏறப்போனா பூன சீறவும் புடிமானம் இல்லாம கீழ பொத்துன்னு ட்ரங்குப் பொட்டி மேல உழுந்து சொழட்டி அடிச்சி பாத்தரத்து மேல உழுந்து உருட்டி புளி மொளகாப் பான சந்துல போயி பூந்துக்கிச்சி. வெளிய மலரு ஆயா ஆயான்னு கத்த, நாச்சாயி என்னமோ ஏதோன்னு வரப்புல ஓடியார, ஆயா பாம்பாயா... ஆயா பாம்பு ங்க. எங்கடீ பாத்த பையனெங்க ன்னு கேட்டுகிட்டே கொட்டாய் கிட்ட வந்துட்டா. ஆயா வூட்டுக்குள்ள பாம்பாயான்னு சொல்லிகிட்டே ரெண்டு பேரும் பையனப் பாக்க பாக்கவே அவன் தவந்து தவந்து நெலவுகாலத் தாண்டி ஊட்டுக்குள்ள போயிட்டான்.

துளசிமணி வேடப்பட்டி மினிப்பன் கோயிலு சந்துல நொழஞ்சி நாளு வூடு தாண்டி வாசல்ல ஒக்காந்துருந்த பொம்பளகிட்ட, அக்கா அண்ணெ கூலிகாசுக்கு வரச் சொல்லீர்ந்தாருக்கா வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன் ங்க. அண்ணெ எங்கிட்ட எதுவும் குடுக்குல துளசி, இரு பக்கத்துல தான் போயிருக்கறாரு வந்துருவாருன்னுட்டு. போன வருஷம் எம்ஜியாரு செத்த நாயாத்த எதுத்த வூட்டுக் கெழவிகிட்ட பேசிகிட்டிருந்தா. இவுளும் கொஞ்சந்தள்ளி தொவைக்கிற கல்லு மேல ஒக்காந்துகிட்டா. துளசிமணியால ஒக்காரவே முடியில, அடிவயிரெல்லா என்னமோ பண்ணுது. அந்தக்கா மூஞ்சிய மூஞ்சிய பாக்கறா.

மலரு ரெண்டு காலயும் மாத்தி மாத்தி குதிச்சிக்கிட்டு அழுவ, நாச்சாயிக்கு என்ன பண்றதுன்னு தெரியாம வெடவெடத்துப் போயிட்டா. சத்திவேலு, டே வாடா, கண்ணு இங்க வாடான்னு வாசல்ல நின்னுகிட்டு நாச்சாயி சத்தம் போட. உள்ள போன பையன் கண்டுக்கவேயில்ல. ஊட்டுக்குள்ள வெளிச்சம் வேற இல்ல, வாசக்காலு வெளிச்சத்துல பையன் காலு ரெண்டு மட்டுந்தேன் தெரியிது. நாச்சாயிக்கு உள்ற போறதுக்கு காலு நடுங்குது.

அக்கா நேரமாவுது உங்ககிட்ட இருந்தா குடுங்க, அப்பறம் அண்ண வந்தா வாங்கிக்கிங்கக்கா. புள்ளங்கள வேற தனியா வுட்டுட்டு வந்திருக்கங்க்கா ங்க. ஆமா அவுரு எங்கிட்ட குடுத்துட்டுத்தான் மறுவேல, அடி ஏண்டி நீ வேற. செத்த இரு வந்ருவாரு ங்க. துளசிமணி அந்த ரோட்டயே அடிக்கும் தலைக்கும் பாத்துகிட்டே இருக்கறா. மானம் வேற இருட்டிகிட்டே வருது.

மெல்ல பானசந்துல இருந்து வெளிய வந்தப் பாம்பு வெளிய போறதுக்கு வழியப் பாத்துகிட்டு இருந்துது. மெதுவா கதவுப்பக்கம் வந்த பாம்பு பையனும் கதவுப் பக்கம் தவுந்து வர சட்டுன்னு பின்னாடி நவுந்து செவுத்து ஓரத்துல சோத்தாங்கைப்பக்கத்துல இருந்து ஒரட்டங்கைப்பக்கம் போயி பாய் தலவாணிக்குப்  பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சி. அந்த ஒரு நொடி கதவு வெளிச்சத்துல பாம்பப் பாத்த நாச்சாயி, அய்யோ சாமி எவ்ளோ பெரிய பாம்புன்னு சொல்லிட்டே நடுநடுங்கிப் போய்ட்டா. நா என்னாத்தப் பண்ணுவேன், மலரு உள்ள கிள்ள போயிராதடீ, எட்ட பொயி பையன கூப்புட்டுக்கிட்டே இரு. நா போயி யாராவது ஆம்பளகள கூட்டியாரன்னு ஓட்ட ஓட்டமா ஓடுனா.

ஓட்டமும் நடையுமா கூலிக்காச கையில வாங்குன துளசி கோனாரு கடைக்குப் போயி ஒரு சீசாவுல சீமெண்ணெயும் கொஞ்ச சாமாணும் வாங்கிக்கிட்டு வெசயா வேடப்பட்டிய ஒட்டி ஆலமரத்துக்காட்டுக்கு வரப்பு வரப்பா தாண்டி வந்துக்கிட்டிருக்கறா. ஆலமரத்துக்காட்டத் தாண்டுனாத்தேன் இட்டேரி வரும். இட்டேரிக்கி அம்பதெட்டுத்தேன் பாக்கி, ஒரட்டாங்கைப் பக்கம் பெரிய ஆலமரத்த தாண்டரப்ப மரத்தடிய தலய வெச்சி யாரோ கால நீட்டிப் படுத்துருக்காங்க, காலு மட்டும் தெரியிது. கால்ல நுனிவளைஞ்ச தோலு செருப்பு. துளசிமணிக்கு அந்த செருப்ப எங்கயோ பாத்த நெனப்பு. கொஞ்ச மெதுவா ரப்பரு செருப்பு சத்தம் போடாதமாறி அந்த எடத்தத் தாண்டி மெதுவா திரும்பிப் பாத்தா. அது சடையனே தான்.

தம்பீ.. வாடா வெளிய, தம்பீ… வாடா வெளிய ன்னு மலரு வெளிய இருந்து கத்திக்கிட்டே அழுவுறா. அவன் இப்ப நடுவூட்டுல உக்காந்துகிட்டு கையத்தட்டிக்கிட்டு மலரப் பாத்து சிரிக்கிறான். ஆனா வெளிய வரமாட்டேங்கறான். ஆம்பளயால கூட்டியாரப் போன நாச்சாயிக் கூட தூரத்துல இன்னோரு பொம்பளயோட வரப்புல ஓடியாராங்க. தொண்டகட்ட கத்தறா மலரு. உள்ள இருந்த பாம்பு மறுபடியும் தலவாணிக்கடிய இருந்து வெளிய வருது.

 மொலங்கைய மூஞ்சிக்கி மறச்சி கால நீட்டி சாஞ்சி படுத்துருந்தான் சடையன். அடிவயித்துல இருந்து நெஞ்சுக்குழி வரைக்கும் மூச்சடச்ச மாறி ஆயிடிச்சி துளசிமணிக்கி. இப்ப முன்னயும் போவமுடியாம பின்னயும் போவமுடியாம காலு ரெண்டும் பிண்ணிகிட்டு வருது. ஆனா புள்ளங்க நெனப்பு அவளக் கேக்காமயே ஒடம்பு தன்னப்போல முன்ன இழுத்துக்கிட்டுப் போவுது. பொழுது சாயச் சாய மானமும் இருட்டிக்கிட்டே வருது. இட்டேரியத் தொட்டு மூச்ச அடக்கீட்டுப் போறா.

கூட்டியாந்த பொம்பளையும், நாச்சாயியும் சேந்து வாசலுக்கு நேரா நின்னுக்கிட்டு, கண்ணு.. சாமி வெளிய வந்துரு, அடே தம்பி வெளிய வந்த்ர்ரா. ஐய்யோ சாமி, புள்ளய காப்பாத்து. ஆத்தா மாரியாத்தா.. ஐயா கருப்பண்ண சாமி புள்ளய வெளிய கூட்டியாந்துருப்பா. அவிங்காயாள உனக்கு கோழியடிச்சி பொங்க வெக்கச்சொல்றனப்பான்னு கத்த. பாம்பு மெதுவா வளைஞ்சி வளைஞ்சி தலைய தூக்கி தூக்கிப் பாத்துகிட்டே பையனுக்கு பின்னாடி வருது.

 வளஞ்சு வளஞ்சு இட்டேரில போறவுளுக்கு திரும்பிப் பாக்க பயம். காவாசி தூரம் போனவ சரக்கு சரக்குன்னு சத்தங்கேட்டு நடந்துகிட்டே திரும்புனா, பத்தடி தூரத்துல சடையன் தள்ளாடிக்கிட்டே கைய காத்துல அலவீசி செடி கொடிய தள்ளிக்கிட்டு பேயாட்டம் வரான். துளசிமணி இன்னு முக்காவாசி இட்டேரிய தாண்டோனும். இவ வேகம் போவப் போவ சடையனும் அதுக்கு ஈடுகுடுத்து வர, துளசிமணியோட ரப்பர் செருப்பு வாரு புடிங்கிக்கிச்சு. குனிஞ்சி செருப்ப கையில எடுக்கக்கூட அவளுக்கு தெகிரியம் வல்ல, கால்ல இருந்த ரெண்டு செருப்பயும் ஒதரீட்டு வேகமெடுக்க, காலெல்லா நெரிஞ்சி முள்ளு அப்பிக்கிச்சி.

மண்டிபோட்டு தலய நீட்டி பையன் மலரப் பாக்க, பாம்பு படமெடுத்து நின்னுக்கிச்சி. வெளிய இருந்து இன்னு சத்தமா கத்தி எல்லாரும் பையனக்கூப்புட, பையன் மண்டிபோட ஒக்காரன்னு அசஞ்சிகிட்டே இருக்க பாம்பு படமெடுத்தவாக்குலயே கொஞ்ச கொஞ்சமா நவுந்து வருது. இப்ப பின்னாடி இருந்த பாம்பு நவுந்து வாசலுக்கு நேர் செவுத்துக்கிட்ட படமெடுத்துக்கிட்டு ஆடுது. பையன் ஒரட்டாங்கைப்பக்கம் மறவுக்குப் போயிட்டான். வாசல்ல நின்னுக்கிட்டிருந்த மூனுபேரும் நேருக்கு நேரா பெரிய பாம்பு படமெடுத்து ஆடரதப்பாத்ததும் நாளெட்டு பின்னாடி போயி நடுங்கறாங்க.

வெசயா நடந்த துளசிமணி இப்ப இட்டேரில ஓட ஆரம்பிக்கறா. பின்னாடியே சடையனும் தொரத்திக்கிட்டே வரான். இன்னு கொஞ்ச தூரம் ஓடுனா ரெயிலு தண்டவாளம் வந்துரும். அதத் தாண்டிட்டா எப்புடியாவுது தப்பிச்சிரலாமுனு ஒரு கையில சீசாவையும் இன்னோரு கையில சாமாணப் பையயும் தூக்கீட்டே ஓடறா. ஏய் நில்றீ… மரியாதயா நின்னுறு ன்னு கத்திகிட்டே இன்னங் கிட்ட வந்துட்டான்.

நேரா வாசலு காலியா இருக்கவும் பாம்பு வெளிய போவ நெளிஞ்சி பாதி தூரம் வர, இருட்டுக்காள இருந்து பையன் வாசலுக்கு குறுக்க வந்து கதவுல போயி சாஞ்சிகிட்டு கதவுக்கு முட்டக்குடுந்துருந்த உருல கல்ல கையில எடுத்து வெச்சி தரையில நங்கு நங்குனு கொட்ட, பாம்பு மறுபடியும் ரெண்டடி படமெடுத்தாப்டி பின்னாடி நவுர. பையன் பாம்பப் பாத்துட்டான். பாம்பப் பாத்தவன் அதைய புடிக்க முன்னாடி தவந்து போவ பாம்பு கோவத்துல பின்னாடி போயிகிட்டே படமெடுத்தபடி தலைய பின்னாடித் தூக்கி புஸ் புஸ்ஸுனு அவங்கிட்ட சீறிகிட்டு வர. காத்துக்கு கதவு மெதுவா ஆட ஆரம்பிக்கிது.

பெருவெரல்ல அடிபட்டு கால்ல ரெத்தம் ஒழுவ ஒழுவ ஓடி தண்டவாளத்துக்கிட்ட வந்துட்டா. சடையனுங் கிட்ட வந்துட்டான். துளசிமணிக்கு ஓடற வழுவு கொறஞ்சிக்கிட்டே வருது. பெருஞ்ஜல்லி மேட்டுக்கிட்ட வர வர ஒரட்டாங்க்கையி பக்கம் மொடக்குல சரக்கு ரெயிலு ஊஊஊ..ன்னு கத்திக்கிட்டே வெசயா வந்துகிட்டு இருக்கு. இப்ப தண்டவாளத்த தாண்டுலயினா… ஐயோ அவங்கையில சிக்கிக்குவமேன்னு உசுர கையில புடிச்சிக்கிட்டு ஓடறா.

எங்கிருந்தோ ஒடியாந்த மணி மலருகிட்ட வந்து வால வேகமா ஆட்டிக்கிட்டு, ஒரே கொஞ்சலும் சினுங்கலுமா அவ காலுக்கடிய தரைல படுத்துக்கிட்டு உருண்டு பொரல.

சட்டுன்னு திரும்பிப் பாத்த பையன் மணியப் பாத்ததும் குஷியில திரும்பி வாசலுக்கு நாய பாத்து கன்னக்குழியோட சிரிச்சிக்கிட்டே மட மடன்னு தவந்து வர வர பாம்பும் படமெடுதபடியே சீறிகிட்டு நடுப்பகுதியில நவுந்து பையன் காலுகிட்ட வருது. பையன் நெலவுகால தாண்டவும், மணி அவங்கிட்ட வாலாட்டிகிட்டே கிட்டபோகவும், பாம்பு அவங் காலப் பாத்து நெலவுகாலுகிட்ட தலைய எடுக்க, பெரிய காத்தோட மழபெய்ய ஆரம்பிக்கிது.

மூஞ்சீல காத்தும் மழயும் அடிக்க துளசிமணி ஜல்லிமேல ஏறி தண்டவாளத்த தாண்டப் போவவும் ரெயிலு கிட்ட வரவும் செரியா இருந்துச்சி. மூச்சப்புடிச்சிகிட்டு மொதத்தண்டவாளத்த தாண்ட, சடையனோ ரெயிலு தாண்டரதுக்கு முன்ன அவளப்புடிச்சிரனும்னு அவ தல முடியப் புடிக்க கைய நீட்டிக்கிட்டே கிட்ட ரெண்டாவது தண்டவாளத்த தாண்டப் போவ ரெயிலுக்கு ஒரு அடிக்கி முன்ன தாண்டிட்டா துளசிமணி. சடையனுக்கு நேரம் பத்தல.

மடேர்…ன்னு பெரிய சத்தம். காத்துக்கு மரக்கதவு நெலவுல அடிச்சி உள் தாழ் போட்டுக்கிச்சி. கதவுக்கும் நெலவுக்கும் நடுவுல பாம்புத் தல.


-ஆரன் 24.04.2021

1 comment:

  1. கதையின் பேச்சு வழக்கு நடையும் ,விறுவிறுப்பும் அருமை

    ReplyDelete